August 13, 2022

கடாரம் கொண்டான் – விமர்சனம்!

கிட்டத்தட்ட ஒன்பதாண்டுகளுக்கு முன்னால் ஒரு ஃபிரெஞ்சுத் திரைப்படம் வெளியானது. À bout portant என்ற பெயர் கொண்ட அப் படம் 2014ல் கொரிய மொழியில் ‘தி டார்கெட் என்ற பெயரில் ரீ – மேக் -க்காகி அதையடுத்து ஹாலிவுட்டில் Point Blank என்ற பெயரில் வெளி வந்தது. தற்போது நெட்பிளிக்சில் காணப்படும் இப் படம் இந்தி, பெங்கால், உள்பட பல மொழி களிலும் ரீமேக் செய்யப் பட்டு எந்த மொழியிலும் பெரிய வெற்றியை பெறாத நிலையில் தமிழில் ‘கடாரம் கொண்டான்’ என்ற பெயரில் வந்து சீயான் விக்ரம் புண்ணியத்தில் தனி கவனம் பெற்று விட்டது. முதலிலேயே ஒரு விஷயத்தை நினைவு கொள்ள வேண்டும்.. உலக நாயகன் கமல் தயாரிப்பில் சியான் விக்ரம் மற்றும் நாசர் மகன் அபிஹசன் & கமல் அக்ஷரா ஆகியோர் பங்கேற்ற படமிது. அதனால் இந்த கே கே போரடிக்குது என்று யாராவது சொன்னால் அவரிடமிருந்து விலகி விடுங்கள். அதே சமயம் ஹாலிவுட் -ரேஞ்சில் சூப்பர் என்று சொல்வதையும் நம்ப வேண்டாம்.

பரபரப்புக்கென உருவாக்கப்பட்டதுதான் இக்கதை. நம்ம தமிழும் ஆட்சிமொழியாக இருக்கும் மலேசியாதான் கதைக் களம் என்பதால் பார்க்க புதுசாக இருக்கிறது.அங்குள்ள ஒரு ஹாஸ்பிட்டல் டாக்டர் வாசு (அபி ஹசன்). அவரது ஒய்ஃப் ஆதிரா (அக்ஷரா ஹாசன்) நிறைமாத கர்ப்பிணி. அதே மலேசியாவில் கடாரம் கொண்டானை (விக்ரம்) மர்ம நபர்கள் சிலர் துரத்திக் கொண்டு வரும் போது ஒரு பைக்கில் மோதி மயங்கிய நிலையில் மேற்படி வாசு டாக்டராக இருக்கும் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்படுகிறார். அப்படி ஆக்சிடெண்ட்டானர் கடாரம் கொண்டானான விக்ரம் யார் என்று அடையாளம் காண முற்படும்போது அவர் ஒரு முன்னாள் சீக்ரெட் ஏஜெண்ட் என்றும் அதன் பின்னர் அவர் டபுள் ஏஜென்டாக மாறி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிய வருகிறது. இதனால் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் கடாரம் கொண்டான் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந் நிலையில், சில மர்ம ஆசாமிகளால்.கர்ப்பிணியான ஆதிரா திடீரென கடத்தப்படுகிறாள், அவளை விடுவிக்க வேண்டுமென்றால் ஹாஸ்பிட்டலில் போலீஸ் பாதுக்காப்புடன் சிகிச்சை பெறும் கடாரம் கொண்டானை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வாசுவுக்கு நிபந்தனை விதிக்கிறார்கள். வேறு வழி தெரியாத வாசு கடாரம் கொண்டானை நைசாக தூக்கியபடி வெளி யேறுகிறார். இதனால் டாகர் வாசு-வும் அக்யூஸ்டாகி விடுகிறார்.இந்த இரண்டு குற்றவாளிகளும் இணைந்து வாசுவின் மனைவி மீட்பதுதான் மீதிக் கதை.

முன்னரே சொன்னது போல் ஒரு முழு நீள ஆக்ஷன் – த்ரில்லர் திரைப்படத்துக்கு என்ன தேவையை அத்தனையையும் முடிந்த அளவு நிறைவாக வழங்கி இருக்கிறார்கள். விக்ரம் நடிப்பு சூப்பர், அவர் ஸ்டைல் அட்டகாசம் என்று சொல்வதெல்லாம் எக்ஸ்ட்ரா பிட்டிங்-தான். இவரின் காட்சிகள் இன்னும் கொஞ்சம் வராதா? என்று சகல ரசிகர்களையும் ஏங்க வைத்து விட்டதே அவர் சாதனை. நாசர் வாரிசு அபிஹசன் இப்படத்தில்தான் அறிமுகம் என்பதை நம்ப முடியவில்லை.. மிகப் பொருத்தமாக தன் பங்களிப்பை வழங்கி இருக்கிறார். அக்‌ஷரா ஹாசன் என்னும் மீன் குஞ்சு-க்கும் கொஞ்சூண்டுதான் சீன்.

ஜிப்ரனின் பின்னணி இசை இப்படத்தில் இரு கேரக்டராக உடன் பயணித்து ரசிக மனநிலையை மேம்படுத்துகிறது. ஆனால், அவ்வப்போது ஓவர் சவுண்ட் விட்டு கடுப்பேறிவிடுகிறார். பிரவீன் கே எல்-லின் எடிட்டிங் கொஞ்சம் எல்லை மீறி விட்டது போல் தோன்றுகிறது. ஶ்ரீனிவாஸ் கேமரா கலக்கல்.

என்னதான் ஆனாலும் நம்மூர் தமிழ் ரசிகன் ஹாலிவுட் ரசிகனை விட கொஞ்சம் புத்திசாலி என்பதை இயக்குநர் மறந்து விட்டார். அதை கவனத்தில் கொண்டு ஸ்கீரின் பிளேயில் இன்னும் மெனக்கெட்டிருந்தால் கடாரம் கொண்டான் முழுமையாக வெற்றி அடைந்திருப்பான்.

மார்க் 3.25 / 5