September 27, 2021

முத்தமிழ்க் காவலர் கி. ஆ.பெ. விசுவநாதம்

பூக்கின்ற மலரெல்லாம் மணப்பதில்லை; புகழுடம்பை அனைவருமே பெறுவதில்லை” என்று பாடினார் ஒரு தமிழ்க் கவிஞர் .அதன்படி தாம் பெற்ற தமிழுடம்பைப் புகழுடம்பாக்கி, தம் பெயரை நிலைநாட்டியவர் – முத்தமிழ்க் காவலர், தமிழ்ச் செம்மல், தமிழ் வித்தகர், சித்த மருத்துவ சிகாமணி, வள்ளுவவேள், செந்தமிழ்க் காவலர், இலக்கியச் செல்வர், தனி நாயகர், உலகத் தமிழர்ச் செம்மல், கலைமாமணி, தமிழ்மறைக் காவலர் என பல பட்டங்களுக்குச் சொந்தக்காரர் கி.ஆ.பெ. விசுவநாதம். தமிழுக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும், தமிழிசை மீட்சிக்காகவும் தம் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்.

ki a pe vis nov 11

1893-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி பெரியண்ணப்பிள்ளை-சுப்புலட்சுமி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். தமிழ் இலக்கண-இலக்கியங்களில் சிறந்த தமிழ்க் கடலான அவர், பள்ளிக்கே சென்றதில்லை.

ஐந்தாவது வயதில் முத்துச்சாமிக் கோனாரிடம் மணலில் தமிழ் எழுத்துகளை எழுதிப் பயிற்சி பெற்றார். நாவலர் வேங்கடசாமி நாட்டார், மறைமலையடிகள், திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதியார் முதலிய தமிழறிஞர்கள் தொடர்பால் தாமாக முயன்று தமிழ் இலக்கண-இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்றார்.

இவரது தந்தையே இவருக்கு நல்லாசிரியராகத் திகழ்ந்தார். தந்தையிடமே தொழில் முறையும், கணக்கும் கற்றுக்கொண்டார்.

எந்தப் பள்ளியிலும் படிக்காத இவரை, இரண்டு பல்கலைக்கழகங்கள் ஆட்சிக்குழு உறுப்பினராக ஏற்றுக்கொண்டதோடு, “டாக்டர்’ பட்டமும் வழங்கிச் சிறப்பித்தன.

தமது பதினைந்தாம் வயதில் திருச்சிராப்பள்ளி சைவ சித்தாந்த சபையில் சேர்ந்து, துணைச் செயலாளராகவும் இருந்து சமயப் பணியாற்றினார்.

1916-இல் நீதிக் கட்சியில் பொதுச் செயலாளராக அங்கம் வகித்து, அந்த நீதிக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம், தீண்டாமை ஒழிப்புச் சட்டம், தமிழ் அறிந்தவர்களும் மருத்துவர்களாகலாம் என்ற அரசாணை போன்றவை நிறைவேறியது கி.ஆ.பெ.யின் பெருமுயற்சியால் என்பது நினைவுகூரத்தக்கது.

1921-இல் ஒட்டப்பிடாரத்தில் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் தலைமையில் “அன்பு’ எனும் பொருள் பற்றி முதன் முதலாகச் சொற்பொழிவாற்றினார். பெரியார் தோற்றுவித்த சுயமரியாதை (1925) இயக்கத்தில் சேர்ந்து அதன் செயலாளராகப் பொறுப்பேற்று, ஜாதி மத வேற்றுமைகளையும், மூடநம்பிக்கைகளையும் சாடினார். பல நூறு கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தினார்.

தீண்டாதாரை கோயிலுக்குள் அனுமதிக்கக்கோரி போராடினார். தம் இறுதி நாள்வரை சுமார் ஐயாயிரம் சீர்திருத்தத் தமிழ்த் திருமணங்களை நடத்தி இருக்கிறார்.

1937-இல் இந்தித் திணிப்பை எதிர்த்தும், தாய்த் தமிழைக் காப்பதற்காகவும் நடைபெற்ற அறப்போரில் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று பல நூறு மாநாடுகளை நடத்தினார். பல ஆயிரம் பேருக்குமேல் சிறை சென்றனர்.

1952-இல் சேஷசாயி தொழில்நுட்பப் பயிற்சிக் கூடத்தின் இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 10 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார். திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவ நிலையத்தின் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்து 12 ஆண்டுகள் பணியாற்றினார்.

