September 18, 2021

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு ஆபத்து : 11 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா!

இந்தியாவிலுள்ள் மாநிலங்களிலேயே ஆடு புலி ஆட்டம் அடிக்கடி நடந்து ஆட்சி மாற்றம் நடக்கும் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், மஜத கூட்டணி எம்எல்ஏ-க்கள் 11 பேர் அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷிடம் தங்களது ராஜிநாமா கடிதத்தை அளித்துள்ளனர்..ராஜினாமா கடிதம் ஏற்கப் பட்டால், ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அமெரிக்கா சென்றுள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி நாளை மறுநாள் கர்நாடகா திரும்பும் போது குமாரசாமி முன்னாள் முதல்வராக வாய்ப்பு அதிகம் என்று தகவல் வருகிறது.

கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 225 இடங்களில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத) கூட்டணி 117 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அங்கு காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி எம்எல்ஏ-க்கள் 11 பேர் சபாநாயகரிடம் தங்களது ராஜிநாமா கடிதத்தை அளித்தனர். முன்னதாக, சபாநாயகர் அவரது அலுவலகத்தில் இல்லாததால் எம்எல்ஏ-க்கள் சிறிது நேரம் காத்திருந்தனர். இதையடுத்து, சபாநாயகரின் வருகைக்குப் பிறகு 11 எம்எல்ஏ-க்களும் தங்களது ராஜிநாமா கடிதத்தை அவரிடம் அளித்ததாக தெரிகிறது.

இதுகுறித்து, கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார் கூறுகையில், “எனது மகளை அழைப்பதற்காக நான் வீட்டுக்குச் சென்றிருந்தேன். 11 உறுப்பினர்கள் ராஜிநாமா செய்துள்ளனர். ராஜிநாமா கடிதத்தை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். நாளை விடுமுறை என்பதால், அவர்களை திங்கள்கிழமை சந்திக்கிறேன்” என்றார்.

இதன்மூலம், தற்போது 106 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை இழந்துள்ளது. எனவே, கர்நாடகாவில் ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதே சமயம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா தற்போதைய அரசியல் நகர்வுகளின் எதிரொலியாக பா.ஜ.க. எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.கர்நாடக முதல்வர் குமாரசாமி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த அரசியல் நிகழ்வுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.