August 12, 2022

நம்மூர் என்றில்லை.. எந்த ஊரிலும் அரசியலில் நகைச்சுவை என்பது அரிதான விஷயம்.. அது பெரும்பாலும் பேசும் போது மட்டுமே வெளிப்படும். அதனால்தானோ என்னவோ  அரசியல் நகைச் சுவைப் திரைப்படங்களும் அடிக்கடி வருவதில்லை. வந்தாலும் அவை சோபிக்க தவறி  விடுவது உண்டு. ஆனால் இப்போது ரிலீஸாகி உள்ள களவாணி 2 அக்குறையை போக்க முயன்றிருக்கிறது என்றே சொல்லலாம்.

தஞ்சாவூர் குறும்பு கொப்பளிக்க பக்கா விவசாயம் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையையும் மிக இயல்பாக, கூடவே புன்னகை மிளிர வைக்கும் களவாணி என்றொரு படத்தை இப்போது சின்னத் திரையில் போட்டாலும் முழுசாக பார்ப்போரின் எண்ணிக்கை ஜாஸ்திதான். அப்படியாப்பட்ட படத்தின் மீட்சியாக களவாணி 2 என்ற பெயரில் முந்தையப் படத்தில் இருந்த அத்தனை கதாபாத்திரங்களும் அப்படியே பயன்படுத்தினாலும் இதன் முழுக் கதைக் களத்தை உள்ளாட்சி தேர்தல் என்னும் அரசியல் நடப்பை வைத்து பின்னி ,பிசைந்து, உருட்டிக் கொடுத்து இருக்கிறார்கள்.

அதாவது வயக்கமான சின்னச் சின்ன களவாணித்தனம் செய்து கொண்டு ஊரில் அல்லப்றைப் பண்ணிக் கொண்டு சுற்றி விமலுக்கு ஒரு பேராசை. அது என்ன்வென்றால் குறுகியகாலத்தில் பல லட்சங்கள் சம்பாதிக்க திட்டமிடுகிறார். அந்த சூழ்நிலையில் ஊரில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப் படுகிறது. உடனே அடடே.. ஊரில் பணக்காரர்கள் யாராவது தலைவர் பதவிக்கு நின்றால் அவர் களை எதிர்த்து மனு செய்து விட்டு பின்னர் அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பேரம் பேசி தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளலாமே என யோசித்து களமிறங்கிறார். ஆனால் அவ்வூரில் நெருங்கிய சொந்தக்கரரர்களே தேர்தலில் நிற்பதால் பேரம் பேசமுடியாமல் போகிறது. அதே சமயம் இந்த களவாணி விமலை ஊரில் ஒரு பொருட்டாகவே மதிக்காத ஆவேசத்தில் எதையெதையோ செய்து தேர்தலில் ஜெயித்து விடுவதுதான் முழுக் கதை.

பத்து வருடங்களுக்கு முன்னர் வந்த களவாணி படம் போலவே இந்த 2ம் களவாணியிலும் வேலையில்லாத வெட்டி ஆபிஸராகவே வருகிறார் விமல். கூடவே ஒவியாவுடன் மல்லுக்கு நிற்கும் விமல் அவர் கர்ப்பமாக இருப்பதாக நினைத்து பின்வாங்குவதும், எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து சென்று வம்பு செய்வதும் ரசிக்கும்படி இருக்கிறது. கஞ்சா கருப்பு எப்போதும் போல் விமலிடம் பணத்தை பறிகொடுத்து ஏமாறுகிறார். ஓவியா அவ்வளவாக சோபிக்கவில்லை. அதே நேரத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விமலின் மாமாவாக வரும் துரை சுதாகர் தனிக் கவனம் பெறுகிறார். கதைப்படி இவர்தான் வில்லன் என்றாலும் அடி தடி வெட்டு குத்து எதுவும் இல்லாமல் கேஷூவலாக அசத்தி இருக்கிறார். படத்தின் கலகலப்பிற்கு வழக்கம் போல் விக்னேஷ்காந்த் உதவவில்லை.

நடராஜன் சங்கரனின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. ஆனாலும் படத்தின் முதற்பாகம் முழுவதுமே வலுவான கதையோட்டம் இல்லாமல், ஆடல் பாடல் என்று ஒட்டுதல் இல்லாமல் போனாலும் இண்டர்வெல்லுக்கு பின்னர் ஜாலியாக போவதால் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக அமைந்து இருக்கிறது.

மொத்தத்தில் இந்த களவாணியும் மனதை களவாடி விடுகிறான்.

மார்க் 3/5