காந்தாரா விமர்சனம்!

காந்தாரா விமர்சனம்!

ரண்டு வாரத்திற்கு முன்பு உலகமே பொன்னின் செல்வன் திரைப்படத்தை கொண்டாடி கொண்டிருந்த நேரத்தில். கன்னட திரையுலகம் மட்டும் தனியாக ஒரு திரைப்படத்தை கொண்டாடி கொண்டிருந்தது. பெரும்பாலும் முதல் நான்கு நாட்களுக்கு பல திரையரங்குகளில் டிக்கெட் தட்டுப்பாடும் ஏற்பட்டது. பிறமொழி மக்களையும் கன்னட சினிமாவை நோக்கி ஈர்க்க வைத்த அந்த படத்தின் பெயர் ரிஷப் செட்டியின் காந்தாரா.

பிறமொழி மக்களின் ஆசைக்கிணங்க இரண்டு வாரத்திற்குள் படத்தை அனைத்து மொழிகளிலும் டப் செய்து தங்களின் கலாச்சாரத்தை உலகறிய வைத்துள்ளார் படத்தின் இயக்குனரும் நடிகருமான ரிஷப். கேஜிஎப் படத்தை தயாரித்த ஹாம்பாலே பிலிம்ஸ் படத்தை தயாரித்துள்ளது. காந்தாரா என்றால் கன்னடத்தில் காடு. காடுகளில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கும் அங்கிருக்கும் ஆதிக்க மனிதர்களுக்கும் நடக்கும் நில பிரச்சனையே இந்த படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. பழங்காலத்து கதையாக இருந்தாலும் தனது திரைக்கதை மற்றும் காட்சிகளை வெளிப்படுத்தும் முறையில் தனது முழு திறமையை காட்டி வெற்றி பெற்றிருக்கிறார் ரிஷப்.

18ம் நூற்றாண்டின் இறுதியில் கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஆண்ட ஒரு அரசன் நிம்மதி இழந்து தவிக்கிறார். நிம்மதியை தேடி புறப்படுகிறார். அப்போது மலை கிராம பகுதி ஒன்றில் மக்கள் வழிபடும் கற் சிலை ஒன்றை பார்த்ததும் மகிழ்ச்சி அடைகிறார். அந்த கற் சிலையை தனக்குத் தரும்படி கேட்கிறார். சாமியாடியாக இருக்கும் அந்த கிராமத்துவாசி ஒருவர் சத்தமாகக் கத்தி, அந்த கத்தல் ஒலி கேட்ட வரையிலான அரசரின் நிலங்களை கிராமத்து மக்களுக்கு தந்தால் கற் சிலையை எடுத்து கொண்டு போகலாம் என்கிறார். அரசரும் சரி என்று கூறி எடுத்து கொண்டு செல்கிறார் என்ற ஆரம்ப காட்சி மூலம் நம்மை திரைக்குள் இழுக்கிறது காந்தாரா.

கடற்கரை கர்நாடகா பகுதி, உடுப்பி பக்கம் உள்ள மலை கிராம மக்களின் வாழ்க்கை முறை, அவர்கள் வணங்கும் நாட்டார் தெய்வம் பஞ்சூரிலி , கோலா திருவிழா, கம்பளா ரேஸ் என அந்த பகுதிக்கே நம்மை அழைத்த சென்றது போல அவ்வளவு இயல்பாய் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ரிஷாப். அவருக்கு பக்கபலமாக ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ் காஷ்யப், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், படத் தொகுப்பாளர் பிரகாஷ் என அனைவரும் தங்களின் உழைப்பை எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல் அள்ளி கொடுத்திருக்கிறார்கள்.

ஆக்சன் காட்சிகள் பல இடங்களில் ரசிக்க வைத்தாலும் அளவுக்கு மீறும்போது ரசிகர்களை சலிக்க வைக்கிறது. கன்னடம் மற்றும் துளு மொழி பேசும் மக்களின் நாட்டார் தெய்வத்தின் சிறப்பை திறம்பட காட்டி இருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் டப்பிங்கில் கடவுள் பேசும் மொழியான துழுவை தமிழில் சப்டைட்டில் போட்டது சிறப்பு. இருந்தும் பலருக்கு புரியவில்லை.

சமீபத்தில் கே ஜி எஃப் ,சார்லி 777 போன்ற படங்கள் உலக அளவில் கன்னட சினிமாவை பற்றி பேச வைத்து வருகிறது அந்த வரிசையுடன் காந்தாராவும் சேர்கிறது என்று தான் சொல்லியாக வேண்டும். குறைந்த பட்ஜெட்டில் சிறந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். இம்மண்ணோடும் மக்களோடும் கலாச்சாரத்தோடும் இணைந்த பல நாட்டார் தெய்வத்தை திரையில் காட்டி சினிமாவிற்கு புதிய ஆரம்ப புள்ளியை வைத்துள்ளார் ரிஷப்.

மொத்தத்தில் காந்தாரா – தரிசிக்கலாம்

குட்டி ஜப்பான் பாரத் (பரத் குமார்)

error: Content is protected !!