சினிமாக்கென சிரிப்புக் கதைக்காக மெனெக்கெடுவதைவிட எக்கச்சக்கமாக மண்டையை கசக்க வேண்டிய விசயம் த்ரில்லர். படம் பார்ப்போரை கொஞ்சம் குழப்பி, கொஞ்சம் பயமுறுத்தி, கொஞ்சம் யோசிக்க வைத்து, கொஞ்சம் மாற்றி யோசிக்க வேண்டிய சமாச்சாரம். இந்த டைப் கதைகள் சாதாரண சினிமாக்களைவிட பட்ஜெட் விஷயத்தில் எக்கச்சகமான நன்மைகள் உடையதுதான் . ஆனால், பெரும்பாலும் ஒரே அறைக்குள் உங்களுக்கு அலுப்பு தட்டாமல் கதையை சொல்ல வேண்டும் என்கிற சவால்தான் மிக பிரமாணடமாய் இருக்கும். அந்த வகையிலான ஒரு த்ரில்லர் டைப் ஸ்டோரியை மிகக் குறைந்த நேரத்தில் கே13 என்ற பெயரில் படமாக வழங்கி இருக்கிறார்கள்.

அசிஸ்டெண்ட் டைரக்டராக இருக்கும் அருள்நிதி தான் இயக்குராகும் பொருட்டு ஒரு புதுக் கதைத் தேடிக் கொண்டிருக்கிறார். இதற்காக கஞ்சா அடித்து யோசித்தும் ஒன்றும் தோணாத நிலையில் நண்பர்களுடன் ஒரு நைட் கிளப்புக்கு போகிறார். அங்கு நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை பார்த்து பேசி பழக ஆரம்பிக்கிறார். பிறகென்ன அந்த பழக்கம் வீடு வரைக்கும் இருவரையும் அழைத்து செல்கிறது. மப்பில் இருக்கும் அருள்நிதி மறுநாள் விடியும் போது ஒரு நாற்காலியில் கட்டிப் போடப்பட்டிருப்பதை உணர்கிறார், அதிலிருந்து தன்னை ஒரு வழியாக விடுவித்து விட்டு திரும்பிப் பார்க்கும் போது, நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் கை அறுபட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார். அந்த நாயகியை யார் கொலை செய்தது, அதை அருள்நிதி எப்படி எதிர்கொள்கிறார் என்பதை ஒரு மாதிரியான திரைக்கதையுடன் சொல்லும் படம் தான் இந்த K 13.

அருள்நிதி தனக்கு தெரிந்த ஒரு ரோலை கச்சிதமாக செய்திருக்கிறார். அசிஸ்டெண்ட் டைரக்டர், ஆனால் புதுக் கதை வேண்டுமென்றால் கஞ்சா அடிக்கும் அல்ல்து பஃப் போய் யோசிக்கும் போக்கு நிலவுகிறது என்பது மாதிரியான காட்சிகளை வைத்து கோலிவுட்டில் விஷக் காற்றை வீசுவதுதான் கவலையைத் தருகிறது. பெரும்பாலான அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் நாள் முழுவதும் ஒரு டீக் கடையில் நின்றபடியே டிஸ்க்‌ஷன் நடத்தும் சூழலில் இது போன்ற காட்சி மிகையூட்டலாக இருக்கிறது.

நாயகி (?) ஷ்ரத்தா ஸ்ரீநாத் உயிரோடு இருக்கும் நேரத்தில் தன்னால் முடிந்த பர்ஃபார்மான்ஸை காட்ட முயன்றுள்ளார், அதே நேரம் நெடு நேரமாக ஒரு பிணம் ரோலில் ஜடம் போல் உடகார்ந்தும் குப்புறப் படுத்தும் ஜமாய்த்துள்ளார். காயத்திரி யோகிபாபு மற்றும் இயக்குநர் ஆதிக் சிறிய கேமியோ ரோலில் வருவது படத்திற்கு டர்னிங் பாய்ண்ட், மற்றபடி படத்தில் நடிகர்கள் பட்டாளம் எதுவு மில்லை, கூடவே கிளைமாக்ஸை ட்விட்ஸ் என்ற பெயரில் சொல்லி இருப்பது புதுசாக இருந்தாலும் முழுசாக புரியவில்லை..

இந்த படத்திற்கு பாடல் & இத்யாதி மற்றும் அது இது எது எல்லாம் தேவையில்லை என்பதை இயக்குனர் ஓரளவு உணர்ந்து . என்ன தேவையோ அதை மட்டுமே சரியாக பயன்படுத்திய இருக்கிற இயக்குநர் புரியும்படி அமையாத திரைக்கதையையும் ஒட்டாத இசையையையும் கொடுத்து கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டு விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்

மொத்தத்தில் கே 13 – ராங் அட்ரஸ்

மார்க் 2.25 / 5