February 7, 2023

கபாலி’… ‘ரசிகர்களுக்கு’ மகிழ்ச்சி!

  • 2016-ம் ஆண்டில் அதிக எதிர்பார்புகளுக்குள்ளான திரைப்படம்!
  • சில வருடங்களுக்கு முன்பு வரையில் வயதான கெட்டப்பில் நடித்துவந்த ரஜினிகாந்த், முதல் முறையாக தனது வயதுக்குரிய கதாபாத்திரத்தில் ‘சால்ட் & பெப்பர்’ தோற்றத்தில் நடித்திருக்கும் படம்.
  • மலேஷியாவில் எதிர்பார்ப்பை மட்டுமல்ல, ட்ரெண்ட்டிங்கையும் உருவாக்கியிருக்கும் முதல் தமிழ்ப்படம்.
  • இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதிலும் பரவலாக இருக்கும் தமிழர்கள் அனைவரையும் பேச வைத்த தமிழ்ப்படம்.
  • முதல் முறையாக 50,000 அடிகளுக்கும் மேலான உயரத்தில் ஒரு மாபெரும் தமிழ் நட்சத்திரத்தை உயர்த்திப் பறக்கவிட்டு உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தப் படம்.
  • அரசர்கள், தேசத் தலைவர்களின் உருவங்கள் மட்டுமே நாணயங்களில் அச்சிடப்பட்டு வந்ததையும் உடைத்து ஒரு திரை நட்சத்திரத்தின் படத்தை வெள்ளி நாணயங்களில் பொறித்து விற்பனைக்கு இறக்கி புதுமைப் படைத்த படம்.
  • அடுத்து வருகிற நாட்களில் சீனா, ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் மொழி மாற்றம் செய்து வெளியாக இருக்கும் தமிழ்ப்படம்

1

என எக்கச்சக்கமான ’கமர்ஷியல்’ சமாச்சாரங்களுடன் வெளிவந்திருக்கிறது ‘கபாலி’. திரையரங்கின் உள்ளே நுழையும் போதே, இந்த ’ட்ரெண்டிங்’ சமாச்சாரங்களுக்கெல்லாம் எப்படி தீனிப் போட்டிருக்கிறார்கள் என்ற கேள்வி தானாகவே மனதில் தொற்றிக் கொள்வது என்னவோ உண்மைதான்.

கிழக்கு இந்திய கம்பெனி உலகம் முழுவதும் கோலோச்சிய காலக்கட்டத்தில், மலேஷியாவின் கட்டமைப்பிற்கும், அங்கு இருந்த தோட்டங்களிலும் கூலிக்கு வேலைப் பார்ப்பதற்காக இந்தியாவிலிருந்து பல மக்களை அழைத்துச் சென்றது ஆங்கிலேய அரசு.

குறிப்பாக திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்த மக்கள் பிழைப்பிற்காக மலேஷியாவிற்கு கூலித் தொழிலாளர்களாக தங்கள் ரத்தத்தைச் சிந்தி மலேஷியாவை உருவாக்கினார்கள். மலேஷியாவைக் கட்டமைக்க உதவிய தமிழர்களுக்கு நியாயமான சம்பளம் மற்றும் அங்கீகாரம் வேண்டுமென போராடிய தியாகிகள் பலர்.

இந்த தன்மான போராட்டத்தை பின்னணியாக  வைத்து ‘கபாலி’யை களமிறக்கி இருக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித்.

raj

கடல் தாண்டியும் தன்மானத்தை இழக்காத தமிழர்கள், அவர்களுக்கு பின்னால் குழிப்பறித்த கூட்டம், நிழல் உலக போட்டி என முதல்முறையாக புதிய கதைக்களத்தை எடுத்ததற்காக பா. ரஞ்சித்திற்கு பாராட்டுகள்!

‘பாக்ஸ் ஆபீஸ் பாட்ஷா’ சூப்பர் ஸ்டார் ரஜினியின் கண்ணசைவின் மூலம் கோலாலாம்பூரில் இருக்கும் ’பெட்ரோனாஸ் ட்வின் டவரை’கூட ஒரே நேனோ செகண்ட்டில் நம்மூர் மெரினா கடற்கரைக்கு ஷிப்ட் செய்ய முடியும். என்ற மேஜிக்கை நம்பாமல், ரஜினியை ஒரு நடிகராக மட்டுமே களமிறக்க முயற்சித்திருக்கும் படம்.

kab jy 22 a

’கபாலி டா…’ என கர்ஜிப்பதிலிருந்து படம் முழுக்க ‘ரஜினி டா…’. சால்ட் & பெப்பர்  ரஜினியின் அசல்  ’அட!’ என சொல்ல வைக்கிறது. தாடியில் வலம்வரும் ரஜினி, இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து தனது மனைவியைக் காணச் செல்லும் போது, ’முள்ளும் மலரும்’ லுக்கில் ஷேவ் செய்தபடி மாடிப்படியில் இறங்கிவருவது அசத்தல் எமோஷன். பல காட்சிகளில் பரபர கமர்ஷியல் சுழலில், நாம் பறிகொடுத்த ’அபாரமான நடிகர்’ என்பதை நம்மால் உணரமுடிகிறது.

