September 17, 2021

அவர்தான் காமராஜர் ! _ கொஞ்சூண்டு நினைவலைகள்!

காமராஜர் சேரன்மாதேவியில் சுற்றுப்பயணம் சென்ற போது சாலை ஓரம் மாடுமேய்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனை பார்த்து காரை நிறுத்த சொன்னார்.. இறங்கி அந்த பையனிடம் சென்று “ஏம்பா பள்ளிக்கூடம் போகாம மாடு மேய்க்கிறியே..” என்று கேட்டார்.. அந்த சிறுவன் “பள்ளிக்கூடம் போனா சோறு யாரு போடுவாங்க.. மாடு மெய்ச்சாதான் சோறு” என்றானாம்… “சோறுபோட்டா பள்ளிக்கூடம் போவியா…” என்றிருக்கிறார்… “ஓ .. போவேனே..” என்றானாம்… சென்னை திரும்பியதும் பொதுக்கல்வி இயக்குனராக இருந்த திரு என் டி சுந்தரவடிவேல் அவர்களை அழைத்து பள்ளிக்கூடத்தில் மதியம் சாப்பாடு போடுவதற்கு ஒரு திட்டம் கேட்டிருக்கிறார்… ஒரு குழந்தைக்கு இரண்டு அனா செலவில் என் டி சுந்தரவடிவேல் அவர்கள் ஒரு திட்டத்தை வரையறை செய்து கொடுத்தாராம்.. அதுதான் மதியஉணவு திட்டம்…!

kamara jy 15

அவர்தான் காமராஜர்..!!!

ஒருமுறை திருநெல்வேலியில் சுற்றுப்பயணம் செய்தபோது ஒரு ரெயில்வே கிராசிங்கை சென்றடைந்தது முதல்வர் காமராஜரின் வாகனம்… சற்று நேரத்தில் ரயில் கடக்கவேண்டியதாகையால் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது…. ஒரு அதிகாரி வேகமாக கேட் கீப்பரிடம் போய் முதல்வர் வாகனம் வருகிறது.. கேட்டை திறந்துவிடு என்று சொன்னார்..

இதை கவனித்த காமராஜர்.. அந்த அதிகாரியை கூப்பிட்டு… “ஏன்யா… நான் ரயில்ல அடிபட்டு சாகனுமா…. ரயில் வரப்போ அதுல யாரும் மாட்டிக்க கூடாதுன்னுதானே ஒரு கேட்டும் போட்டு அதுக்கு ஒரு ஆளும் போட்டிருக்கோம்… அப்புறம் ரயில் வர நேரத்துல நீ கேட்ட தொறக்க சொன்னா என்ன அர்த்தம்னேன்..” என்று கேட்டாராம்… ரயில் கடந்ததும் காரில் இருந்து இறங்கி அந்த கேட்கீப்பரிடம் செல்ல.. அந்த கேட்கீப்பர் வெலவெலத்துப்போனாராம் .. நீ செஞ்சதுதான் சரின்னேன்… இந்த இடத்துக்கு நீதான் எஜமான்… உன் வேலைய நீ கரெக்டா தான் பன்னேன்னேன்..” என்றாராம்…

அவர்தான் காமராஜர்…!!!

1967 ல் தேர்தலில் திமுக வை சேர்ந்த சீனிவாசன் என்ற வேட்பாளரிடம் வெற்றிவாய்ப்பை இழந்த காமராஜர் வீட்டில் அமர்ந்திருந்தாராம்.. காங்கிரஸ் தொண்டர்கள் அவரை சந்தித்து வருத்தத்தை தெரிவித்தார்களாம்.. அப்போது காமராஜர் சொன்னாராம்… இதுக்குத்தானய்யா சுதந்திரம் வாங்கினோம்னேன் .. ஜனநாயகம் கொண்டு வந்தோம்னேன் .. அப்புறம் ஏன்யா வருத்தப்படனும்?? நான் தோத்துப் போனதுலையே தெரியுதுல்ல.. நாம தேர்தல ஒழுங்கா நடத்தி இருக்கோம்னு.. அப்புறம் ஏன் வருத்தப்படனும்னேன்…”

அவர்தான் காமராஜர்..!!!.

