அசுரன் தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு வெற்றிமாறனுக்கு வாழ்த்து!
மத்திய அரசின் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் படமாக தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த நடிகர் என்ற விருதினையும் தட்டிச்சென்றுள்ளார் . இன்று வெற்றிமாறனை தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் . அப்போது தேசிய விருது என்பது பெரிய ஊக்கம் என வெற்றிமாறன் கூறியுள்ளார் .
இதை அடுத்து ‘அசுரன்’ படத்துக்கு தேசிய விருது கிடைத்தது குறித்து அப்படத்தின் தயாரிப்பாள ரான கலைப்புலி தாணு, “1992ஆம் ஆண்டு வண்ண வண்ணப் பூக்கள் படத்துக்காக இயக்குநர் பாலு மகேந்திரா எனக்கு தேசிய விருது வாங்கித் தந்தார். அதன் நீட்சியாக, அவருடைய தலையாய தலைமகன், அவருடைய வழித்தோன்றல் வெற்றிமாறன் 2019ஆம் ஆண்டுக்கான தேசிய விருதை எனக்கு பெற்றுத் தந்திருக்கிறார். அவை இரண்டையும் நான் இரண்டு கண்களாக மதித்து போற்றுகிறேன். தனுஷுக்கும், வெற்றிமாறனுக்கும் இது சாதாரண உழைப்பல்ல.
சிக்குன் குனியா நோயால் அவர் படுக்கையில் இருந்தபோது கூட எடிட்டிங், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை பார்த்தது கண்டு என் கண்கள் கலங்கின. அதற்கான கவுரவம் இன்று அவருக்கு கிடைத்திருக்கிறது. இந்த விருதை நான் வெற்றிமாறனுக்கும், தனுஷுக்கும் சமர்ப்பிக்கிறேன். தனுஷ் இப்படத்தில் சிவசாமியாகவே வாழ்ந்தார். அதற்காக அவர் செய்த அர்ப்பணிப்பு அளவிட முடியாதது.” என்று தாணு தெரிவித்தார்.
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்து, கடந்த 2019-ம் ஆண்டு திரைக்கு வந்து 100 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிய படம் அசுரன். கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் , பாலாஜி சக்திவேல் ,அம்மு அபிராமி , டீஜே அருணாச்சலம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.