அடுத்து கிஷோர், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ஜான் விஜய், ரித்விகா, கலையரசன் என நட்சத்திரப் பட்டாளம் படம் முழுக்க ஆக்ரமித்திருக்கிறது. ராதிகா ஆப்தே அசால்ட்டாக அசத்துகிறார். தன்ஷிகா பரபரக்க வைக்கிறார். ஜான் விஜய் கேஷூவலாக நடித்திருக்கிறார்.

பிரிந்த கணவரையும், மகளையும் சந்திக்கும் காட்சியில், “நாம் எவ்வளவு நாள் இப்படி வாழ்ந்திருப்போம்?’ என ரஜினி கேட்க, “இரண்டுவருஷம் இரண்டு மாசம் 18 நாள்” என்று சொல்லும் ராதிகா ஆப்தே அடுத்து “இத்தனை வருஷமா அதை மட்டுமே நினைச்சுதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்’ என்று சொல்லும் காட்சி ஹைவோல்டேஜ் காதல்.

sa

mu

pr

படத்தின் அடுத்த டாப் ஸ்டார்கள் இசையமப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஒளிப்பதிவாளர் முரளி.ஜி. மற்றும் படத்தொகுப்பாளர் ப்ரவீன். கே.எல். இந்த மூவர் கூட்டணி படத்தை சரியான ட்ராக்கில் எடுத்துச் செல்கிறது.

ஆனாலும் படத்தொகுப்பாளர் காட்சிகளை தொகுக்கும்போது கொஞ்சம் கருணைக் காட்டாமல் இருந்திருக்கலாம். ’டீடெய்ல்ஸ்’ என்ற பெயரில், படம் பார்ப்பவர்களுக்கு புரிந்த விஷயத்தை விவரிக்க ப்ளாஷ்பேக் காட்சிகளையும் விட்டு வைத்திருப்பது திரைக்கதையின் ஓட்டத்தைப் பாதிக்கிறது. உதாரணத்திற்கு ஜான் விஜயின் ஆக்ஸிடெண்ட்  மற்றும் அட்டக்கத்தி தினேஷின் துண்டான கை ஆகியவற்றுக்கு பின்னால் வரும் விளக்க காட்சிகள். நம் தமிழ் ரசிகர்கள் விஷூவல் மீடியத்தை டிடர்ஜெண்ட்டோடு, ஷாம்பூவையும் கலந்து அலசி எடுத்து துவைத்துவிடும் கில்லாடிகள் என்பதை இனி படைப்பாளிகள் கவனத்தில் கொள்க.

நிதானமான காட்சி அமைப்பு. ரஜினியை வைத்து எடுத்திருக்கும் ‘க்ளாஸிக்கலான மேக்கிங்’ என்ற க்ரெடிட்டை தக்கவைக்க வேண்டுமென்ற மெனக்கெடல் போன்ற அம்சங்கள் கதை மெதுவாக நகர்வது போன்ற உணர்வைத் தருவதைத் தவிர்க்க முடியவில்லை.

படத்தின் இடைவேளைக்கு முன்னர் ரஜினி குண்டடிப்பட்டு கீழே சாயும் காட்சி ஷாக் கொடுப்பதாக இருந்தாலும், அடுத்து வருகிற காட்சிகள் யூகிக்கக் கூடியதாகவே அமைந்திருப்பது, தன்ஷிகா மகளாக இருக்கலாமோ என்ற யூகம்,  தனது படை, பலம் அனைத்தையும் இழந்த நிலையில், வில்லன் டோனி லீயைப் புரட்டிப் போடும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் திரைக்கதை செகண்ட் கியரிலேயே பயணிக்கிறது.

2

ஆனால், ரஜினியின் ‘காட் ஸ்பீட்’டை குறைத்துவிட்டு, அவரது ரசிகர்களுக்கேற்ற க்ளாஸ் படமாகவும், சமூகத்தின் அடிநிலை உழைப்பாளிகளின் மனநிலையைப் பிரதிபலிக்கும் ஒரு கமர்ஷியல் கருத்துப் படமாகவும் எடுத்திருக்கிறார் பா. ரஞ்சித்.

மலேஷியாவில் உழைப்பைக் கொட்டியும், உயிரை விட்டும் அங்கீகாரம் கிடைக்காத உழைப்பாளிகளாக திகழ்ந்த தமிழர்களின் குரலை ரஜினி என்ற மக்களின் மனதைக் கவரும் ‘காந்தம்’ மூலம் கமர்ஷியலாக ஒலிக்க விட்டிருக்கிறார் இயக்குநர். அதற்கும் சாதீய கலர்கோட்டிங்கை தீட்டாமல், இந்தப்படம் எங்கள் கலாச்சார படம் என சமூக வலைத்தளங்களில் குறிப்பிடாமல் தமிழர்களின் குரலாகவே பதிவுச்செய்யப்பட்டால் மகிழ்ச்சி.

க்ளைமேக்ஸ் இயக்குநரின் ஸ்மார்ட் மூவ்!

மொத்தத்தில் ‘கபாலி’… ‘ரசிகர்களுக்கு’ மகிழ்ச்சி!

ரவிஷங்கர்