April 2, 2023

ஐயா.. மோடி அவர்களே..! மறுபடியும் தப்புச் செஞ்சிட்டீங்களே-கமல் எழுதிய ஓப்பன் லட்டர் முழு விபரம்!

“ஐயா.. மோடி அவர்களே.. இந்த நெருக்கடியான காலத்தில், 140 கோடி கோடி மக்கள், இன்று வரை உங்களை நம்பி உங்கள் வழிகாட்டுதலை பின்பற்றி வருகின்றனர்.ஒரு தலைவர் சொன்னவுடன் இத்தனை கோடி மக்கள் கேட்கிறார்கள் என்றால், அந்த வாய்ப்பு உங்களை தவிர உலகில் வேறு எந்த தலைவருக்கும் இல்லை. நீங்கள் சொன்னால் செய்கிறார்கள் கொரோனாவை ஒழிக்க இரவு, பகல் பாராமல் பணியாற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கை தட்டுங்கள் என்றவுடன் அனைவரும் அதை செய்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.ஏழைகள், முறையாக திட்டமிடப் படாத ஊரடங்கால் தங்கள் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைகளின் துயரை துடைக்க உங்களை தவிர வேறு யாரும் இல்லை. பணமதிப்பிழப்பு போல் நீங்கள் மீண்டும் ஒரு ஊரடங்கு தவறை செஞ்சுப்புட்டீங்களே..”- என்று மக்கள் நீதி மய்யம் நிறுவனத் தலைவர் கமல்ஹாசன் கடிதம் ஒன்றின் மூலம் மோடியை காய்ச்சி எடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேளையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக செயல் படுவதை குறிக்கும் வகையில் அனைவரும் ஒற்றுமையாக மின் விளக்கை அணைத்து அகல் விளக்கு (அ) டார்ச் லைட் ஏற்றுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து, நேற்று இரவு 9 மணிக்கு பெரும்பாலானோர் தங்கள் வீட்டில் அகல்விளக்கு ஏற்றினர்.

பிரதமரின் இந்த நடவடிக்கைகள் குறித்து மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ஸ்டேட்மெண்டில். , “ஒரு பொறுப்புள்ள குடிமகனாகவும், அதிருப்தி அடைந்த குடிமகனாகவும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். மார்ச் 23-ம் தேதி நான் எழுதிய முதல் கடிதத்தில், நம் சமூகத்தின் கவனம் பெறாத, விளிம்பு நிலையில் இருக்கக் கூடிய எளிய மக்களின் அவலநிலை குறித்து அரசு கவனம் கொள்ளாமல் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தேன். அந்த கடிதம் எழுதிய மறுநாள், பணமதிப்பு நீக்கம் அறிவிப்பு வெளியிட்டதைப் போல தேசிய அளவிலான உடனடி ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு வெளியானது. நீங்கள் பணமதிப்பு நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியிட்டபோது, நான் உங்களை நம்பினேன். ஆனால், நான் தவறு என்று காலம் உணர்த்தியது. பின்னர், காலம் நீங்களும் தவறு என்று உணர்த்தியது.

நீங்கள் இந்த நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பதை நான் உங்களுக்கு உறுதிப்படுத்திக் கொள்கிறேன். உங்களைத் தீவிரமாக பின்பற்றும் உங்களுடைய தொண்டர்கள் உள்பட 1.4 பில்லியன் இந்தியர்கள் ஆபத்தாக இருக்கும் இந்தச் சூழலில் எல்லா குடிமகன்களும் உங்களின் வழிகாட்டுதல்களை நம்பிவருகிறார்கள். இன்று, உண்மையில் உலக அளவில் உங்கள் அளவுக்கு அதிக தொண்டர்களைக் கொண்ட தலைவர் யாரும் கிடையாது. நீங்கள் பேசுவதை, அவர்கள் பின்பற்றுகிறார்கள்.

உங்களுடைய நிர்வாகத்தின் மீது மக்கள் தங்களுடைய நம்பிக்கையை வைக்கக் கூடிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. உங்களை விமர்சிப்பவர்கள்கூட, உங்கள் அழைப்பை ஏற்று ஓய்வின்றி, தன்னலமின்றி உழைத்துக்கொண்டிருக்கும் சுகாதாரப் பணியாளர் களுக்காக ஒன்றுசேர்ந்து கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள் என்பதை நீங்கள் கட்டாயம் பார்த்திருக்கவேண்டும்.

