October 16, 2021

கடிகார மனிதர்கள் – திரை விமர்சனம்!

டைம் எனப்படும் நேரம் அல்லது மணி சொல்வதற்கு நமக்கு எலக்ட்ரானிக் கடிகாரமோ, மண் கடிகாரமோ, சூரியனோ தேவையில்லை. மனிதனே ஓர் கடிகாரமாகத்தான் சுற்றி வருகிறான். மனிதனின் உடல் உறுப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட மணி நேரத்தில் தன்னுடைய வேலையை செய்கின்றன. இவைகள் செய்யும் வேலையில் தாமதம் ஏற்பட்டால் பேட்டரி சரியில்லை என்று உணர்ந்து ,உடனே நாம் மருத்துவரை நாடி செல்கிறோம். ஆம்.. நமது உடல்,ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன் பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை நேர்தியாக செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது.இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.ஆகவே உடலில் தோன்றும் உணர்வுகளையும் மாற்றங்களையும் வைத்தே நம்மால் எளிதில் மணியினை கூற முடியும். அது எப்படி என்பதை பிறிதொரு சமயம் பார்க்கலாம்.. இப்போது ‘கடிகார மனிதர்கள்” என்ற கொஞ்சம் புதுமையான தலைப்பில் யதார்த்த மான திரைக்கதையால் நம்மை சுற்றி நடமாடிக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றிச் சொல்லி அசத்தி இருக்கும் ஒரு திரைப்படம் பற்றி அறிந்து கொள்வோமே..!

கிரைஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் பிரவிஷ்.கே. பிரதீப் ஜோஸ்.கே தயாரித்தி ருக்கும் படம்தான் ‘கடிகார மனிதர்கள்”.இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி யிருக்கிறார் வைகறை பாலன். கிஷோர், ஷெரின், கருணாகரன், வாசு விக்ரம், சிசர் மனோகர், பிரதீப் ஜோஸ், பாலாசிங், லதாராவ், பாவா லஷ்மன், சௌந்தர், ஷீலா கோபி, மாஸ்டர் ரிஷி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-உமா சங்கர், இசை-சி.எஸ்.சாம், பாடல்கள்-கார்க்கி பவா, வைகறை பாலன், படத்தொகுப்பு-ஹரிசங்கர், கலை-ராஜு.பி, நடனம்-கூல் ஜெயந்த், ராதிகா, ஸ்டண்ட் -மகேஷ். மக்கள் தொடர்பு-வெங்கட்.

சிம்பிளாக சொவதானால் பறவைக்கும் எறும்புக்கும் கூட வீடு உண்டு, அது வாடகை தந்ததுண்டா? ஆறறிவு மனிதன் அலைவது ஏன்? என்கிற பாடல் வரிகளையே கதைக்கருவாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் கடிகார மனிதர்கள். கொஞ்சம் விரிவாக சொவதானால் கிராமங் களிலிருந்து சென்னை போன்ற மாநகரங்களுக்கு பிழைப்புத் தேடி வருகிற நடுத்தட்டு மற்றும் அடித்தட்டு மக்கள் வாடகைக்கு வீடு பிடிக்கப் படும்பாடு, அதில் பலரின் வாழ்க்கை, வீட்டிற்கு வாடகை தந்தே கழிந்து விடுகிறது. சம்பாதிக்கும் பணத்தில் பாதிக்கு மேல் வாடகைக்கே போய் விடுகிறது. இதிலும் ஆயிரம் நிபந்தனைகள். விருந்தாளிகள் வந்தால் ‘எத்தனை நாளைக்கு தங்கு வார்கள். சீக்கிரம் ஊருக்கு அனுப்புங்க” என்று சொல்லி நம் குடும்ப விஷயத்துக்குள் மூக்கை நுழைப்பார்கள் சொந்த விடு இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக அவர்கள் உயர்ந்தவர்கள் போலவும் வாடகைக்கு குடியிருப்பவர்கள் இரண்டாந்தர குடிமக்கள் போலவும் நடத்தப்படுகிறார் கள். இப்படியான சூழலில் வாழ்வை எதிர்நோக்கும் சிலரின் மனநிலைதான் ‘கடிகார மனிதர்கள்” மையக்கதை. அதிலும் ஒரு குடும்பம் எனில் 2 குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்றெல் லாம் சில வீட்டு ஓனர்கள் கண்டிஷன் போடுகிறார்கள். அப்படியொரு நிபந்தனை விதித்த வீட்டு ஓனரை ஏமாற்ற வேண்டி தாங்கள் பெற்ற மூன்றாவது பிள்ளையான சிறுவனை யாருக்கும் தெரியாமல் வீட்டில் வைத்து வளர்ப்பதும், அவனை ஒரு பெட்டியில் வைத்து தூக்கிச் சென்று, பின்பு அழைத்து வருவதுமாக அந்தப் பையனின் அப்பாவான கிஷோர் பெரும் பாடுபடுகிறார். இது தொடர்பாக எழும் பிரச்சினைகளும், அதன் தீர்வும்தான் இப்படம்.

இது வரை வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் அதிகம் நடித்துள்ள கிஷோர், விளிம்பு நிலைக்கும் போக முடியாமல் இருக்கும் நிலையிலும் வாழ முடியாமல் தவிக்கும் ஒரு இடைப் பட்ட குடும்ப கதையில் வாழ்வை எதிர்நோக்கி போராடும் குடும்பத்தலைவனாக மூன்று குழந்தை களுக்கு அப்பாவாக முக்கிய ரோலில் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக் கிறார். ஷெரின், கருணாகரன், வாசு விக்ரம், சிசர் மனோகர், பாலாசிங், லதாராவ், பாவா லஷ்மன், சௌந்தர், ஷீலா கோபி, மாஸ்டர் ரிஷி என ஒவ்வொருவரும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்து தங்கள் பங்கினை சரியாக செய்துள்ளனர். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரதீப்ஜோஸ் திருப்திபடுத்தியிருக்கிறார். ஆழுத்தமான கதைக்கு உமா சங்கரின் ஒளிப்பதிவு பலம் சேர்த்திருக்கிறது.

கார்க்கி பவா, வைகறை பாலன், வரிகளுக்கு இசை சி.எஸ்.சாம் மோசமில்லை. படத்தொகுப்பு ஹரிசங்கர், கலை ராஜு.பி, நடனம் கூல் ஜெயந்த், ராதிகா, ஸ்டண்ட் மகேஷ் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

இயக்குநர் சசிகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வைகறைபாலன், நகர வாழ்க்கை என்பதே பொய். இங்கே சந்தோஷமா வாழ்றதா நினைத்துக் கொண்டு, எல்லோரும் வாழ்ந்து கொண்டு இருகிறார்கள்.ஆனால் தேவையில்லாத பழக்க வழக்கங்கள், எண்ணங்கள், பேச்சுகள், நடத்தைகள் என்று இங்குள்ள மக்கள் தங்களை தாங்களே சீரழித்துக் கொண்டு எல்லாவற்றிற்கும் மத்தவங்களை நம்பி அல்லது நம்ப வைக்க முயற்சி செய்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை எல்லா தரப்பினரும் ரசிக்கும் விதமாய் ஸ்கிரின் பிளே அமைத்து, வசனம் எழுதி ஒரு பாடத்தை இயக்கியிருக்கிறார்.

நகரவாசிகள் மற்றும் நகர வாழ்க்கைக்கு ஆசைப்படுபவர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படமிது!

மார்க் 5/ 3