September 27, 2021

அந்த போலீஸ்களைப் பிடிச்சு ஜெயில்லே போடணும்!- கமல் பேட்டி (முழு விபரம்)

ஜல்லிக்கட்டுக்காக சென்னையில் தொடரப்பட்ட போராட்டம் பல வன்முறை உள்ளிட்ட உச்சக்கட்ட காட்சிகள் நிகழ்த்தப்பட்டு தற்போது நிறைவு நிலை எட்டியுள்ளது. மெரினாவில் கடந்த செவ்வாய்கிழமை தொடங்கப்பட்ட இந்த போராட்டமானது 100 பேருடன் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் இந்த போராட்டமானது நூற்றுக்கணக்கில் மாறி ஆயிரத்தையும் தாண்டி லட்சக்கணக்கில் மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக உலக நாடுகள் அனைத்துமே இந்தியாவை திரும்பி பார்க்கும் நிலை ஏற்பட்டது. அதன் விளைவாக அசவர சட்டம் நிறைவேற்றப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.அதன் பின்னரும் நேற்று போராட்டத்தை தொடர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது குடியரசு தினத்திற்காக சில ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதற்காக போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனாலும் மாணவர்கள் விலகி செல்லாததை கண்டித்து போலீசார் தடியடி நடத்தினர். இதனால் ஏற்பட்ட வன்முறை என்பது தமிழகம் முழுவதும் பரவி மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

kamal jan 24

இந்த சூழ்நிலையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல், “கேரளாவில் நூற்று கணக்கான யானைகளை செண்ட மேள சத்தம், பட்டாசு வெடிக்கும் சத்தங்களுக்கு இடையே நிற்க வைக்கிறோம். அதை அனுமதிக்கவும் செய்கிறோம். அதற்கு யானைகளும் பழகிவிட்டது. பீரங்கி குண்டுகளின் சத்ததிற்கே யானைகளை பழக வைத்த வரலாறு நமக்கு இருக்கிறது. பீஃப் சாப்பிட அனுமதி அளிக்கிறோம். ஆனால், அதே ஏறு தழுவ அனுமதி அளிக்க மறுக்கிறோம். அதுவும், என் காளை மீண்டும் அடுத்த ஆண்டு என்னோடு விளையாட வரும். என வீட்டில் இருக்கும் நாய், பூனையோடு, அதுவும் ஒன்றாக இருக்கும். அது ஒரு செல்ல பிராணியாக இருக்கும். இந்த இரட்டை நிலையைத்தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம்.

படமோ, காளைகளோ, எந்த வகையான தடைக்கும் நான் எதிரானவன். அது இந்தி மொழிக்கு எதிரான எதிர்ப்பல்ல. எங்கள் மீதான இந்தி திணிப்புக்கான எதிர்ப்பு. இப்போராட்டத்தில் எனது பெரிய கவலையே பெண்கள் மற்றும் குழந்தைகள்தான். காந்தியின் கனவு நிஜமானது. ஆரோக்கியமான, சந்தோஷமான நிர்பயாக்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உட்கார்ந்திருந் ததைப் பார்த்திருப்பீர்கள். இளைஞர்கள் போராட்டத்தில் அரசியல் சாயம் பூசப்படுவதை ஏற்க முடியாது.

போலீஸார் தீ வைக்கும் வீடியோவைப் பார்த்ததும் அதிர்ச்சியுற்றேன். நம்மை தெளிவுபடுத்த எதாவது ஒரு விளக்கம் தரப்படும் என நம்புகிறேன். எம்ஜிஆர் நம்மிடையே இருந்திருந்தால் மெரினாவுக்கு வந்து போராட்டாக்காரர்களிடம் பேசியிருப்பார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசினேன். அமைதியாக இருந்ததற்கு என்னிடம் நன்றி கூறினார். மக்களைத் தூண்டுமாறு நான் எதையும் பேசவில்லை என நினைக்கிறேன். நான் அமைதியாகவே இருந்தேன்

குறையில்லாத சட்டம் என எதுவும் இல்லை. ஜல்லிக்கட்டு, மரண தண்டனை என இரண்டு முக்கிய பிரச்சினைகளைப் பற்றி படமெடுத்த ஒரே நடிகன் நான்தான். சிலர் இதை தலைவனில்லாத இயக்கம் என கேலி செய்கிறார்கள். ஆனால் மக்களின் ஒருங்கிணைப்பைப் பாருங்கள். மக்களைத் தூண்டும் விதமாகத்தான் அனைவரும் ஜல்லிக்கட்டு குறித்து பேசினர். இந்த போராட்டமே அப்படித்தான் ஆரம்பமானது.

