December 6, 2022

தும்மினாலும் அதை பீரங்கி வெடிச்ச சத்தமாக்கிடறீங்க – கமல்ஹாசன் ஓப்பன் டாக்!

ளம் இயக்குநரும் உலக நாயகனின் ரசிகருமான லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் கமல்ஹாசன் நடித்துள்ள படம், ’விக்ரம்’. விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத் உட்பட பலர் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அனிருத் இசை அமைத்துள்ளார். படம் வெளியாக விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக 200 கோடிக்கும் மேல் வசூலித்தப்படி சக்கை போடு போட்டுவரும் நிலையில் லோகேஷுடன் பயணித்த அனைவரையும் அடுத்த கட்டத்திற்கு கூட்டிச்சென்றுள்ளது விக்ரம் என்றே சொல்லலாம். படத்தில் குட்டி விக்ரமாக நடித்த தர்ஷன், ஏஜெண்ட் டீனா தொடங்கி உதவி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் என அனைவருமே சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறார்கள். லோகேஷ் கனகராஜுக்கு கார், உதவி இயக்குநர்களுக்கு இருசக்கர வாகனம், ரோலக்ஸாக நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் என படக்குழுவினர் அனைவருக்கும் லைஃப் டைம் செட்டில்மெண்ட் போல் பரிசுகளை வாரி வழங்கிவருகிறார் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன்.

படம் வெளியான 5வது நாளிலிருந்து தனித்தனியே பரிசுகளை வழங்கி வருவது ஒரு ப்ரொமோஷன் உத்தி எனவும் விமர்சிக்கப்படுகிறது. ‘மார்க்கெட்டிங் உத்தியாகவே இருக்கட்டுமே! இதுவரை எந்த தயாரிப்பாளர் இதுபோன்று உதவி இயக்குநர்களுக்கு வெற்றியிலும் வசூலிலும் பகிர்ந்தளித்திருக்கிறார்? உதவி இயக்குநர்களின் சினிமா பயணம் நிச்சயமற்றது! வாய்ப்பு கொடுப்பதே அவர்களுக்கான வாழ்க்கையை கொடுப்பதுதான் என்ற நிலையே பெரும்பாலும் நிகழ்கிறது. முறையான சம்பளம் கிடையாது, வேலைக்கான உத்தரவாதம் கிடையாது, மாடு போல் உழைத்தாலும் இயக்குநருக்கு கொடுக்கப்படும் மரியாதை அவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. எனவே கமல்ஹாசனின் இந்த முன்னெடுப்பும் அதை ஒட்டிய விளம்பரங்களும் நிச்சயம் சினிமா வட்டாரத்தில் ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். படக்குழுவினருக்கு கமல்ஹாசன் கொடுக்கும் இந்த செட்டில்மெண்டை நாம் வரவேற்று கொண்டாட வேண்டும்’ என சினிமா ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

ஆனாலும் உலக நாயகனுக்கே இந்த படம் ஒரு லைஃப் டைம் செட்டில்மெண்டாகத்தான் அமைந்துள்ளது எனலாம். கடைசியாக திரையரங்கில் கமல்ஹாசன் தீப்பொறி பறக்கவைத்தது விஸ்வரூபத்தில் தான். அதற்கடுத்து வந்த பாபநாசம் திரைப்படம் வெற்றிப் பட்டியலில் இணைந்தாலும் ரீமேக் என்பதால் அதை தவிர்த்துவிட்டு பார்த்தால் 10 ஆண்டுகளுக்கு பிறகு கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் ஒரு மாஸ் விருந்து வைத்து வசூலை வாரிக்குவித்துள்ளார் கமல்.

எப்படியோ ஒரு தமிழ் படம் இந்த அதிரடி வெற்றி பெற்றதை அடுத்து, செய்தியாளர்களைச் இன்று சந்தித்த நடிகர் கமல்ஹாசன், “ ’விக்ரம்’ படத்தின் வெற்றியை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு முன் சில்வர் ஜூப்ளி உட்பட பல வெற்றிகள் கிடைத்திருந்தாலும் அது அமைதியாக நடந்திருக்கிறது. இப்போது எது செய்தாலும் தும்மினாலும் அது பீரங்கி வெடித்த சத்தத்திற்குப் பிரதிபலிக்கப்படுகிறது. அதற்கு காரணம் ஊடக பலம். இந்த படம் நாடு முழுவதும் வெற்றி பெற்றிருக்கிறது.

நான் நடித்த ’அபூர்வ சகோதரர்கள்’ வெற்றியின் போதும் சந்தோஷமாக இருந்தேன். அந்தப் படம் உடனடியாக இல்லாமல் ஆறு மாத இடைவெளிக்குப் பின் இந்திக்குச் சென்றது. அங்கும் கொண்டாடினார்கள். ’அவ்வை சண்முகி’ படமும் இந்திக்குச் சென்று வெற்றி பெற்றது. இப்போது, ’ஏக் துஜே கேலியே’ படத்துக்கு கிடைத்த வரவேற்பு மாதிரி, ’விக்ரம்’ நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ளதில் மகிழ்ச்சி.

நான் வட நாட்டுக்குச் சென்றிருந்தபோது, ’தென்னிந்திய படங்களின் ஆதிக்கம் வட இந்திய சினிமாவில் இருக்கிறதே?’ என்ற தொனியில் கேட்டார்கள். நான் சொன்னேன், ’சூரியனிலேயே உத்ராயணம், தட்சணாயணம்னு இருக்குங்க, அது மாறி மாறி வரும். என்னைப் பொறுத்தவரை இந்திய படம் வெற்றி பெற்றது’ என்று சொன்னேன். நாங்கள் ’ஷோலே’ படத்தையும் ’ஆராதனா’வையும் அப்படித்தான் பார்த்தோம். அப்போது மொழி தெரியாமல், சப் டைட்டில் கூட இல்லாமல் பார்த்தோம்.

’இதுக்கிடையிலே ரஜினியுடன் இணைந்து நடித்து வருடங்களாகிவிட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நீங்கள் இணைந்து நடிப்பீர்களா?’ என்று கேட்கிறார்கள். முதலில் அவரிடம் (ரஜினி) கேட்க வேண்டும். அவர் ஒப்புக்கொண்ட பிறகு இவரிடம் (லோகேஷிடம்) கேட்க வேண்டும். நாங்கள் மூன்று பேரும் ஒப்புக்கொண்ட பின் உங்களிடம் (மீடியா) சொல்ல வேண்டும். நான் எப்போதும் தயார்.

இந்த ‘விக்ரம்’ படத்தின் வெற்றியால், மர்மயோகி, சபாஷ் நாயுடு, மருதநாயகம் படங்கள் உயிர்பிக்கப்படுமா? என்று கேட்கிறார்கள். இவ்வளவு காலதாமத்துக்குப் பிறகு எனக்கே அதில் சிரத்தை இல்லை. என்னைப் பொறுத்தவரை புதிது புதிதாகப் படங்கள் பண்ண வேண்டும் என்று நினைப்பவன். அவை எனக்கு பழசாகத் தெரிகிறது. தேவைப்படும் என்றால் அதற்குத் தயாராக இருப்பவர்கள் என்னோடு இணைய வேண்டும். நடிகர் விஜய் படத்தைத் தயாரிப்பதைப் பற்றி கேட்கிறீர்கள். பேசியிருக்கிறோம். அதற்கான கதை வேண்டும், அவருக்கும் நேரம் வேண்டும்” ” என்றார்.

இன்றைய பேட்டியின்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடனிருந்தார்.