March 21, 2023

எஸ்பிஜி வீரர்கள் பற்றி இருந்தாலும் பொழுது போக்கு நிறைந்த படம்தான் ‘காப்பான்’

கோலிவுட்டில் ஹிட் அடித்த ‘அயன்’, ‘மாற்றான்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த், சூர்யா மூன்றாவது முறையாக ‘காப்பான்’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் சாயீஷா ஹீரோயினாக நடிக்க மோகன் லால், ஆர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சமுத்திரக்கனி, பாலிவுட் நடிகர் பொம்மன் இராணி, தலைவாசல் விஜய், பிரேம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்திருக்கிறார். வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. இதில், சூர்யா, ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, இயக்குநர் கே.வி.ஆனந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய சமுத்திரக்கனி, “இது போன்ற ஒரு வேடத்தில் இதுவரை நான் நடித்ததில்லை. இது எனக்கு புதுஷாக இருந்தது. இந்த படத்தில் நான் அதிகம் பேசவில்லை. என்னை வித்தியாச மான முறையில் இயக்குநர் கே.வி.ஆனந்த் கையாண்டிருக்கிறார்.” என்றார்.

நடிகர் ஆர்யா பேசும் போது, “கே.வி.ஆனந்த் சார் படத்தில் நடிக்க நான் ரொம்ப நாளாக முயற்சித்து வருகிறேன். அவர் முதல் படம் இயக்கும் போதே நான் முயற்சித்தேன். ஆனால், இப்போது தான் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் நான் சூர்யா சாருடன் இணைந்து நடித்தது பெருமையாக இருக்கிறது. அவர் எனக்கு சினிமாவை தாண்டி வாழ்க்கை குறித்தும் நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுத்தார். அவருக்கு என்னை பிடித்ததனால் தான், அவர் எனக்கு சொல்லிக்கொடுத்தார் என்று நினைக்கிறேன், அவரது டெடிக்கேஷனை பார்த்து நான் மிரண்டு விட்டேன், அது எனது சினிமா பயணத்திற்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

இயக்குநர் கே.வி.ஆனந்த் பேசுகையில், “இந்த படத்தின் கதை 2012 ஆம் ஆண்டு தயாரானது. ஆனால் அப்போது இந்த அளவுக்கு பெரிதாக உருவாக்கப்படவில்லை. போலீஸ், ராணுவம் பற்றிய நிறைய படங்கள் வந்துவிட்டன. ஆனால், பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் எஸ்.பி.ஜி வீரர்கள் பற்றி இதுவரை எந்த படத்திலும் சொல்லவில்லை. மற்ற வீரர்கள் தங்களை பாதுகாத்துக்கொண்டு தாக்குதல் நடத்துவார்கள். ஆனால், எஸ்பிஜி வீரர்கள் மட்டுமே குண்டுக்கு எதிராக நின்று, தலைவர்களை காப்பாற்றுவார்கள். மொத்தத்தில் சாவுக்காகவே சம்பளம் வாங்குபவர்கள் அவர்கள் தான். அவர்களைப் பற்றி ஒரு கதை எழுத வேண்டும் என்று நினைத்து தான் இந்த கதையை எழுதினேன்.

நான் கதை சொல்கிறேன் என்றால் அதை கேட்க பல ஹீரோக்கள் ரெடியாக இருந்தாலும், இந்த கதைக்காக யார் அர்ப்பணிப்பாக வேலை செய்வார்கள்? என்ற கேள்வி என்னுள் இருந்தது. அது குறித்து யோசித்த போது எனக்கு சூர்யா தான் முதலில் நினைவுக்கு வந்தார். அதனால் தான் அவருடன் மீண்டும் இணைந்திருக்கிறேன். இந்த கதை சூர்யா மீது மட்டும் நகராது. திடீரென்று ஆர்யா மீது நகரும், பிறகு சாயீஷா, பிரேம் என்று படத்தில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்கள் மீதும் கதை நகரும். அது தான் படத்தின் ட்விஸ்ட். எஸ்பிஜி வீரர்கள் பற்றிய படமாக இருந்தாலும், அதை பொழுது போக்கு நிறைந்த படமாக எடுப்பதில் பெரிய சவால் இருந்தது. அந்த சவாலை நான் திறமையாக சமாளித்துவிட்டேன் என்று தான் நினைக்கிறேன். படம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.” என்றார்.

இந்த படம் குறித்து பேசிய சூர்யா, “மூன்றாவது முறையாக கேவி சாருடன் இணைந்தது மகிழ்ச்சி. பிற ஹீரோக்களுக்காக உருவாக்கப்படும் கதை, ஏதோ காரணத்திற்காக என்னிடம் வந்து சேரும். அப்படி வரும் படங்களில் நான் நடித்தால் அந்த படம் பெரிய வெற்றி தான். இது என் வாழ்க்கையில் இருக்கும் ஒரு அதிஷ்ட்டம் என்றே சொல்வேன். காப்பான் இதுவரை நான் நடிக்காத ஒரு வேடம். எஸ்.பி.ஜி வீரர்கள் குறித்த ஒரு படம், இதுவரை அவர்கள் பற்றி வெளி உலகத்திற்கு எந்த தகவலும் தெரியாது. தலைவர்களின் உயிரை பாதுகாக்கும் பணியை செய்யும் அவர்கள், எதாவது பிரச்சினை என்றால், தங்களது உயிரை விட ரெடியாக இருப்பார்கள், அப்படிப்பட்டவர்கள் குறித்த கதையில் நடிப்பது மகிழ்ச்சி. இப்படத்திற்காக நான்கு நாட்கள் எஸ்பிஜி வீரர்களுடன் தங்கியிருந்தேன். அப்போது அவர்கள் அனைவரும் என்னை அவர்களில் ஒருவனாக பார்த்துக் கொண்டார்கள்.

இந்த கதை என்னை சுற்றி மட்டுமே நகராது. ஆர்யா, சாயீஷா, மோகன்லால் சார் என அனைத்து கதாபாத்திரங்கள் மீதும் நகரும். மோகன்லால் சாருடன் நடித்த மகிழ்ச்சி. அவர் பெரிய லெஜண்ட். சாதாரணமாக இருக்கிறார், ஆனால் நடிப்பு என்று வந்துவிட்டால் அந்த வேடமாக இருக்கிறார். அது பார்த்து கற்றுக்கொள்ள கூடிய விஷயமில்லை. மூளையில் நிகழும் ஒரு மேஜி. அதை தான் அவர் செய்கிறார்.

லைகா நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. இதுவரை நான் நடித்த படக்களிலேயே காப்பான் தான் மிகப்பெரிய படம் என்று சொல்வதில் மகிழ்ச்சி. சுபாஷ்கரன் சார் படக்குழுவினரை நன்றாக பார்த்துக்கொண்டார். லண்டனில் படப்பிடிப்பு நடந்த போது அவரே சமைத்து கொடுத்தார். காப்பான் நிச்சயம் ரசிகர்களுக்கும், அதே சமயம் பொதுஜன மக்களுக்கும் பிடித்த படமாக இருக்கும்.” என்றார்.