October 22, 2021

கமல் வழங்கும் ’பிக் பாஸ்’ நிகழ்ச்சி – நாளை முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு!.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஆரம்பத்தில் நெதர்லாந்தில் தொடங்கியது. ஜான் டி மோல் என்பவர் டட்ச் பிக் பிரதர் எனும் பெயரில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி 2007ஆம் ஆண்டு முதல் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஹிந்தியில் மிகப்பெரும் வெற்றியை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சிதான் தற்போது தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. ஷில்பா ஷெட்டி, அமிதாப்பச்சன், சஞ்சய் தத், ஃபரா கான் தற்போது சல்மான் கான் என பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளனர். கலர்ஸ் எனும் சேனலில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போதும் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்பதால் இந்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் வடிவமைப்பு என்னவென்றால், 14 பிரபலங்கள், 100 நாட்கள் நிகழ்ச்சிக்காகவே வடிவமைக்கப்பட்ட வீடு ஒன்றில் தங்கியிருக்க வேண்டும். வீட்டின் பாத் ரூம்களை தவிர மற்ற எல்லா இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு சீசனுக்கும் புது வீடு பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வீடு செட் போடப்படுகிறது என்றெல்லாம் வாய்வ்ழி தகவல்கள் வந்த நிலையில் இந்நிகழ்ச்சி பற்றி அனுபவபூர்மாக தெரிந்து கொள்ள பத்திரிகையாளர்கள் பலர் அந்நிகழ்ச்சி நடைபெறும் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பூந்தமல்லியை அடுத்த தண்டலத்தில், பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அந்த வீட்டில் மொத் தம் 53 கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் ஒவ்வொரு அசைவையும் அந்த கேமராக்கள் கண்காணிக்கும்.

இந்த வீட்டுக்குள் கடிகாரம், கைப்பேசி, இணையதளம், தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள் போன்றவற்றுக்கு அனுமதி இல்லை. எனவே போட்டியாளர்களால் வெளி உலகைத் தொடர்புகொள்ள முடி யாது. அவர்களுக்கான‌ உணவை அவர்களே சமைத்துக்கொள்ள வேண்டும். போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு மைக்ரோ போன் வழங்கப்படும் அதை எப்போதும் அவர்கள் தங்கள் கழுத்தில் மாட்டிக்கொள்ள வேண்டும். ஏதேனும் தேவை ஏற்பட்டால், போட்டியாளர்கள் அந்த மைக்ரோஃபோன் மூலமாகத்தான் நிகழ்ச்சி அமைப்பாளர்களை தொடர்புகொள்ள முடியும்.

போட்டியாளர்கள் அனைவரும் ஒரே ஹாலில் போடப்பட்டிருக்கும் கட்டிலில்தான் உறங்க வேண்டும். அதேபோல 2 கழிவறைகள், 2 குளியலறைகள் மட்டுமே உள்ளன. அங்கிருக்கும் நீச்சல் குளத்தை ஒரே சமயத்தில் 5 பேர் மட்டுமே பயன்படுத்த முடியும்.
போட்டியில் பங்கேற்பவர்கள் வீட்டை விட்டு வெளியேற கூடாது. பகல் நேரத்தில் தூங்கக்கூடாது, மற்றவர்களுடன் சண்டையிடக்கூடாது என்று விதிகள் உள்ளன. விதிகளை மீறும் பட்சத்தில் அவர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள். ஒவ்வொரு வாரமும் விதிகளை மீறுபவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். போட்டியை விட்டு வெளியேறுபவர்களிடம் தொகுப்பாளர் கமல்ஹாசன் அனுபவங்களை கேட்டு தெரிந்து கொள்வார். உள்ளே இருப்பவர்களின் செயல்பாடுகளை கேமரா வழியாக கமல்ஹாசன் கவனித்துக்கொண்டே இருப்பார். அதே போல் உள்ளே இருப்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறு போட்டிகளும் நடத்தப்படும். இதுபோன்ற காரணங்களால், போட்டியாளர்களுக்குள் போட்டி மனப்பான்மை ஏற்பட்டு, நிறைய சவால்கள் உருவாகும். அது இந்நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்ய மாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. இதில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் புதிய லோகோவை அறிமுகப்படுத்தி கமல்ஹாசன் பேசிய போது, “நான் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது இதுதான் முதல் முறை. நானே இதிலிருந்து நிறைய கற்றுக் கொள்ளவுள்ளேன். சின்னத்திரைக்கு வந்துவிட்டதால், நான் கீழே இறங்கி விட்டதாக நினைக்கக் கூடாது. ஏற்கெனவே ஹாலிவுட்டிலும், பாலிவுட்டிலும் பல்வேறு நடிகர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார்கள். அவர்கள் அனைவருமே அதனை பெருமையாகத்தான் நினைக்கிறார்கள். நானும் அதேபோல், இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதை பெருமையாக நினைக்கிறேன். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ள 14 பேர் யாரென்று எனக்கு தெரியாது. அனைவரையும் போல நானும் அந்த 14 பேர் யார் என அறிய ஆவலாக இருக்கிறேன்”என்று
கமல்ஹாசன் பேசினார். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ. 15 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல்!