காரி – விமர்சனம்!

காரி – விமர்சனம்!

ல்லிக்கட்டு போட்டி என்பது ஒரு மனிதர் காளையின் திமிலைப் பிடித்துக்கொண்டு 20-30 அடி தூரத்துக்கு, அதிகபட்சமாக 10-20 விநாடிகள் ஓடுவது மட்டுமே. அதனால்தான் ஏறு தழுவுதல் எனப்பட்டது. வாய்ப்பிருந்தால், பரிசுத்தொகை கட்டப்பட்ட துண்டைக் கொம்பால் குத்துப்படாமல் அவிழ்ப்பதில்தான் லாகவம் அடங்கியிருக்கிறது. எந்த ஊரிலும் மாட்டைத் தனியாகப் பிடிக்க யாரும் முயற்சிப்பதில்லை; கொம்பைப் பிடித்து அடக்க முயற்சிப்பதும் இல்லை. ஒரு காளை ரத்தம் சிந்தினால்கூட ஜல்லிக்கட்டு நிறுத்தப்படும் என்பது விதி. ஆனால் சிலர் சொல்வது போல் காளையைக் கொடுமைப்படுத்துவதோ, வதைக்கும் விளையாட்டோ அல்ல என்பதை மட்டுமின்றி இவ்வகை விளையாட்டுகளால் பாரம்பரிய நாட்டு மாடுகளை பாதுகாக்கவும் முடிகிறது என்பதை ஆழமாகச் சொல்ல. தமிழகத்தில் ஏற்கெனவே இருந்த 87 நாட்டு மாடுகளில் ஒன்றான காரி வகை மாட்டுடன் ஏகப்பட்ட சென்டிமெண்டுகளோடு வந்து இருக்கும் படமே ‘காரி’..!

சிட்டியில் ஜாக்கி என்றழைக்கப்படும் குதிரை ரேஸ் வீரராக இருக்கிறார் சசிகுமார். அவரது அப்பா ஆடுகளம் நரேன் ரேஸ் கோர்ஸ் இன்சார்ஜாக இருக்கிறார், கூடவே பல்வேறு பிரச்னகளுக்காக போராட்டங்களில் ஈடுபட்டுவதும் வாடிக்கை. அந்த அப்பாவின் போக்கையோ அல்லது குணத்தையோ புரிந்து கொள்ளாத நாயகன் சசிகுமார் அப்பாவுடன் சண்டைப் போட்டு, நண்பன் பிரேமுக்கு ஹெல்ப் பண்ணும் நோக்கில் ஒரு பந்தயத்தில் சசிகுமார் தோற்று விடுகிறார், அதன் காரணமாகவே அந்த குதிரை உயிரை விடுகிறது. அதை அடுத்து அந்த குதிரை மீது உயிரையே வைத்திருக்கும் நரேனும் உயிரை விடுகிறார். அந்த திடீர் மரணத்திற்கு பின் அப்பாவின் பெருமைகளை தெரிந்து கொள்ளும் சசிகுமார் தன்னுடைய சொந்த கிராமத்துக்கு சென்று அங்கே ஜல்லிக்கட்டு நடக்கவிருக்கும் நிலைமையில் தான் கற்ற குதிரை ரேஸ் டெக்னிக்குகளை பயன்படுத்தி ஜல்லிக்கட்டில் கலந்து ஊர்ப் பெருமையை காப்பாற்றிவதுதான் காரி கதை.

சேது என்ற கேரக்டரில் நடித்திருக்கும் சசிகுமார், முதல் பாதியில் வெள்ளைச்சாமியின் வாரிசாக சென்னை தமிழ்வாசியாக வருபவர், இரண்டாம் பாதியில் இராமநாதபுர இளைஞராக மாறி தன் மக்களுக்காகவும், ஊருக்காகவும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ரசிக்கும்படியே உள்ளது. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தனது தந்தையின் எண்ணத்தை புரியாமல் உதாசினப்படுத்தியதை உணரும் சசிகுமார், இரண்டாம் பாதியில் தனது தந்தை வழியில் பயணிக்கும் பாணி அருமை.. சசிகுமார் வழக்கமான பாணியில் நடித்திருந்தாலும், இப்படத்துக்கு தேவையானதை வழங்கி விடுகிறார் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதையில் பார்வதி அருண் சிறப்பாகவே நடித்திருந்தார், அதிலும், தனது காளையை கேட்டு அவர் மண்ணில் புரண்டு அழும் காட்சியில் கைதட்டல் பெறும் விதத்தில் நடித்திருக்கிறார். அவருடைய அப்பாவாக பாலாஜி சக்திவேல் அந்த கதாபாத்திரத்திலேயே வாழ்ந்துள்ளார்.

ராம்நாட் டிஸ்ட்ரிக்கின் வறட்சியை கண் முன் கொண்டு வந்திருக்கும் கேமராமேன் கணேஷ் சந்திரா, இரண்டாம் பாதியில் அதே ஊரை விவசாய பூமியாக காட்சிப்படுத்திய விதம் அபாரம். ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடுகளின் வேகத்தையும், வீரியத்தையும் மிக நேர்த்தியாக படமாக்கி வாப் சொல்ல வைக்கிறார். டி.இமான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. வழக்கமான தனது பாணியை தவிர்த்திருக்கும் டி.இமான், தனது அடையாளமே இல்லாமல் புதிதாக இசையமைத்திருக்கிறார். குறிப்பாக பின்னணி இசைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது.

கதை எழுதி இயக்கியிருக்கும் ஹெமந்த், ஜல்லிக்கட்டு போட்டியின் மூலம் மாடுகளை மக்கள் கடவுளாக தான் வணங்குகிறார்களே தவிர, அவற்றை எந்த விதத்திலும் துன்புறுத்துவதில்லை, என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். கூடவே நகரில் நடக்கும் குதிரைப் பந்தய தில்லுமுல்லுகள், ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்ப்பவர்களின் பின்னால் இருக்கும் பிரச்சனைகள், இவற்றுடன் தரிசாக ஆன நிலங்களை குப்பை மேடாகவும் கழிவு நீரை கொட்டும் களமாகவும் ஆட்சியாளர்களே ஆக்கி வருவதையும் படம் வன்மையாக விமர்சித்து சொல்லி இருக்கும் திரைக்கதை பாணி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஆனாலும் சொல்ல வேண்டியதையும் தாண்டி சில பல விஷயங்களை வலிந்து திணித்து இருப்பதை குறைத்திருக்கலாம்

மொத்தத்தில் இந்த காரி – கவர்கிறான்

மார்க் 3.25/5

error: Content is protected !!