September 29, 2021

கபாலி முதல் நாள் டிக்கெட் எனக்கும் வந்துச்சு..-ஆனா வேணாமுன்னுட்டேன்!

கபாலி படத்தின் பயணச்சீட்டை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள சில மென்பொருள் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து மொத்தமாக வாங்கிவிட்டார்கள். எனக்கும் ஒரு டிக்கெட் வந்தது. விலை அறுநூறு என்றார்கள். என்னால் வாங்கக்கூடிய விலைதான். ஆனா சீட்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். முக்கியமான காரணம் எனக்கு நேரம் இல்லாமையும். என்னால் வார இறுதி நாட்களில் மட்டுமே பொழுதுபோக்குகளுக்கு நேரம் ஒதுக்க முடியும். தவிர நான் பொதுவாகவே எந்த திரைப்படத்தையும் ஒரு வாரம் கழித்தே பார்ப்பேன். முதல் மூன்று நாட்களுக்கு கபாலி திரைப்படத்தை சாமானிய மக்களால் பார்க்கமுடியாது. மேட்டுக்குடி வர்க்கம் மட்டுமே பார்க்கமுடியும். மேட்டுக்குடி என்பது பணத்தை அளவீடாக வைத்து சொல்லவில்லை.

edit jy 21

அது மனோபாவம் (Attitude) நீங்கள் ஏழையாக இருந்தால் கூட கிட்னியை வித்தாவது படம் பார்க்க வேண்டும். அல்லது ரெமி மார்ட்டின் வாங்கி குடிக்க வேண்டும் என்று நினைத்தால் அதுதான் மேட்டுக்குடி மனோபாவம். பல்லு இருக்கறவன் பக்கோடா திங்கட்டும். வாங்கும் திறன் உள்ளவர்கள் வாங்கட்டும் என்று இதை அலட்சியமாக விட்டுவிடமுடியாது. எல்லா சமூக குற்றங்களும் இங்குதான் ஆரம்பமாகும்.

ஓர் உதாரணம். தற்பொழுது நீர் என்ற நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதில் எட்டாவது அத்தியாயத்தில் எனது சொந்த அனுபவமொன்றை எழுதியுள்ளேன். கடந்த ஆண்டு டிசம்பர் இரண்டாவது வாரம் எங்கள் பகுதி மிக மோசமான வெள்ளத்தால் பாதிக்கபட்டிருந்தது. எல்லாரும் ஊரை காலி செய்து வெளியூர் சென்றுவிட்டார்கள். சிலர் மட்டுமே விதியே என்று வீட்டிலேயே தங்கிக்கொண்டார்கள். எனக்கு தினமும் அலுவலகம் செல்லவேண்டும். வீட்டில் மின்சாரம் இல்லை. குடிநீர் இல்லை. ஏதாவது ஒரு விடுதியில் தங்கிக்கொள்ளலாமென்று தெரிந்த விடுதிகளை தொடர்பு கொண்டேன். எல்லா விடுதிகளையும் விஐபிக்கள், அரசியல் பிரமுகர்கள், உயரதிகாரிகள் ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்திருந்தார்கள். தெரிந்த நண்பரின் உறவினர் அரசியல்வாதி ஒருவரிடம் வேலை செய்கிறார். அவர் வழியாக ஒரு நட்சத்திர விடுதியை தொடர்புகொண்டேன். அவர்கள் சொன்ன அறைக்கட்டணம் மலைப்பாக இருந்தது.

ஏன் இப்படி அதிக கட்டணம் வசூலிக்கின்றீர்கள் என்று கேட்டேன். நாங்கள் மட்டுமா செய்கிறோம்? பால் பாக்கெட், குடிநீர் எல்லாமே இரண்டு மடங்கு விலையில்தானே விற்கிறார்கள். நாங்க ஜெனரேட்டரில்தான் விடுதியை நடத்துகிறோம். டீசல் விலை இரண்டு மடங்காக பிளாக்கில் விற்கிறார்கள் என்றார்கள். என்னிடம் கையில் பணம் கடன் அட்டை இருந்தாலும் நான் அந்த விடுதிக்கு செல்லவில்லை. தெரிந்த நண்பர்கள் பலர் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். எங்கள் வீடு சாதாரணமாகத்தான் இருக்கும். வந்து தங்கிக்குங்க என்று அழைத்தார்கள். நான் எங்கும் செல்லவில்லை.

எனது தெருவில் நீர் இறக்கும் வேலூர் மாவட்ட தொழிலாளர்கள் காலில் உப்பை தடவிக்கொண்டு அதே சாக்கடை நீரில்தான் நாளெல்லாம் படுத்துகிடந்தார்கள். டிரெயினேஜ் மேன்ஹோல் பக்கத்தில் உட்கார்ந்துதான் சாப்பிட்டார்கள். சிகரெட் குடித்தார்கள். அவர்கள் நிலைமையை விட எனது நிலைமை ஒன்றும் மோசமில்லை. குடியா முழுகிடும் என்று நாஞ்சில் சம்பத் போல எனக்குள் கேட்டுக்கொண்டு வீட்டிலேயே தங்கி நிலைமையை சமாளித்தேன். இரண்டு வாரங்கள் கழித்து அதே நட்சத்திர விடுதியிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. எங்கள் விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. சலுகை விலையில் உங்களுக்கு கட்டணக்குறைப்பு தருகிறோம். எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம். சாப்பிடலாம் என்றார்கள். சிரித்தபடி அவர்களிடம் உங்கள் விடுதிக்கு வரும் தகுதி எனக்கில்லை என்று சொல்லிவிட்டேன்.

2012 என்ற திரைப்படத்தில் உலகம் அழிந்துவிடும் என்று செய்தி பரவும்போது பணக்காரர்கள் எல்லாரும் சேர்ந்து சீனாவில் ஒரு பிரமாண்ட கப்பல் கட்டுவார்கள். அந்த கப்பலில் எல்லாரும் ஏறமுடியாது. கப்பலின் பயணச்சீட்டு மில்லியன்டாலர் விலையில் இருக்கும். உலகின் பணக்காரர்கள் எல்லாரும் அந்த சீட்டை வாங்கிவிடுவார்கள். ஏழைகள் எல்லாரும் ஊழியில் சிக்கி இறந்துவிடுவார்கள். கபாலி படத்தின் கட்டண விலை நியாயம் என்றால் அந்த கப்பலின் கட்டணமும் நியாயம்தானே?

எல்லாரும் வாங்கக்கூடிய ஒரே தரத்திலான பொருளை சிலர் மட்டும் சலுகை விலையில் அதிக விலையில் பெற்றால் அங்கு எதோ கோளாறு நடக்கிறது என்றுதான் அர்த்தம். நம்மால் அதை வாங்கமுடியும். பணம் இருக்கிறது என்றாலும் அதை நாம் வாங்ககூடாது என்பதை இந்த பேரிடர் எனக்கு உணர்த்தியது.

விநாயகமுருகன்