January 27, 2023

முதல் இந்திய பெண் டாக்டர். கடம்பனி கங்குலி!

கடம்பினி கங்கூலி (அ) காதம்பனி கங்குலி.

இவர்தான் முதல் மேலை மருத்துவப் பயிற்சிப் பட்டம் பெற்ற தெற்காசியப் பெண் உடலியல் மருத்துவர் ஆவார்.

கடம்பினி கங்கூலி 1861ல் பிரிட்டிஷ் இந்தியாவில் பீகாரைச் சேர்ந்த பகல்பூரில் பிறந்தார். .இவரது அப்பா பிரஜ கிஷோர் பாசு, பகல்பூர் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார். பிரம சீர்திருத்த வாதியான அவரது தந்தை அபய் சரண் மாலிக் என்பவருடன் சேர்ந்து பகல்பூர் மகில சமிதி என்ற பெண்கள் அமைப்பை 1863ல் ஏற்படுத்தினார். அதுதான் பிரிட்டிஷ் இந்தியாவில் பெண் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட முதல் இயக்கமாகும்.

கடம்பினி கங்கூலி பங்க மகில வித்யாலயாபள்ளியில் படித்தார். அப்பள்ளி 1878ல் பெத்தூன் பள்ளியுடன் இணைக்கப்பட்டது. பெத்தூன் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது 1878ல் கல்கத்தாப் பல்கலைக்கழக நுழைவு தேர்வினை எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றார். அவ்வாறு வெற்றிபெற்ற முதல் பெண்மணி அவர் ஒருவரே. அவரது முயற்சியைப் பாராட்டும்வகையில் பெத்தூன் கல்லூரியில் 1879ல் முதலில் இடைநிலைப் (FA) படிப்பும் தொடர்ந்து இளங்கலைப் பட்டபடிப்பும் தொடங்கப்பட்டன. இவரும் சந்திரமுகி பாசுவும் பெத்தூன் கல்லூரியின் முதல் பெண் பட்டதாரிகள். இருவரும் இந்தியாவிலும் மற்றும் பிரிட்டிஷ் பேரரசிலுமே முதல் பெண் பட்டதாரிகளாக ஆனார்கள்.[1]

தொடர்ந்து கங்கூலி கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். 1886ல் ஜிபிஎம்சி (GBMC – Graduate of Bengal Medical College) பட்டம் பெற்று மருத்துவராகப் பணியாற்றும் தகுதியைப் பெற்றார். இவரும் ஆனந்தி கோபால் ஜோஷியும் மேற்கத்திய மருத்துவம் பயின்ற முதல் இந்தியப் பெண் மருத்துவர்கள்.

கங்கூலி அவரது ஆசிரியர்களிடமிருந்தும் சமூகத்தின் பழமைவாதிகளிடமிருந்தும் பலவிதமான எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. அவர் 1892ல் மேற்படிப்புக்காக மேலை நாடுகளுக்குச் சென்று எல்ஆர்சிபி (LRCP) – எடின்பர்க், எல்ஆர்சிஎஸ் (LRCS ) – கிளாஸ்கோ, ஜிஃப்பிஎஸ் (GFPS) – டப்ளின் ஆகிய மருத்துவப் பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு இந்தியாவிற்குத் திரும்பினார். லேடி டுஃபெரின் மருத்துவமனையில் சிறிது காலம் வேலை பார்த்துவிட்டுப் பிறகு சொந்த மருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டார்.

1883ல் கடம்பினி பிரம்ம சீர்திருத்தவாதியும் பெண்விடுதலைக்குப் போராடியவருமான துவாரகநாத் கங்கூலியைத் திருமணம் செய்தார். அதற்குப்பிறகு ஆசிரியர்கள், பழமைவாதிகளின் எதிர்ப்பை மீறி காதம்பனி மருத்துவம் படித்தார். இதன் மூலம் தெற்காசியக் கல்லூரி ஒன்றில் அலோபதி மருத்துவம் படித்த முதல் பெண் என்ற பெருமையையும் காதம்பனி பெற்றார். ஆனந்திபாய் அமெரிக்காவிலும் காதம்பானி கல்கத்தா மருத்துவக்கல்லூரியிலும் ஒரே ஆண்டில் மருத்துவம் பட்டம் பெற்றனர்.

கடம்பினியும், துவாரகநாத் கங்கூலியும் பெண்விடுதலைக்காகவும் இந்தியாவின் கிழக்குப் பகுதியிலிருந்த நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்த பெண்களின் பணிவரைமுறைகளைச் சீர்திருத்தவும் பாடுபட்டனர். 1889ல் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் ஐந்தாவது கூட்டத்தொடரில் பங்கேற்ற ஆறு பிரதிநிதிகளில் கடம்பினி கங்கூலியும் ஒருவர். வங்காளப் பிரிவினைக்குப் பிறகு 1906ல் கல்கத்தாவில் மகளிர் மாநாட்டை நடத்தினார். 1908ல் தென்னாப்பிரிக்காவிலுள்ள டிரான்ஸ்வாலில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட வேலையாட்களுக்கு அனுதாபமும் ஆதரவும் தெரிவிக்கும் வண்ணம் கல்கத்தாவில் ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து அதற்குத் தலைமை தாங்கி நடத்தினார். அந்தப் பணியாளர்களூக்கு உதவிசெய்ய சங்கங்கள் அமைத்து நிதி திரட்டினார். 1914ல் கல்கத்தாவுக்கு வந்த மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்த சதாரன் பிரம சமாஜ் நடத்திய கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

எட்டுக் குழந்தைகளுக்குத் தாயான கங்கூலி வீட்டுப்பணிகளுக்கும் அதிகநேரம் செலவிட நேரிட்டது. அவர் தையற்கலையிலும் தேர்ந்தவராயிருந்தார். கடைசி காலம் வரை, பெண்கள் படிக்கவும் சுயமாகச் சிந்திக்கவும் வழிகாட்டிய கடம்பினி, 1923ல் இதே நாளில் மறைந்தார்.