உருமாறிய மக்கள் நீதி மய்யம் வரப் போகுது! – கமல்ஹாசன் எச்சரிக்கை -வீடியோ!
உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்கி, 2019 நாடாளுமன்ற தேர்தலில் தனித்தும், 2021 சட்டமன்ற தேர்தலில் சில கட்சியுனரின் கூட்டணியோடும் போட்டியிட்டார். ஆனால் நடந்து முடிந்த இந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியதோடு குறைவான வாக்கு சதவீதத்தையே பெற்றது. இதற்கு முழு காரணமான கமலின் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகினார்.
இந்நிலையில், தற்போது கமல்ஹாசன் காணொளியில் சொல்லி இருக்கும் விஷயம் இதோ.
“மாற்றம் என்றும் மாறாது நிகழ்ந்துகொண்டே இருக்கும். அரசியல் மாற்றம் நாட்டில் ஏற்பட நாம் ஏற்றிய கொடி பறந்துகொண்டு இருக்கிறது. நேர்மை வழியில் மாற்றத்தைத் தேடுபவர்களாய் நாம் இருக்கும்வரை நம் கொடி புத்தொளியோடு பறந்துகொண்டே இருக்கும். மூச்சுள்ளவரை அதன் பாதுகாவலனாக நான் இருப்பேன். நான் ஒரு சிறு விதைதான்.
இந்த விதை, வீழ்ந்தது, வீழ்த்துவோம் என கொக்கரிக்கும் பழைய புள்ளிகளுக்கும், சுள்ளிகளுக்கும் ஒரு செய்தி. விதை விழுந்தாலும் மண்ணைப் பற்றிவிட்டால் அது காடாகும், நாளை நமதாகும். உயிரே, உறவே, தமிழே ஊரடங்கினாலும் வாயடங்காது என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றாக நாம் ஆகிவிடக்கூடாது.
தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றிப் பாடம் கற்பது நாம் இதுவரை கண்ட சரித்திரம். மக்களிடம் முக அறிமுகம் இல்லாதவர்களையும், சற்றே தெரிந்தவர்களையும் புது எழுச்சி அரசியலின் நட்சத்திரங்களாக மின்னவைக்க நான் நினைத்ததுதான் சிலருக்கு சர்வாதிகாரமாகத் தெரிகிறது. திறமையின் அடிப்படையில் பெரும் பொறுப்புகளைக் கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே தந்து வளர வழி செய்தது அன்று அவர்களுக்கு ஜனநாயகத்தின் உச்சகட்டமாகத் தெரிந்திருக்கிறது.
பிறகு காலச் சூழலில் கண்ணுக்கு ஏற்பட்ட மறதியில் அது அவர்களுக்குத் தெரியாமல் போய் விட்டது. கூட்டணி வைத்துக்கொள்வதில் நாம் காட்டிய வெளிப்படைத் தன்மையும், அதைத் தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு பொறுப்பு கொடுத்த ஜனநாயகமும் அனைவரும் அறிந்தவை. தோல்விக்குப் பின் அவரவருக்கு இருக்கும் தார்மீகக் கடமையை ஏற்பது நல்ல ஜனநாயகவாதி செய்யும் செயல்.
கடமைகளை மறந்து நிகழ்ந்துவிட்ட தவறுகளைக் கொட்ட ஒரு குழி தேடுவது சிலருக்கு ஜனநாயகமாகப் படுகிறது. அது ஜனநாயகமே அல்ல. நம் மய்யக் கிணறு அவ்வளவு சாதாரணமாகத் தூர்ந்து போய்விடாது என்பது தற்காலிக தாக சாந்திக்காக குடிக்க வந்தவர்களுக்குப் புரியாது. 40 ஆண்டு காலம் இறைத்த நீர் வார்த்ததில் உடல் சற்றே வேர்த்தாலும், உற்சாக ஊற்று ஊறிக்கொண்டே இருக்கும் என்பது நமக்கு நம் அனுபவம் சொல்லும் பாடம்.
இதுதான் நம் புலம், இதுதான் நாம் செய்யப்போகும் விவசாயம் என்று களம் இறங்கிவிட்ட நமக்கு நம் நீர் நிலையைச் சுற்றித்தான் வேலை. நாடோடிகள், யாத்ரீகர்கள் அப்படி அல்ல ஓரிடம் தங்க மாட்டார்கள். வணிகர்களாக அவர்கள் இருக்கும் பட்சத்தில் வியாபாரம் உள்ளவரை தங்குவார்கள். பிறகு அவர்கள் வெளியேறி விடுவார்கள், சில நேரம் சென்றவழியே திரும்ப வருவார்கள்.
இந்த ஊற்று அன்றும் சுரந்துகொண்டு இருக்கும், ஆனால், மீண்டும் இவர்கள் இந்த ஊருணியை நம் நீர் நிலையை அவர்கள் அசுத்தப்படுத்த விடமாட்டோம் என்கிற உறுதியுடன் நாம் நம் பணியை நேர்மையாகத் தொடரவேண்டும். அதுவே நாம் தரும் செய்தியாக உலகம் அறியவேண்டும். மற்றபடி தன் தவறுகளை மறைக்க சிலர் எழுப்பும் பொய்க் குற்றச் சாட்டுகளுக்கு நாம் பதில் சொல்லவேண்டியதில்லை. காலம் அதற்கு பதில் சொல்லும்.
🦉நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தவன் நான் பீனிக்ஸ் பறவை போல….
இருப்பதற்காக வாழும் மனிதர்களுக்கு நடுவிலே வாழ்க்கையே பறப்பதற்காக
என வாழும் நான்மீண்டும் ஒருமுறை
இலக்கை நோக்கி
நெடிய பயணம். -கமல்ஹாசன்@ikamalhaasan @maiamofficial pic.twitter.com/ZaWT80xlJg— Àanthai Répørter™ 👀🦉 (@aanthaireporter) May 24, 2021
உண்மையெல்லாம் தெரிந்தும் ஊமையாக இருக்கச் சொல்கிறீர்களா என வெகுண்டு, குரலெழுப்பும் தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். உயிரே உண்மை பேசு, உறவே வாதாடு, என் அருமை தமிழே போதும் அதற்கு. மறந்தும் நம் மொழி மாசுபடாது இருக்கட்டும். நம் தரம் குறையாது இருக்கட்டும். கட்சி உள் கட்டமைப்பை தனி மனிதர்கள் தன் ஆதாயத்துக்காக மாற்றி ஆடிய விளையாட்டுகள் இனி தொடராது.
செயல் வீரர்கள், செயலாற்றுபவர்களின் கரங்கள் வலுப்படுத்தப்படும். உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை அனைவரும் இனி காண்பார்கள். நம் கொள்கையில் என்றும் ஒரு தெளிவும், பாதையில் நேர்மையும் இருப்பதால் நம் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது. என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யமும் இருக்கும். உங்கள் நான்” என்று தெரிவித்துள்ளார்