October 17, 2021

கார்கில் நினைவு தினம்!

இமயமலையில் உள்ள கார்கில் பனிசிகரத்தை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கடந்த 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் போர் தொடுத்தது. இதை கொஞ்சமும் தயங்காமல் நம் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலின் காரணமாக பாகிஸ்தான் படைகள் பின்வாங்கி சென்றன. அந்த போரில் நம் வீரர்கள் உயிரிழந்ததையும், இந்திய ராணுவம் வெற்றி பெற்றதன் நினைவாகவும் ஒவ்வொரு ஆண்டும் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி 17-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது. இதையொட்டி காஷ்மீரில் இருக்கும் கார்கில் போர் நினைவிடத்தில் பலரும் உயிரிழந்த நம் நாட்டின் ராணுவ வீரர்களுக்காக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் மற்றும் முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.

kargil jy 26

அது சரி கார்கில் போர் பற்றி முழுமையான தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?.

கார்கில் போர் பிரச்சனை, 1999இல் மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில், நடந்த போராகும். இந்த போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் நடந்தது. கார்கிலை மீட்க இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையான விஜய் நடவடிக்கை என்ற பெயரிலும் இது வழங்கப்படுகிறது.

மே 1999இல் பாகிஸ்தான் இராணுவமும் காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து கட்டுப்பாடுக் கோடைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்ததே போருக்கு முக்கிய காரணமாகும். போரின் ஆரம்பத்தில் பாகிஸ்தான், பழியை முற்றிலுமாக காஷ்மீரி போராளிகள் மீது சுமத்தியது. ஆனால், உயிரிழந்த வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலமாகவும், போருக்குப்பின் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆகியோர் விடுத்த அறிக்கைகள் மூலமாகவும், பாகிஸ்தான் துணை இராணுவப் படையினர், தளபதி அஷ்ரஃப் ரஷீத் தலைமையில் போரில் ஈடுபட்டிருந்தது உறுதியானது.

இந்திய வான்படையின் துணையோடு, இந்தியத் தரைப்படை, பாகிஸ்தான் இராணுவம் மற்றும் போரளிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதிகளை மீட்டது. சர்வதேச நாடுகள் பாகிஸ்தானின் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பாகிஸ்தான் படைகள் இந்தியாவுடனான போரைக் கைவிட்டன.

இப்போரானது, மிக உயர்ந்த மலைத்தொடரில் மிகுந்த சவால்களை எதிர்கொண்டு நடந்த போருக்கு சிறந்த உதாரணமாகும். இதுவரை இந்த போர் மட்டுமே, அணு ஆயுத சக்தியுடைய நாடுகள் இரண்டுக்கிடையில் நடந்த நேரடிப் போராகும். இந்தியா முதன்முறையாக 1974 இல் வெற்றிகரமாக அணு ஆயுதச் சோதனை நிகழ்த்தியது. பாகிஸ்தானும் இரகசியமாக அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும், 1998 ஆம் ஆண்டு இந்தியா நிகழ்த்திய இரண்டாவது அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு இரண்டு வாரங்கள் கழித்தே பாகிஸ்தான் தனது முதல் அணு ஆயுதச் சோதனையை நிகழ்த்தியது.

அமைவிடம்

1947 ஆம் ஆண்டு நடந்த இந்திய பிரிவினைக்கு முன், கார்கில் பகுதி லடாக்கின் பல்திஸ்தான் மாவட்டத்தோடு இணைந்திருந்தது. உலகின் பல உயர்ந்த மலைகளைக் கொண்ட கார்கில் பகுதி, பல இன, மொழி மற்றும் சமய வேறுபாடுடைய மக்களைக் கொண்டது. முதல் காஷ்மீர் போருக்குப் பின் (1947 – 1948) வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கோட்டின் படி, கார்கில் நகரம் இந்திய மாநிலமான ஜம்மூ காஷ்மீரின் லடாக் பகுதியுடன் இணைக்கப்பட்டது.