நாங்கள் உங்களுடைய விருப்பத்தையோ, உங்களுடைய கட்டளையையோ பின்பற்று கிறோம். ஆனால், நாங்கள் பின்பற்றுவதால் நாங்கள் அடிபணிந்துள்ளோம் என்று குழப்பிக்கொள்ளவேண்டாம். என்னுடைய மக்களின் தலைவனாக உங்களுடைய பாதை குறித்து நான் கேள்வி எழுப்பவேண்டிய தேவை உள்ளது. பணமதிப்பு நீக்கத்தின்போது ஏற்பட்ட தவறைப் போலவே தற்போது மீண்டும் இந்த மிகப் பெரிய பிரச்சனையில் நடைபெறுகிறது என்பதுதான் என்னுடைய மிகப் பெரிய பயம். பணமதிப்பு நீக்கம், ஏழை மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களுடைய சேமிப்பை அழித்தது. இந்த திட்டமில்லாத ஊரடங்கு உத்தரவு உயிரிழப்பையும் வாழ்வாதார இழப்பையும் உருவாக்கியுள்ளது. ஏழை மக்களைக் கண்டுகொள்ள உங்களைத் தவிர வேறு ஒருவரும் கிடையாது.

ஏழை மக்களின் வாழ்க்கையே அவலத்துகுரிய காட்சியாக இருக்கும்போது, நீங்கள் மறுபுறம் மிகவும் வசதியான வாழ்க்கையைக் கொண்டிருக்கும் மக்களை விளக்கு ஏற்றச் சொல்லி காட்சியாக்கிக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் உலகம் பல்கனியில் நின்று கொண்டு எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றிக்கொண்டிருக்கும்போது, ஏழை மக்கள் அவர்களுடைய உணவுக்காக போதுமான எண்ணெய் இன்றி தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

உங்களுடைய கடைசி இரண்டு பேச்சுகளும், இந்த நெருக்கடியான நேரங்களில் நாட்டு மக்களை அமைதிப்படுத்தக் கூடியதாக இருந்தது. ஆனால், அதை விட அவசரமான தேவைகள் இருக்கின்றன. இந்த மனம் சார்ந்த யுக்திகள் பல்கனி வைத்திருந்து தங்கள் நேரங்களை கழித்துக்கொள்ளும் மக்களுக்கு போதுமானதாக இருக்கும். ஆனால், இந்தப் பேச்சுகள் தலைக்கு மேல் கூரை கூட இல்லாத மக்களுக்கு போதுமானது அல்ல. இந்த சமுகத்தின் மிகப் பெரும்பான்மை மக்களான ஏழைகளை புறக்கணிப்பதன் மூலம், பல்கனி கொண்டுள்ள மக்களுக்கான பல்கனி அரசாக மட்டும் நீங்கள் இருக்க விரும்பமாட்டீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஏழைகள் ஒருபோதும் செய்தித் தாளின் முதல் பக்க செய்தியாக இருக்க மாட்டார்கள். ஆனால், தேசத்தின் கட்டுமானத்தில் அதன் உள்நாட்டு உற்பத்தியிலும், அதன் உத் வேகத்திலும் அவர்களுக்கு இருக்கும் பங்கை புறக்கணிக்க முடியாது. அவர்கள்தான் இந்த தேசத்தின் அதிகப்பட்ச பங்கைக் கொண்டுள்ளனர். அடிமட்டத்தை தகர்க்க நினைக்கும் எந்த முயற்சியும் உயர்மட்டத்தைக் கவிழ்ப்பதற்குதான் வழி வகுக்கும் என்பதை வரலாறுகள் உணர்த்தியுள்ளன. அதனை அறிவியலும் ஒப்புக்கொள்ளும்.

உயர்மட்டச் சமூகம், அடிமட்ட மக்களின் மீது ஏற்படுத்திய முதல் தொற்றுநோய் இது. இதுவரையில், நம்முடைய முன் பாடங்களிலிருந்து நாம் எதுவும் கற்றுக் கொள்ளவில்லை. உங்களுக்கு நான்கு மாத காலம் அவகாசம் இருந்தபோது, 1.4 பில்லியன் மக்களை ஊரடங்கில் இருக்கச் சொல்வதற்கு நீங்கள் வெறும் நான்கு மணி நேரம் தான் அவகாசம் கொடுத்துள்ளீர்கள். ஒரு பிரச்னை பெரிதாவதற்கு முன்பே தொலைநோக்குப் பார்வையுள்ள தலைவர்கள் தீர்வுக்காக உழைக்கத் தொடங்கிவிடுவார்கள். இந்தமுறை உங்களுடைய தொலைநோக்குப் பார்வை தோல்வியடைந்துவிட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதற்காக என்னை யார்வேண்டுமானாலும் தேசவிரோதி என்று அழைத்துக்கொள்ளலாம். நாங்கள் கோபத்தில் உள்ளோம். ஆனால், இன்னமும் உங்கள் பக்கம் உள்ளோம்’ என்று குறிப்பிட்டு கமல் காட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்