January 30, 2023

முதல்வராகி முதல் கையெழுத்து என்று பேசுவது அதிகபிரசிங்கித்தனமா? கமல் விளக்கம்!

புதிய அரசியல் நாயகன் கமலின் இரண்டாவது அரசியல் கூட்டம் திருச்சி பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலம் முழுவதும் இருந்து வரும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள், பெண்கள் அமருவதற்காக தனித்தனியே 14 பிரிவுகளாக இருக்கைகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் இருவழியாக வந்து செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டது. மேடையின் கீழ் முன்வரிசையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்கார இருக்கைகள் அமைக்கப்பட்டன. திறந்தவெளி மேடையின் பின்புறமும், வலது, இடது புறங்களிலும் பிரமாண்ட எல்.இ.டி. திரையில் மேடையின் நடவடிக்கைகளை ஒளிபரப்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதனிடையே திருச்சியில் வாகன சோதனையின்போது போலீஸார் விரட்டிச் சென்றதால், பைக்கில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்தார் உஷா என்ற பெண்மணி. நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், உஷா குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குவதாக சென்னையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் அறிவித்தார். இதையடுத்து இன்று, உஷா குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கமல்ஹாசன், தான் அறிவித்தபடியே 10 லட்ச ரூபாயை வழங்கினார். உஷாவின் அம்மா லூர்துமேரி மற்றும் சகோதரர் ராபர்ட்டுக்கு 5 லட்ச ரூபாய், உஷாவின் கணவர் ராஜாவுக்கு 5 லட்ச ரூபாய் என 10 லட்ச ரூபாயைப் பிரித்து வழங்கினார் கமல்ஹாசன்.

இதையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், “இங்கே முதல்வர் ஆனால், முதல் கையெழுத்து என பேசினார்கள். அது சிலருக்கு அதிகப் பிரசிங்கித்தனமாக இருக்கலாம். ஆனால் பறக்க நினைத்தால் பறக்கலாம். அப்படி மனிதன் கண்டுபிடித்ததுதான் விமானம். எனவே நடக்கும்’ (முதல்வர் ஆவேன்!). நம் காவிரியில் நமக்குள்ள உரிமைகளை அரசியல்வாதிகள் குளறுபடிகள் செய்து தட்டி பறிக்கிறார்கள். இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த 25 அல்லது 30 ஆண்டுகளாக குழப்பம் அதிகரித்து வருகிறது. இதற்கு பேராசை முக்கிய கராணமாக உள்ளது. ஸ்கீம் என்ற வார்த்தையை கொண்டு சாதுர்யமாக சூழ்ச்சி செய்து காலம் கடத்துகின்றனர். இந்த விஷயத்தில் மத்திய அரசு ெசய்வது தவறு. இதற்கு மேல் அவ மரியாதை ஏற்படுத்த முடியாது. காவிரி வாரியம் அமைத்தே ஆக வேண்டும். கலவரம் ஏற்படுத்தி திசை திருப்ப நினைத்தால் திசை திரும்ப மாட்டோம். கலவரத்தை அமைதியாக எதிர்கொள்வோம். உறங்குபவர்களை எழுப்பி விடலாம். ஆனால் உறங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் உள்ளது. சுதந்திரத்திற்கு ஒத்துழையாமை இயக்கம் செய்தோம். அதே போல மத்திய அரசு காவிரி வாரியம் அமைக்காவிடில் தமிழகம் ஒத்துழைக்க மறுக்கும். வீரத்தின் உச்சக்கட்டம்தான் அகிம்சை. உண்ணாவிரத்தில் நம்பிக்கை இல்லை.

நாம் அமைத்த மத்திய அரசு அறிஞர்கள், வல்லுநர்களுடன் ஆலோசித்து காவிரி வாரியத்திற்கு தீர்வு காண வேண்டும். மத்திய அரசின்கீழ் நீர் இருந்தாலும் காவிரி வாரியம் அமைப்பதில் தமிழக அரசுக்கும் பங்கு உள்ளது. ஆனால் நகரக் கூடஇல்லை. இதில் நம்மை தாழ்த்திவிட்டனர். தமிழக அரசு மத்திய அரசின் பின்னால் மறைந்து கொண்டு செயல்படுகிறது. அறிஞர்கள், வல்லுநர்கள் இதற்கு நிவாரணம் உண்டு என்கின்றனர். இல்லையென்றால் தள்ளி நில்லுங்கள். சேர வேண்டிய நேரத்தில் நல்லவர்கள் பக்கம் சேருவோம். சூழ்ச்சியால் அரசியல் செய்ய விரும்பவில்லை. எதிர் கொண்டு அரசியல் செய்வோம். தமிழகத்தின் நீர் வளத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை சிந்திக்க தவறிவிட்டனர். தமிழகத்தில் ஒத்துழையாமை இயக்கம் நடந்தால் நாடு தாங்காது. தமிழகத்தை கைப்பாவையாக மாற்ற நினைக்கிறார்கள். காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை பெற்றே ஆக வேண்டும்.” என்று தெரிவித்தார்

