September 27, 2021

தமிழக முதல்வரானால் எனது முதல் கையெழுத்து லோக் ஆயுக்தா- கமல் பேச்சு முழு விபரம்!

அய்யே.. அரசியலுக்கு வர மாட்டேன்.. வந்தா கையிலே ஆயுதத்தை எடுக்க வேண்டியது இருக்கும் என்றெல்லாம் பேசி வந்த நடிகர் கமலஹாசன், கடந்த ஆண்டு அரசியலில் சிலர் கண்டதாக கூறப்பட்ட ‘வெற்றிடம்’ காரணமாக புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்து போன மாதம் 21 ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அன்று மாலை மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் , மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரையெல்லாம் அறிவித்து விட்டு சினிமாவுடன் அரசியல் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 17வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய கமல், திராவிடத்தை ஒழிக்க முடியாது எனவும் மாணவர்கள் அரசியல் புரிந்தவர்களாக இருந்தால் அரசியல்வாதிகள் நியாயமானவர்களாகி விடுவார்கள் எனவும் தெரிவித்தார். தான் பள்ளிக்கு செல்வதையும், கல்லூரிக்கு சென்று மாணவர்களை சந்திப்பதையும் தடுப்பது வேடிக்கையானது என்றும் விவசாயத்தை மாணவர்கள் பெருமையாக நினைக்க வேண்டும் என்றும் கமல் கேட்டுக்கொண்டார்.

இன்று கமல் அக்கல்லூரியில் பேசும் போது,“இதுவரை திரைப்படங்களில் நான் நடித்து வந்த பொழுது எனக்கு நீங்கள் பொருள் அளித்து வந்தீர்கள். இனி நான் உங்களுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய காலம்.இனி என் வேலையினை நான் பார்க்கிறேன். உங்கள் வேலையினை நீங்கள் சரியாக பாருங்கள்.நமது மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அரசியல் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு படித்து விட்டு இப்போது வீணாக்கி விடாதீர்கள். நான் மாணவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

நாம் அரசியல் தெரிந்து வைத்திருந்தால் அரசியல்வாதிகள் நியாயவான்களாக மாறி விடுவார்கள். நம்மை ஏமாற்ற முடியாது. நீங்களும் விழித்திருங்கள், படிப்பு மிக மிக முக்கியம். அதை செய்து விட்டு நீங்கள் வெளியே வந்ததும், உங்களை தாக்கப் போவது அரசியலும், ஊழலும்தான். அதை எதிர்கொள்ள வேண்டும் என்றால் உங்களுக்கு அரசியல் புரிந்திருக்க வேண்டும். நீங்கள் அரசியல்வாதி ஆக வேண்டும் என்று சொல்லவில்லை. அரசியல் தெரிந்தவர்களாக, புரிந்தவர் களாக இருந்தீர்கள் என்றால் வரும் அரசியல்வாதி, நியாயமான அரசியல்வாதியாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லாதவனாக ஆகிவிடுவான். அதை நான் எதிர்பார்க்கிறேன்.

என்னை பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்ல விடாமல் பல தடைகள் இருக்கின்றன. அங்கே போய் பேசி புரிய வைத்துவிடுவேனோ என்ற பதட்டம் பலருக்கு இருக்கிறது. நான் கல்லூரிக்குப் போவதை தடை செய்யலாம், நான் கற்பதைத் தடை செய்ய முடியாது. ஏதாவது, நல்லது செய்யுங்கள் என்று நம்பி கைகொடுக்கும், ஒரு தோழரிடம், தொண்டனிடம் நான் பாடம் கற்கிறேன். அந்த நம்பிக்கை எனக்கு பாடமாகிறது.

என்னுடைய மேடைகளில் பொன்னாடைகளைத் தவிர்க்கிறோம், பூமாலைகளைத் தவிர்க்கிறோம், காலில் விழுதைத் தவிர்க்கிறோம். இவையெல்லாம் மக்கள் நீதி மய்யம் மேடைகளில் நிகழாது, நிகழ்ந்தால் தடுக்கப்படும். மாணவர்களைப் பார்த்து நான் பேச வேண்டும், எனக்குத் தெரிந்ததை அவர்களுக்குச் சொல்ல வேண்டும், அவர்களிடமிருந்து நான் கற்க வேண்டும் என்ற சாதாரண தமிழனின் ஆசையைத் தடை போடும் சிலர் எனக்கு வேடிக்கை மனிதர்களாகவே தெரிகிறார்கள். அந்த வேடிக்கையை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கட்டும். நாம் வேலையைச் செய்வோம்,” என கமல்ஹாசன் பேசினார்.

தொடர்ந்து பேசிய கமல், “பதவியில் இருப்பவர்கள் கையை கட்டிக் கொண்டு இருந்தால் போதும். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்,பெண்களுக்காக அத்தனை திட்டங்கள் நம்மிடம் ஏற்கெனவே இருக்கின்றன. அவற்றை தூசி தட்டி எடுத்தாலே போதும். பெண்கள் முன்னேற்றம் ஏற்படும். என் தந்தை சீனிவாசன் கல்வியும் கொடுத்து காசும் கொடுத்தார். அதனால் எனக்கு நல்லாசிரியர்கள் வந்து குவிந்தார்கள். கல்வி தரம் குறையாமல் இருக்க வேண்டும். என்சுஇஆர்டி (NCERT) அறிக்கையில் தமிழ்நாடு கடைசியில் இருக்கிறது. தாய்மொழி, கணிதம் ஆகியவற்றில் நாட்டின் சராசரியை விட தமிழகம் பின் தங்கி இருக்கிறது. காந்திய சிந்தனையை சில பேரால் சிந்திக்க மட்டும் தான் முடியும். வீரத்தின் உச்சம் தான் அஹிம்சை.பழகி பார்ப்பவருக்கு தான் தெரியும் , நான் காந்தி ரசிகன்” என்று பேசினார்.

மேலும் நீட் தேர்வு குறித்து மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு நம் கல்வியை தீர்மானிப்பது நாம் தான். தமிழக அரசுக்கு தான் அதை நிர்ணயிக்கும் உரிமை இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து 6 மாநிலங்களையும் இணைத்து திராவிட நாடு அமைக்க உங்களால் முடியுமா என்ற கேள்வி எழுந்தது இக்கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன் நம்மால் முடியும் என்றும்
திராவிடத்தை யாராலும் அழிக்க முடியாது. கண்டிப்பாக அந்த மாதிரி இணைப்பு நிகழ வாய்ப்புண்டு. எங்கள் கொடியில் ஆறு மாநிலங்களை குறிக்கும் ஆறு கைகள் இருக்கின்றன என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நான் ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்தா மசோதா கொண்டு வருவேன் ஆட்சிக்கு வந்தால்.எந்த அரசியல்வாதியும் கையாடல் செய்ய முடியாது.ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தாவை மசோதாவினை அமல்படுத்தினால் நல்லது. வாய்ப்பு கிடைத்தால் எல்லோரும் அதில் கையெழுத்திடுங்கள் நானும் வாய்ப்பு கிடைத்தால் கையெழுத்திடுவேன் என்று தெரிவித்தார்