செலவுக்கு துட்டு இல்லை -அதிபர் தேர்தலிலிருந்து விலகுகிறார் திருமதி கமலா ஹாரிஸ்
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து நிதிப் பற்றாகுறை காரணமாக விலகுவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா தேவி ஹாரிஸ். 2016ல் கலிபோர்னியா மாகாணத்தி லிருந்து செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா, அம்மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக முன்னதாக பதவி வகித்தவர். 54 வயதாகும் கமலா, அதிபர் டொனால்டு டிரம்பை தீவிரமாக விமர்சிப்பவர். ஜனநாயகக் கட்சிக்குள் வளர்ந்துவரும் நட்சத்திரமாக கூறப்படுகிறவர்.
நம்பிக்கை அளிக்கும் தலைவராகப் பார்க்கப்படும் கமலா ஹாரிஸ், “அமெரிக்க விழுமியங்களைப் பாதுகாப்பதற்காகக் குரல் உயர்த்தும் உங்களைப் போன்ற மில்லியன் கணக்கானவர்களைத்தான் நாட்டின் எதிர்காலம் நம்பியிருக்கிறது. அதற்காகத்தான் அமெரிக்க அதிபர் பதவியை நோக்கிச் செல்லுகிறேன்,” என்று ஜனவரி மாதம் கூறி இருந்தார்.
அந்த சமயத்தில்தான் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியில் இருப்பதாக 20,000 பேர் கூடி இருந்த கூட்டத்தின் முன்பு கமலா ஹாரிஸ் அறிவித்தார்.. அதற்காக நிதி திரட்டலிலும் பிரசாரத்திலும் ஈடுபட்டார். ஜனநாயக கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும். ஜூலை மாத இறுதியில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப் படும். இந்நிலையில், அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக கமலா ஹாரிஸ் திடீரென அறிவித்துள்ளார். இது அவரது ஆதரவாளர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இது குறித்து கமலா ஹாரிஸ் விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,”எனது ஆதரவாளர் களுக்கு நன்றியையும் அதே நேரத்தில் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த சில நாட்களாக நன்றாக யோசித்து ஒரு கடினமான முடிவை இன்று எடுத்துள்ளேன். எனது பிரசாரத்தை நான் இன்று நிறுத்திக்கொள்கிறேன். நான் கோடீஸ்வரி அல்ல. அதிபர் தேர்தலில் போட்டியிடுவ தற்கு போதிய நிதி ஆதாரங்கள் இல்லாததால், இந்த தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை கைவிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
It has been the honor of my life to be your candidate. We will keep up the fight. pic.twitter.com/RpZhx3PENl
— Kamala Harris (@KamalaHarris) December 3, 2019
”நான் ஒன்றை மட்டும் உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த பிரசாரம் எதை நோக்கியதோ அதற்காக நான் தொடர்ந்து போராடுவேன். அதிகாரத்தில் உள்ள டொனால்ட் டிரம்பை வரும் தேர்தலில் விழ்த்துவதற்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் நான் தொடர்ந்து போராடுவேன்” என கமலா ஹாரிஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதை அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கமலா ஹாரிஸை கிண்டல் செய்யும் விதமாக டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். அதிபர் டிரம்ப் ட்விட்டரில், ”அதிபர் போட்டியிலிருந்து கமலா ஹாரிஸ் விலகியது மிகவும் வருத்தமாக உள்ளது. நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம்” என கிண்டலாக டூவீட் செய்துள்ளார்.
இதற்கு கமலா ஹாரிஸ் வழக்கம்போல் தக்க பதிலடி கொடுத்துள்ளார். கமலா ஹாரிஸ் டுவிட்டரில்,”கவலைப்படாதீர்கள் அதிபரே. உங்கள் மீதான வழக்கு விசாரணையில் சந்திப்போம்” என பதிலளித்துள்ளார். அதிபர் பதவியை தவறாக பயன்படுத்தியதாக டொனால்ட் டிரம்ப் வழக்கு விசாரணையை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.