தொடர்ந்து கமல் தன் கட்சியின் கொள்கைகளை விவரித்தார். அப்போது அவர், “உடல் நலமும், மகளிர் நலனும் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள். விவசாயம், நீர் வளம், பாசனப்பரப்பு ஆகியவை செயல்படுத்த முழு வீச்சில் பணிகள் துவங்கும். மழை நீரை சேமிக்க சிறு, சிறு அணைகள் கட்டப்படும். ஏரி, குளங்கள் தூர்வாரப்படும். சொட்டு நீர் பாசனம், தெளிப்பான் பாசனம், நவீன பாசன முறைகளை செயல்படுத்துவோம். விவசாயம், நீர்வளம், பாசன பரப்புதான் கொள்கை. காவிரி கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளை சிறுதொழில் முனைவோர்களாக உருவாக்குவோம். 55 சதவீத பெண்கள் ரத்த சோகையாலும், 30 சதவீத பெண்கள் அதிக எடையால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடு நலமாக இருந்தால்தான் நாடு நலமாக இருக்கும். காவல்துறையில் சீரமைப்புவாரியம் அமைக்கப்படும். மக்கள் நீதி மய்யம் ஆட்சி அமைத்தால் முதல் கையெழுத்தாக லோக் ஆயுக்தா அமைப்பதாக இருக்கும். லஞ்சம் கொடுத்து துணைவேந்தர்களாக பதவி பெறுபவர்கள் தேச துரோகிகள். பள்ளிக் கல்வித் துறையில் லஞ்சம் இருக்காது. லஞ்சம் முழுமையாக தடுக்கப்படும்.” என்றார்.

தனது உரையை முடித்த பின்னர் கேள்வி – பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், `சினிமாவில் கமல் வெற்றிகரமானவராக இருக்கலாம். ஆனால், அரசியலில் அவரால் அப்படி இருக்க முடியாது’ என அமைச்சர் ஒருவர் கூறிய விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்குக் கமல் பதிலளித்த போது,“அந்த கட்சியில் என்னிடம் சம்பளம் வாங்காமல் என்னுடைய மக்கள் தொடர்பாளராக அவர் இருந்து வருகிறார். அவர் என்னை எந்த அளவிற்கு விமர்சிக்கிறாரோ அந்த அளவுக்கு மக்கள் என் மீது அன்பு செலுத்துவார்கள். அவரது பணி தொடரட்டும். அவர் அளவுக்கு என்னால் நடிக்க முடியாது. நான் சினிமாவில் அரசியல் செய்ததில்லை. அரசியல் செய்யும் போது நடிக்க மாட்டேன். அவரால் இதைச் செய்ய முடியுமா?’’ என்றார்.

பள்ளிகளில் சாதி ஒழிப்பு குறித்த ஒரு கேள்விக்கு, ‘கேரளாவில் பள்ளிகளில் சாதியை குறிப்பிடாவிட்டாலும் இட ஒதுக்கீடு உண்டு என சட்டம் இயற்றியிருக்கிறார்கள். இங்கும் அந்தச் சட்டத்தை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன். அதைச் செய்தால், சாதி படிப்படியாக ஒழியும்’ என்றார் கமல்ஹாசன்

எஸ்.சி., எஸ்.டி சட்டம் இப்போது இருப்பது போல இறுக்கத்துடன் தொடரவேண்டும் என்பது எங்கள் கருத்து என மற்றொரு கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார்.

ரயிலில் பயணம் மேற்கொண்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த கமல், `13 ஆண்டுகளாக நான் ரயிலில் பயணிக்கவில்லை என்று வெளியான செய்தியே பொய். நான் உங்களுக்கு தெரியாம போயிட்டு வந்துட்டுதான் இருக்கேன். சென்னையிலிருந்து இந்த பொதுக்கூட்டத்திற்காக நாங்கள் 48 பேர் வந்தோம். ரயிலில் வந்ததற்கே பாதுகாப்புப் பணிக்காக நிறைய காவலர்கள் தேவை பட்டார்கள். இதே மற்ற வாகனங்களில் வந்தால் இதைவிட அதிக காவலர்கள் தேவைப்படுவார்கள். அதைக் குறைக்கவே ரயிலில் வந்தேன். நான் மகாத்மா காந்தியின் ரசிகன். அவரது பயணமும் ரயிலேயே அமைந்தது. அதைப் போலவே எங்களது பயணமும் இருக்க வேண்டும் என நாங்கள் நினைத்தோம்’’ என்றார்.