திண்டுக்கல் நகரத்தில் இருந்து உள்ளடங்கிய பகுதியில் ஒரு பஞ்சு மில் திறக்க அனுமதியளைத்தாராம் காமராஜர்.. அவ்வளவு தூரம் உள்ளடங்கி இருக்குங்கைய்யா… அதுக்கு அனுமதி கொடுக்க சொல்றீங்களே.. என அதிகாரி ஒருவர் கேட்டாராம்… அதெல்லாம் நான் பேசிட்டேன்… திண்டுக்கல் ல இருந்து அவன் செலவுலேயே கரெண்டு எடுத்துக்கிறேன்னு சொல்றான்.. அந்த வழில இருக்க அறுபது கிராமத்துக்கும் கரெண்டு எடுத்துக்கலாம்னேன்.. என்றாராம் காமராஜர்…

அவர்தான் காமராஜர்..!!!

முதல்வராக இருந்த காலத்தில் காமராஜரின் தாயார் முதல்வரின் இல்லத்தில் தங்க ஆசைப்பட்டிருக்கிறார்…. “அம்மா என் கூட தங்கணும்னு ஆசைப்படும்தான்… ஆனா அது வந்து இங்க தங்கினா அத பார்க்கிற சாக்குல தங்கச்சி வரும்.. அப்புறம் தங்கச்சி புள்ளைங்க வருவாங்க… ஒவ்வொருத்தரா வந்து தங்குவாங்க.. அப்புறம் ஏதாவது பிரச்சினை வரும்.. வேனாம்னேன்..” என்றாராம்…

அவர்தான் காமராஜர்..!!!

காமராஜர் ஒருமுறை கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொண்டாராம்.. சாப்பிட்டு முடித்த பிறகு வெளியில் வந்து தன்னுடன் வந்தவரிடம்.. “எல்லோரும் அரை கண்ணப்பனாவே இருக்காங்க” என்றாராம்…

அதென்ன அரை கண்ணப்பன்..??

பெரியபுராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கண்ணப்பநாயனார் கதை கேள்விப்பட்டிருக்கிறீர்கள் தானே..??

அந்த கதையில் சிவபெருமானுக்கு பிடிக்குமா- பிடிக்காதா என்பதைப்பற்றி எல்லாம் கண்ணப்பன் கவலைப்படவில்லை… அவனுக்கு பிடித்ததை மட்டுமேதான் சிவனுக்கு படைத்தான்… ஆனால்.. கண்ணப்பனுக்கு சிவபெருமானிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை…

அதே போல காமராஜருக்கு விருந்தளித்தவர்கள் அவர்களுக்கு பிடித்ததை தான் பரிமாறினார்கள்… ஆனால் அவர்களின் கவனிப்பில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது என்பதைத்தான்.. “அரை கண்ணப்பன்” என்று சொன்னாராம்…

அவர்தான் காமராஜர்..!!!

காமராஜர் முதல்வராக இருந்தப் பொழுது , அவரது அமைச்சரவையில் பங்கு பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஆர் . .வெங்கட்ராமன் . ஒரு முறை விருதுநகரில் இருந்த காமராஜரின் வீட்டிற்கு கோடை காலத்தின் பொழுது சென்றிருந்தார் . அப்பொழுது அங்கு காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தார் . உடனே தன்னுடைய சொந்த செலவில் ஒரு மின் விசிறியை வாங்கி வந்து , அதை இயக்குவதைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார் . பிறகொரு சமயம் வீட்டிற்குப் போன போது மின் விசிறியைப் பார்த்துவிட்டு விசாரித்த காமராஜர் , எத்தனையோ தாய்மார்கள் பனை ஓலை விசிறியால் தான் விசிறிக் கொள்ளும் பொழுது , உனக்கு மட்டும் வெங்கட்ராமன் மின் விசிறி ஏன் வாங்கித் தந்தார் ? முதல் அமைச்சரின் அம்மா என்பதால் தானே . இது கூட சலுகை லஞ்சம் மாதிரி தான் என்று சொல்லி விட்டு அந்த மின்விசிறியை விருது நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார் .

அவர்தான் காமராஜர்..!!!

டெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம் , அதன் துவக்க வ்ழாவுக்கு அன்றைய பிரதமர் நேருவுடன் காமராஜரும் சென்றிருந்தார் . தற்பொழுது பேரூந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் வெகு சாதாரணமாகக் காணப் படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந ்தது . நேரு எந்திரத்தில் ஏறி நின்று . காசு போட்டு எடை பார்த்தார் . மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர் … காமராஜர் மட்டும் சற்றே ஒதுங்கி நின்றிருந்தார் . நேரு அவரையும் எடை பார்க்கும் படி கட்டாயப் படுத்தினார் . அவரோ மறுத்துவிட்டார் . சுற்றி நின்றிருந்தவர்க ளுக்கு ,திகைப்பு பிரதமர் சொல்லியும் காமராஜர் மறுக்கிறாரே என்று . அப்பொழுது நேரு சொன்னார் ; ” காமராஜர் எதற்கு மறுக்கின்றார் என்று எனக்குத் தெரியும் , இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் காசு கூட இப்பொழுது இவரிடம் இருக்காது ” ,என்றார் பிறகு , காமராஜருக்கு தானே காசு போட்டு எடை பார்த்தார் நேரு .

அவர்தான் காமராஜர்..!!!

தன்னுடைய பெயரை பயன் படுத்தி தனது குடும்பத்தினர் எந்த தவறான காரியத்திலும் ஈடு படக் கூடாது என்று காமரஜார் மிகவும் கண்டிப்பாக இருப்பார் . இதனாலேயே தனது தாயாரை தான் முதல்வரான பிறகும் விருது நகரிலேயே தங்க .வைத்தார் . ஒரு முறை ஒரு காங்கிரஸ் பிரமுகர் , காம்ரஜாரின் தாய் சிவகாமி அம்மாள் அவர்களை விருது நகரில் சந்தித்த பொழுது … அவர் மிகவும் வருத்ததுடன் சொன்னது : ” என்னை எதுக்காக இங்கயே விட்டு வச்சிருக்கான்னே தெரியல . , என்னையும் மெட்ராசுக்கு அழைச்சிக்கிட்டா நான் ஒரு மூலையில் ஒன்டிக்கப் போறேன் ” என்று சொல்ல . அதை அந்த பிரமுகர் காமராஜரிடம் தெரிவிக்க , அதற்கு காமராஜர் சொன்ன பதில் : ” அடப்போப்பா , எனக்கு தெரியாதா அம்மாவை கொண்டு வந்து வச்சிருக்கணுமா வேணாமான்னு ? . அப்படியே கூட்டிட்டு வந்தா தனியாவா ? வருவாங்க அவங்க கூட நாலு பேரு வருவான் . அப்புறமா அம்மாவை பாக்க , ” ஆத்தாவை பார்க்கன்னு பத்து பேரு வருவான் . இங்கேயே டேரா போடுவான் . இங்க இருக்குற டெலிபோனை யூஸ் பண்ணுவான் . முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை .மிரட்டுவான் எதுக்கு வம்புன்னு தான் அவங்களை விருது நகர்லயே விட்டு வச்சிருக்கேன் “”””” என்றார் …..

அவர்தான் காமராஜர்..!!!

காமராஜரின் குடும்பத்தினர் அதிகாரப் பூர்வமாக கலந்துக் கொண்ட ஒரே பொது நிகழ்ச்சி அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சி தான் . அவரது உடலுக்கு ஈமச்சடங்குகளை காமராஜரின் சகோதரி மகன் ஜவஹர் வைதீக முறைப் படி செய்ய . அவரது சிதைக்கு அவரது தங்கை பேரன் கனகவேல் தீ ..மூட்ட . தலைவா என்ற குரல் விண்ணை பிளக்க … அங்கு வந்திருந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அழுகையை அடக்க முடியாது கை கொண்டு வாய் பொத்தி .கதறினார் …

அவர்தான் காமராஜர்..!!!

சொத்து சுகம் நாடார்
சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார்
பொருள் நாடார்
தான்பிறந்த அன்னையையும் நாடார்
ஆசைதனை நாடார்
நாடொன்றே நாடித் – தன்
நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்…!!

– கவியரசு கண்ணதாசன்…