காளி – திரை விமர்சனம்!

காளி – திரை விமர்சனம்!

தமிழ் சினிமாவில் அம்மா என்ற மூன்றெழுத்தை வைத்துக் கொண்டு கதை என்ற இரண்டெழுத்தே இல்லாமல் ஒரு மூன்று மணி நேரத்திற்கு முழு நீள சினிமா வழங்கும் போக்கு காலம் காலமாகவே இருக்கிறது. இந்த அம்மா செண்டி மெண்டை வணிக ரீதி தொடங்கி வைத்தது கருணாநிதி (மனோகரா) என்று சொல்வோர் ஒரு பக்கம் இருந்தாலும் இன்று வரை பல ஹீரோகள் தங்கள் மார்கெட்டை தக்க வைக்க இந்த மதர் சப்ஜெக்ட்டுக்குள் நுழைவது வாடிக்கை யாகி விட்டது. அது மாதிரியான ஒரு அம்மா கதைக்குள் விஜய் ஆண்டனி ஏற்கெனவே பயணித்து பிச்சைக்காரன் என்ற பெயரில் கோடீஸ்வரர்ரானர். அதன் பிறகு ட்ராக் மாறி நெகட்டிவ் டைட்டில் மூலம் எங்கெங்கோ ட்ராவல் செய்தவரை கிருத்திகா உதயநிதி மறுபடியும் அம்மா மடியில் அமர வைத்து அழகுப் பார்த்திருக்கிறார். இதற்காக அவர் எடுத்துக் கொண்ட கதைக் களத்திற்கு ரொம்ப மெனக்கெடவில்லை.. நம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த பல சம்வங்களையே ஜிகினா ஒட்டி மின்ன வைத்து விட்டார்..

அதாவது அமெரிக்காவில் பாரத் என்ற பெயரில் ஒரு பிரமாண்டமான ஹாஸ்பிட்டலை நிர்வகித்து வரும் டாக்டர் விஜய் ஆண்டனி, படு பிசியான அந்த விஜய் ஆண்டனிக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. அந்த கனவில் ஒரு அம்மா-மகன், ஒரு மாடு, ஒரு பாம்பு வருகிறது.அதன் காரணம் புரியாமல் குழம்பும் நிலையில், விஜய் ஆண்டனியின் அம்மாவுக்கு கிட்னி செயல் இழந்த நிலையில் இவர் ஹாஸ்பிட்ட அனுமதிக்கப்படுகிறார். இதையடுத்து தனது அம்மாவைக் காப்பாற்ற தன்னிடமுள்ள கிட்னி ஒன்றை கொடுக்கப்போவதாக விஜய் ஆண்டனி அவரது அப்பாவிடம் கூறுகிறார்.

ஆனால் விஜய் ஆண்டனியின் கிட்னி அவரது அம்மாவுக்கு பொருந்தாது என்றும், அவரை ஆசிரமம் ஒன்றில் இருந்து தத்து எடுத்து வந்ததாக விஜய் ஆண்டனியின் அப்பா கூறுகிறார். இதில் கொஞ்சம் அதிர்ந்த நிலையில் தனது கனவில் வருவது யார்? தன்னை பெற்ற அம்மாவா? அவர் தற்போது எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்பதை அறிய தான் இந்தியாவுக்கு போய் வருவதாக தனது வளர்ப்பு பெற்றோரிடம் கூறிவிட்டுச் செல்கிறார்.

இந்தியா வந்த இடத்தில் தனது அம்மா இறந்துவிட்டதை தெரிந்து கொள்கிறார். இதையடுத்து தனது அப்பா யார் என்பதை தேடி செல்கிறார். அவருக்கு துணையாக யோகி பாபு ஜோடி சேருகிறார். தன் தேடலுக்காக ஒரு கிராமத்தில் போய் இலவச மருத்துவம் செய்கிறேன் என்ற பெயரில் அவ்வூரிள்ள எல்லோர் ரத்தத்தையும் சாம்பிள் எடுத்து அவர்களது டி.என்.ஏவை, தனது டி.என்.ஏவுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்.

இதில் அந்த ஊர்த் தலைவரான மதுசூதனன் தான் தனது தந்தையாக இருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது. பின்னர் அவரது கதையை கேட்டு தெளிவாகி தேடலை தொடர்கிறார். அப்போது வேல ராமமூர்த்தி பற்றிய கதையையும் கேட்கிறார். இந்த நிலையில், அதே ஊரில் சித்த மருத்துவராக வரும் அஞ்சலிக்கு, விஜய் ஆண்டனி மீது காதல் வருகிறது. இப்படியான நிலையில் விஜய் ஆண்டனி தனது அப்பாவை கண்டுபிடித்தாரா? விஜய் ஆண்டனியின் அம்மா யார்? விஜய் ஆண்டனி – அஞ்சலி இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

‘வணக்கம் சென்னை’ என்ற டிஃப்ரண்டான படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி கொஞ்சம் எக்ஸ்ட்ரா ரெஸ்ட் எடுத்து விட்டு பண்ணி இருக்கும் நல்ல கமர்ஷியல் படம் இது. அதிலும் திரைக்கதையில் டாக்டர், காலேஜ் ஸ்டூடண்ட், திருடன், சர்ச் ஃபாதர் என அத்தனை கேரக்டருக்கும் விஜய் ஆண்டனியை பொருத்தி அதில் விஜய் ஆண்டனியை நடிக்கவும் அடிக்கவும் வைத்திருப்பதில் தனி ஸ்கோர் செய்திருக்கிறார். ஆம்.. பல்வேறு கேரக்டர் களின் பிளாஷ்பேக் – காட்சிகளின் பல்வேறு முக்கிய கதாபாத்திரமாக விஜய் ஆண்டனியே வருவது தனிச் சிறப்பு.. அதிலும் ஆரம்பத்தில் ஒரு பிளாஷ் பேக் கேரக்டரை யோகி பாபு பாயிண்ட் ஆஃப் வியூவாக காண்பிப்பது புத்தி சாலித்தனம் என்றே சொல்ல லாம். நாட்டு வைத்தியராக அஞ்சலி ’மனசு காயப்பட்டிருக்கு மருந்து போட ணும் தூக்கம் கூட வரலை … ’ என்று உருகும் ரோல் ரசிக்கும்படி வந்திருக்கிறது. சுனைனா அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதாவும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்தி ருக்கின்றனர்.

டெக்னிஷியன் லிஸ்டை எடுத்துக் கொண்டால் சக்தி சரவணனின் தனிக் கவனிப்பில் அதிரடி சண்டையும், லாரன்ஸ் கிஷோரின் பக்கா படத்தொகுப்பில் ,ரிச்சர்ட் M. நாதனின் ஒளிப்பதிவில் , மொத்த படமும் சலிப்பில்லாமல் போகிறது.

பின்னணி இசை, பாடல்களில் விஜய் ஆண்டனி தனிக் கவனம் செலுத்தி இருக்கிறார் . குறிப்பாக அரும்பே பாடல் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் இனிமையாகவே இருக்கிறது.

மொத்தத்தில் இந்த காளி- யை காண்போர் ஜாலியாக திரும்புவார்கள்!

மார்க் 5 / 3

error: Content is protected !!