இந்திய-பாகிஸ்தான் போரில் (1971) பாகிஸ்தானின் தோல்விக்குப் பின் இந்தியாவும் பாகிஸ்தனும் செய்துகொண்ட சிம்லா உடன்படிக்கையில், இரு நாடுகளும் கட்டுப்பாட்டு எல்லையைத் தாண்டி இராணுவ மோதல்களில் ஈடுபடக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

போர் நடைபெற்ற கார்கிலின் அமைவிடம்

ஸ்ரீநகரில் இருந்து 205 கி.மீ. (127 மைல்) தொலைவில், இந்தியாவிற்குட்பட்ட பகுதிகளின் வடக்கு எல்லையில் உள்ளது. இமய மலைகளுக்கு அருகில் அமைந்துள்ளதால் மிதமான வானிலை கொண்டதாக கார்கில் விளங்குகிறது. கோடை காலங்கள் குளுமையாகவும்; குளிர்காலங்கள் நீண்டதாகவும், மிகவும் குறைந்த வெப்பநிலை (-48 °C வரை) கொண்டதாகவும் இருக்கும். ஸ்ரீநகரையும் லேவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையான NH-1D, கார்கில் வழியாக செல்கிறது. ஊடுருவல் நடந்தது இந்த சாலைக்கு சிறிது தொலைவில் இருக்கும் முகடுகளில்தான். இப்பகுதியல் உள்ள இராணுவ கண்காணிப்புத் தளங்கள் தரைமட்டத்தில் இருந்து சுமார் 5000 மீட்டர் (16,000 அடி) உயரத்தில் அமைந்துள்ளன.மாவட்டத் தலைநகரைத் தவிர முஷ்கோ பள்ளத்தாக்கு, திரஸ் எனும் நகரம், படாலிக் பகுதி, கார்கிலின் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் மக்கள் வசிக்கின்றனர்.

கார்கில் நகரம் ஊடுருவப்பட்டதற்கு முக்கிய காரணம், அதன் அருகில் இருந்த காலியான இராணுவ கண்காணிப்புத் தளங்களாகும். இதுபோன்ற இடங்களில், மலை முகடுகளின் உச்சியில் தற்காப்பு நிலைகள் ஏற்படுத்தப்பட்டால், அது கோட்டையை போன்ற பாதுகாப்பைத் தரும். உயரத்தில் இருக்கும் இராணுவத்தை எதிர்த்துப் போரிடும் படையினருக்கு பன்மடங்கு அதிக பலம் தேவைப்படும் என்பதைத் தவிர நடுங்க வைக்கும் குளிரையும் அப்படையினர் தாக்குப்பிடித்தாக வேண்டும்.

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்கார்டூ எனும் நகரம் கார்கிலில் இருந்து 173 கி.மீ (107 மைல்) தொலைவில்தான் உள்ளது. அந்நகரம் பாகிஸ்தான் படையினருக்கு, தாக்குதலின் போது தேவையான ஆயுதங்கள் மற்றும் பிற தளவாடங்களை விநியோகிக்கக்கூடியதாக அமைந்தது.

kargil-war-newsx-things-you-should-know

பின்புலம்

1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பின் இரு நாடுகளுக்கிடையே பெரும்பாலும் அமைதியே நிலவியது. ஆனால் சியாசென் பனிமலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இரு நாடுகளும் செய்த முயற்சிகளும் அதன் காரணமாக அமைக்கப்பட்ட இராணுவ கண்காணிப்பு நிலைகளும், சிறிய அளவில் மோதல்கள் ஏற்பட காரணமாக அமைந்தது. காஷ்மீரில் 1990 களில் பாகிஸ்தான் ஆதரவுடன் நடந்த பிரிவினைவாத மோதல்களும், இரு நாடுகளும் 1998 இல் மேற்கொண்ட அணு ஆயுத சோதனைகளும், பதற்றம் அதிகரிக்கக் காரணமாயின. பதற்றத்தைத் தணிக்கவும், காஷ்மீர் மோதல்களை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளவும் இரு நாடுகளும் பிப்ரவரி 1999 இல், லாகூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த பாகிஸ்தான் இராணுவத்தின் சில பிரிவுகளும் பாகிஸ்தான் துணை இராணுவப் படையினரும் முஜாஹிதீன் போராளிகளைப்போல இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிக்குள் 1998-1999 களில் ஊடுருவத் தொடங்கினர். இந்த ஊடுருவல் பத்ர் நடவடிக்கை என்ற குறியீட்டுப் பெயரால் அறியப்பட்டது. காஷ்மீருக்கும் லடாக்குக்கும் உள்ள இணைப்பைத் துண்டிப்பதும்; சியாசென் பனிமலையில் இருக்கும் இந்தியப் படையினரைப் பின் வாங்க வைத்து காஷ்மீர் எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்தியாவை நிர்பந்திப்பதும் இதன் முக்கிய நோக்கங்களாகக் கருதப்படுகின்றன. காஷ்மீர் பகுதியில் பதற்றம் அதிகரித்தால் சர்வதேச நாடுகள் தலையிடும் என்றும் அதன் மூலம் காஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் முடிவு காண முடியும் என்றும் பாகிஸ்தான் நம்பியது.

இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் நடந்து வரும் கிளர்ச்சியையும் இதன்மூலம் பெரிதாக்க முடியும் என்பதும் இதன் ஒரு முக்கிய இலக்காக இருந்திருக்கலாம்.பாகிஸ்தான் இராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் சாகித் அஸிஸ் மற்றும் ஐ.எஸ்.ஐ யின் கூற்றுகளால் ஊடுருவலில் முஜாகிதீன் ஈடுபடவில்லை என்பதும், ஊடுருவியதும் கார்கில் போரில் ஈடுபட்டதும் பாகிஸ்தான் படையினர்தான் என்பதும் புலனாகிறது. இந்த நடவடிக்கை, இந்தியாவின் மேக்தூத் நடவடிக்கைக்குப் பாகிஸ்தானின் பதிலடி என்றும் நம்பப்படுகிறது.

இந்தியாவின் அப்போதைய தரைப்படைத் தளபதியான வேத் பிரகாஷ் மாலிக் மற்றும் பலர், இந்த ஊடுருவல் பாகிஸ்தான் இராணுவத்தால் பல காலமாகத் திட்டமிடப்பட்டது என்று கருதுகின்றனர். பல முறை பாகிஸ்தான் இராணுவம் இத்திடத்தை செயல்படுத்தப் பாகிஸ்தான் தலைவர்களிடம் (சியா உல் ஹக் மற்றும் பெனசீர் பூட்டோ) அனுமதி கேட்டும், இது பெரும் போருக்கு வித்திடக்கூடும் என்ற அச்சத்தால் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

பர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தான் இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டதும் தாக்குதலுக்கானத் திட்டங்கள் மீண்டும் வகுக்கப்பட்டன. போருக்குப் பின் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், தனக்குத் தாக்குதல் திட்டங்கள் குறித்து எவ்விதத் தகவல்களும் தெரியாது என்றும் இந்தியப் பிரதமராக விளங்கிய அடல் பிகாரி வாஜ்பாய் தொலைப்பேசியில் அழைத்து எல்லை நிலவரம் குறித்துப் பேசிய பின்னர்தான் தனக்குத் தாக்குதல் பற்றித் தெரியும் என்றும் கூறியுள்ளார். ஷெரீஃப், இத்தாக்குதலுக்கு முழு காரணம், பாகிஸ்தான் இராணுவத் தளபதியாக விளங்கிய பர்வேஸ் முஷாரஃபும் அவரது கூட்டாளிகளான சில தளபதிகளும்தான் என்று கூறியுள்ளார். ஆனால் தாக்குதல் திட்டம் குறித்து நவாஸ் ஷெரீஃபுக்கு, வாஜ்பாய் பிப்ரவரி 20 அன்று லாகூர் வருவதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டது என்று பர்வேஸ் முஷாரஃப் கூறியுள்ளார்.

போரின் போக்கு

மோதல் சம்பவங்கள்(1999)

மே 3- கார்கிலில் பாகிஸ்தான் ஊடுருவியிருப்பது அங்குள்ள மேய்ப்பர்கள் மூலம் அறியப்பட்டது

மே 5- இந்திய இராணுவம் கார்கில் பகுதிக்கு ரோந்துக் குழுவை அனுப்பியது; பாகிஸ்தான் வீரர்கள், ஐந்து இந்திய வீரர்களைச் சிறைபிடித்து சித்திரவதை செய்து கொன்றனர்.

