December 6, 2022

கபில் சிபல் காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார்!

காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ள கபில் சிபல், ராஜ்யசபை தேர்தலில் போட்டியிட சமாஜ்வாதி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பின்னர் அவர் கூறுகையில், காங்கிரசில் இருந்து விலகுவதாக கடந்த 16ம் தேதி கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.

 அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் ஒருவருக்குப் பின் ஒருவராக காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி வரும் நிலையில், பிரபல வழக்கறிஞர் கபில் சிபல் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். மே 16-ஆம் தேதியன்று காங்கிரஸ் தலைமைக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

பார்லிமெண்ட் தேர்தல் தோல்வி காரணமாக ராகுல், பதவி விலகியதை தொடர்ந்து இடைக்கால தலைவராக சோனியா செயல்பட்டு வருகிறார். இதனை தொடர்ந்து, கட்சிக்கு நிரந்தர தலைமை தேவை என்றும் கட்சி நிர்வாகத்தில் சீர்திருத்தம் தேவை என்றும் சோனியாவுக்கு, 23 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதியிருந்தனர். அதில், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த தலைவருமான கபில் சிபலும் ஒருவர் ஆவார். அதிருப்தியில் இருந்த அவரை, கட்சி மேலிடம் ஒதுக்கி வைத்திருந்தது. அவ்வபோது, கட்சியின் நடவடிக்கைகளை கபில் சிபல் விமர்சித்து வந்தார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபை எம்.பி., பதவிக்கு நடக்கும் தேர்தலில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட கபில் சிபல் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உடன் இருந்தார்.

அகிலேஷ் யாதவ் மற்றும் ஷிவ்பால் யாதவ் இடையே மோதல் ஏற்பட்டபோது, கபில் சிபல் அகிலேஷ் யாதவின் வழக்கறிஞராக செயல்பட்டார். தேர்தல் ஆணையத்தில் அகிலேஷ் யாதவ்தான் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் எனவும் சைக்கிள் சின்னம் அகிலேஷ் யாதவுக்கே என கபில் சிபல் வெற்றிகரமாக வாதாடினார். தேர்தல் ஆணையத்தின் முடிவை தொடர்ந்து, தனது தந்தையின் சகோதரான சிவபால் யாதவை ஓரம்கட்டி அகிலேஷ் யாதவ் முழுவதுமாக சமாஜ்வாதி கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ஆசாம் கானுக்கும் வழக்கறிஞராக கபில் சிபல் செயல்பட்டு வருகிறார் என்பதெல்லாம் குரிப்பிடத்தக்கது.