நான் 1924-ல் பிறந்திருந்தால் காந்தியின் முன் உட்கார்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே ஒற்றுமை வேண்டும் என கேட்டிருப்பேன். நான் பாகிஸ்தானை வெறுக்க மாட்டேன் என்றுதான் சொன்னேன். எனக்கு அந்த எல்லைகளை அழிக்க வேண்டும். நாம் தான் அதை உருவாக்கினோம்.என்னைப் பின் தொடராதீர்கள். என்னால் உங்களை வழிநடத்த முடியாது. என்னை வழிநடத்தாதீர்கள். நான் உங்களைத் தொடர முடியாது. எல்லோரும் ஒன்றாக நடப்போம். எதையும் தடை செய்யாதீர்கள். ஒழுங்குபடுத்துங்கள்..

இதற்கிடையில் இது தீடீரென உண்டான கோபம் என நினைக்க்க வேண்டாம். நான் ஒரு கட்சிக்கு எதிராகப் பேசவில்லை. இந்த சிஸ்டத்தில் இருக்கும் பிரச்னை இது. பல ஆண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டு இருந்த கோபம் இன்று வெளியாகி இருக்கிறது. இது திடீரென எழுந்த கோபம் அல்ல. ஜல்லிக்கட்டு ஒரு காரணம் மட்டுமே. மக்கள் ஒரு காரணத்திற்காக காத்துக்கொண்டு இருந்தார்கள். இந்தி எதிர்ப்புக்கு எதிரான போராட்டத்தில் நான் கலந்து கொண்டேன். நான் இந்தி மொழிக்கு எதிராக அந்த போராட்டத்தில் இல்லை. இந்தி போராட்டம் என்பது நேருவுக்கோ, காந்திக்கோ எதிரான போராட்டம் இல்லை. அது இந்தி மொழிக்கு எதிரானதும் இல்லை. நம்மை முட்டாள் எனக் கருதி, நம் மீது திணிக்கப்பட்டதற்கு எதிராகத்தான் போராடினோம். அந்தக் கோபம் பல போராட்டங்களுக்கு வித்திட்டது.

அதே சமயம் விலங்கு நல வாரியங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்கிறீர்கள். அவர்களுக்கு கருத்து சொல்லும் அளவு எனக்கு தகுதி இருப்பதாக நினைக்கவில்லை. நம்மிடம் சென்சார் போர்டு போல், விலங்கு நல வாரியம் இருக்கிறது. பிறகு ஏன் பிற விலங்கு நல அமைப்புகள் இங்கு இருக்க வேண்டும். லண்டனின் RSPCA போல் இங்கும் அமைப்புகள் இருக்கிறன. எனவே, எதற்கும் தடை போடாதீர்கள். ஒழுங்குபடுத்துங்கள் என்றுதான் சொல்கிறேன்.விபரீதம் என்பதால், ரேஸிங்கை யாரும் தடை செய்யவில்லை. நான் தடைக்கு எதிரானவன். என் சினிமாவாக இருந்தாலும் சரி, காளையாக இருந்தாலும் சரி. நான் தடைக்கு எதிரானவன். என் படம், இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றார்கள். அப்போது, பேசாமல், அதைப்பற்றி இப்போது பேசினால், என்னை கோழை என்பார்கள். ஆனால், நான் அப்போதும் அதற்கு எதிராக குரல் கொடுத்தேன்.

ஆனாலும் போலீஸார் கட்டவிழ்த்த வன்முறையை என்னை அதிர்ச்சி ஆக்கியுள்ளது. ஏதேனும் ஒரு விளக்கம் வரும் என நம்புகிறேன். இது சாதாரண மனிதனை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். எப்போது வேண்டுமானாலும், தான் பாதிக்கப்படுவோம் என அஞ்ச ஆரம்பிப்பான். என் கவனத்திற்கு வந்த வன்முறையில் ஈடுபட்ட போலீஸாரின் காட்சிகளைப் பார்த்தபோது, இது காவல்துறையாக இருக்காது என்றும் ஏதோ நடிப்பு காட்சிகளுக்கானது என்றும் நம்பினேன். இந்த வன்முறையில் ஈடுபட்ட அவர்கள் தண்டிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட வேண்டும்” என்றார்.