மே 9- பாகிஸ்தான் குண்டு வீச்சில் கார்கிலில் இருந்த ஆயுதக் கிடங்கு சேதம் அடைந்தது

மே 10- திரஸ், கக்சர் மற்றும் முஷ்கோ பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் ஊடுருவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
மே மாத மத்தியில் இந்திய இராணுவம் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து படைகளை கார்கில் பகுதிக்கு அனுப்பியது

மே 26 – ஊடுருவியவர்களுக்கெதிரான வான்வழித் தாக்குதலை இந்திய வான்படைத் தொடங்கியது

மே 27- இந்திய வான்படை மிக்-21 மற்றும் மிக்-27 ஆகிய இரண்டு போர் விமானங்களை இழந்தது; வான்படைலெப்டினன்ட் நசிகேதாவை பாகிஸ்தான் வீரர்கள் போர் கைதியாகப் பிடித்துச் சென்றனர்

மே 28 – இந்திய வான்படையின் எம்.ஐ-17 என்ற போர் விமானம் பாகிஸ்தான் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது; அதனுள் இருந்த நான்கு வீரர்களும் உயிரிழந்தனர்

ஜூன் 1- பாகிஸ்தான் தனது தாக்குதலை பலப்படுத்தியது; இந்தியாவின் NH 1A தேசிய நெடுஞ்சாலை குண்டுவீசித் தாக்கப்பட்டது

ஜூன் 5- ஊடுருவலில் பாகிஸ்தான் சம்பந்தப்பட்டிருப்பது, இறந்துபோன பாகிஸ்தான் விரர்களிடமிருந்து இந்திய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் உறுதியானது

ஜூன் 6- இந்திய இராணுவம் கார்கிலில் பெரும் தாக்குதலைத் தொடங்கியது

ஜூன் 9- படாலிக் பகுதியில் இரு முக்கிய நிலைகளை இந்திய இராணுவம் கைப்பற்றியது

ஜூன் 11- சீனா சென்றிருந்த பாகிஸ்தான் இராணுவ தளபதி பர்வேஸ் முஷாரஃபுக்கும் ராவல்பிண்டியில் இருந்த பாகிஸ்தானின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அஸிஸ் கானுக்கும் நடந்த உரையாடலை இந்தியா இடைமறித்து, ஊடுருவலில் பாகிஸ்தான் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்தது

ஜூன் 13- இந்திய இராணுவம், திரஸிலுள்ள தோலோலிங் பகுதியைக் கைப்பற்றியது

ஜூன் 15- அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கார்கிலில் இருந்து படைகளைத் திரும்பப்பெறுமாறு வலியுருத்தினார்

ஜூன் 29- இந்திய இராணுவம், இரண்டு முக்கிய நிலைகளான புள்ளி 5060 மற்றும் புள்ளி 5100 ஆகியவற்றைக் கைப்பற்றியது

ஜூன் 2- இந்திய இராணுவம் கார்கிலில் மும்முனைத் தாக்குதலைத் தொடங்கியது

ஜூன் 4- இந்திய இராணுவம் பதினோரு மணிநேரப் போராட்டத்திற்குப்பின் டைகர் ஹில் பகுதியை மீட்டது

ஜூன் 5- இந்திய இராணுவம் திரஸ் பகுதியை முழுமையாக மீட்டது. கிளின்டனுடனான சந்திப்பைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் படைகளைத் திரும்பப்பெற ஒப்புக்கொண்டார்

ஜூன் 7- இந்திய இராணுவம் படாலிக் பகுதியிலுள்ள ஜுபார் என்ற இடத்தைக் கைப்பற்றியது

ஜூன் 11 – பாகிஸ்தான் இராணுவம் கார்கிலில் இருந்துத் திரும்பத் தொடங்கியது; இந்திய இராணுவம் படாலிக் பகுதியில் முக்கிய முகடுகளைக் கைப்பற்றியது

ஜூன் 14- இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், விஜய் நடவடிக்கை வெற்றி அடைந்ததாக அறிவித்தார்; பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர இந்திய அரசு பல நிபந்தனைகளை முன்வைத்தது

ஜூன் 26- கார்கில் பிரச்சனை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியவர்கள் கார்கிலில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டதாக இந்திய இராணுவம் அறிவித்தது.