January 28, 2023

பெரும்பாலும் அமைதி தவழும் நம் தமிழக பூமியில் எப்போதாவது ரத்த ஆறு ஓடுவது உண்டுதான்.. எதோ ஒரு குக் கிராமத்தில் ஒரே ஒரு சொல்லால் விளைந்த களேபரங்களின் கணக்கு எண்ணிலடங்காது. அந்த வகையில் கடந்த, இருபத்தைந்து ஆண்டுகளில் சுமார் 37 மெகா கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. அது போன்ற கலவரங்கள் ஏற்படும் போதெல்லாம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் கமிஷன் ஒன்றை அமைத்து அப்போதைக்கு முடிவுக் கட்டியதாக முக்கியஸ்தர்கள் நினைத்துக் கொள்வதுமுண்டு. ஆனால் செல்போனில் அடங்கி விட்ட இப்போதைய ஹை டெக் உலகில் கூட இந்த சாதி என்பதுதான் சிம் கார்ட் .. இது இல்லாமல் எதுவுமே செயல்படாது என்றும் அப்போ என்ன நடந்துச்சு தெரியுமா? என்று பழைய சீழ் பிடித்த சில பல காயங்களை கீறிக் காட்டி உரத்தக் குரலில் அழுதபடி விவரிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. அப்படித்தான் மாவட்ட அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்ட போது தென் மாவட்டங்களில் நடந்த கலவர பின்னணியில் நடந்த சாதி வெறி ஆட்டத்தையும் அதிகார வர்க்கத்தின் போக்கையும் தன் பாணியில் சொல்லி இருக்கிறார் மாரி செல்வராஜ்.. !

இப்படத்தின் கதை என்னவென்றால் தென் தமிழ்நாட்டில் உள்ள இரண்டு கிராமங்கள்.. அதில் நிலவும் ஏற்றத் தாழ்வு சூழலால் ஒரு கிராமத்திற்கு பேருந்து இயக்கப்படுவதில்லை.. ஒரு கட்டத்தில் கர்ப்பிணி பெண்ணை ஏற்றிச் செல்ல மறுத்து விட்டு போன, பேருந்து தாக்கப்படுகிறது. அந்தத் தாக்குதல் பூதாகரமாகி அரசு நிர்வாகிகளுக்கும் கிராம மக்களுமான மோதலாகி என்னவாக முடிகிறது என்பதை ரத்தமும், சதையும், குரோதமும், கோபமுமாகச் சொல்லி இருக்கிறார்கள்.

தனுஷ்.. பிரமாதமாக நடித்திருக்கிறார் என்று சிம்பிளாக சொல்ல முடியாது.. வாழ்ந்திருக்கிறார்.. தான் செய்யும் ரோலின் பின்னணியை ஆழமாக புரிந்து மிக அழகாக தன்னை வடிவமைத்துக் கொள்ளும் தனுஷ் பாணியை இங்குள்ள நடிகர்களுக்கு பாடமாக வைக்க வேண்டும். அவ்வளவு நேர்த்தி, தனுசுக்கு துணையாக ஏமராஜாவாக வரும் லால் ரோல் வாவ் சொல்ல வைக்கிறது. யோகி பாபு ,கெளரி கிஷன், பூ ராம், ஜி.எம்.குமார், சண்முகராஜன், சுபத்ரா, அழகம்பெருமாள் என படத்தில் நடித்த அனைவரும் கிராமத்து மக்களாகவே மாறி அசத்துகிறார்கள். ரஜிஷா விஜயன், கௌரி, லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி உள்ளிட்டோர் இக்கதைக்கு சரியான பங்களிப்பை கொடுக்கிறார்கள்.

தொடக்கத்தில் இருந்தே கிராமங்களை தன் கண்களில் கொண்டுள்ள தேனி ஈஸ்வரின் கேமரா வழியே சினிமாவையும் தாண்டிய காட்சிகள் ஏகப்பட்டவை தென்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையால் இந்த கர்ணன் கம்பீரமாவது தனிக் கதை.

கிடைத்த இரண்டாம் படத்திலும் தான் சொல்ல நினைத்த விவகாரங்களை முன்னரே குறிப்பிட்டது போல் ஒவ்வொரு ப்ரேமிலும் ஊடுருவிச் சொல்லி இருக்கிறார் மாரி செல்வராஜ். ஆனால் எடுத்துக் கொண்ட கதை களம் கொடியங்குளம் கலவரம் என்பதைத் தாண்டியது என்று சொல்ல முயன்றிருப்பதுதான் ஆயாசத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் பள்ளிகளில் சாதி குறியீடே வேண்டாமென்று ஒரு சாரார் சொல்லி அதற்கான சட்ட நடவடிக்கை எல்லாம் எடுத்து அமலாகி இருக்கும் இக்காலக் கட்டத்தில் இப்படத்தின் மூலம் கள்ளிச்செடி விதைகளை தூவி இருப்பதும் வருத்தத்தைத் தருகிறது.

ஆனாலும் ஒரு முழுமையான கிராம அதுவும் ஜாதி ரீதியான வன்மம் நிறைந்த கதையில் யார் தரப்பும் நேரடியாக பாதிப்படையாமல்  முழு நீள சினிமா ஒன்றை கொடுத்திருக்கும் பாணியைப் பாராட்டியே ஆக வேண்டும். குறிப்பாக மகாபாரதத்தில் வரும் கர்ணன் ரோலில் தனுஷையும், திரெளபதி என்ற பெயரில் காதலியையும் துரியோதன் என்ற நாம கரணத்தில் ஊர் பெரிசையும் அபிமன்யு, கண்ணபிரான் என்பவன் வில்லன் என்றெல்லாம் கேஷூவலாக சொல்ல தெரிந்தவர் இவ்வளவு வன்முறையை அள்ளித் தெளிக்காமலும் போயிருக்கலாம்

மொத்தத்தில் கர்ணன் – கவனிக்கத்தக்கவன்

மார்க் 3.75/5