தமிழகத் தமிழ் வளர்ச்சிக் குழுவில் இருந்து 10 ஆண்டுகள் தொண்டாற்றினார். அப்போதுதான் கி.ஆ.பெ.விசுவநாதம் தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது.

1965-இல் மாபெரும் (மாணவர்) இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் குண்டடிபட்டும், கூவம் நதியில் விழுந்தும், தடியடிபட்டும் 27 மாணவர்கள் உயிர் நீத்தனர். அவர்கள் உயிர் நீத்தது ஜனவரி 26-ஆம் தேதி. அந்தத் தியாகத்தைப் போற்றும் வகையில் இருபத்தெட்டு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆங்கில மாதமும் 26-ஆம் தேதி உண்ணா நோன்பும், மெüன விரதமும் இருந்து வந்தார்.

தமிழிசை இயக்கத்திலே முத்தமிழ்க் காவலரின் பங்கு மகத்தானது. தமிழகத்தில் இசை மேடைகளில் தமிழ்ப் பாட்டுப் பாடாமல் தெலுங்கு, சம்ஸ்கிருதப் பாடல்கள் பாடிவந்த நிலையை எதிர்த்து அண்ணாமலை அரசர் இயக்கம் கண்டபோது (1942), கி.ஆ.பெ. பொதுச் செயலாளராக இருந்து நாடெங்கும் சுற்றி, இசை இயக்கத்துக்கு வலுவூட்டினார்.

அதுமட்டுமல்லாது, உலகில் தொன்மையான பல மொழிகள் வழக்கொழிந்து போனதுபோல் தமிழும் அவ்வாறு ஆகிவிடக் கூடாதென்று, தமிழ் மொழியைப் பாதுகாத்து வளர்க்க, ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென்று அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகக் குரல் கொடுத்து வந்தார்.

அவருடைய வேண்டுகோளை ஏற்று அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., தஞ்சையில் தமிழுக்கென்று தனியாக ஒரு பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார். இது கி.ஆ.பெ.யின் சாதனைகளுள் ஒன்றாகும்.

அண்ணா, தமிழக முதல்வராக இருந்து நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்று, மாநாடு வெற்றிபெறத் துணை நின்றார்.

மேலும், தமிழுக்கென்று சங்க காலத்தைப்போன்று 49 பேர் கொண்ட “புலவர் குழு’ ஒன்றையும் தமது மணிவிழாவின்போது (1958) தோற்றுவித்தார். மலேசியா, சிங்கப்பூர், பர்மா, பிரான்ஸ், அரபு நாடுகள், ஜெர்மனி, லண்டன் முதலிய அயல் நாடுகளுக்கெல்லாம் இலக்கியப் பயணம் மேற்கொண்டு தமிழ் மணத்தைப் பரப்பினார்.

இவர், குறள்நெறியை அறுபதாண்டு காலம் தமது பேச்சாலும் எழுத்தாலும் உலகெங்கும் பரப்பியதன் காரணமாகப் பல திருக்குறள் அமைப்புகள் தோன்றின. தற்போதைய தமிழக முதல்வர் தமது ஆட்சிக் காலத்தில் “வள்ளுவர் கோட்டம்’ அமைத்து கி.ஆ.பெ.வுக்கு “திருக்குறள் விருது’ அளித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழரின் மருத்துவ முறையாக, தொன்மையான சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்காக எழுதியும், பேசியும் கருத்தரங்குகள், மாநாடுகள் போன்றவற்றை நடத்தியும் வந்தார். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது சித்த மருத்துவத்துக்காகத் தனி வாரியம் அமைக்கவும் காரணமாக இருந்தார்.

தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர், செயலாளர், நிறுவனர், அமைப்பாளர், புரவலர், பொருளாளர், ஆய்வுக்குழு உறுப்பினர், ஆட்சிக்குழு உறுப்பினர், ஆசிரியர் (தமிழ்நாடு), துணையாசிரியர் (ஆனந்தபோதினி), பொறுப்பாசிரியர் (விடுதலை, குடியரசு) சிறப்பாசிரியர் (தமிழின ஓசை), எழுத்தாளர், பேச்சாளர் ஆகிய பன்முகம் கொண்டவர். தமிழகத்தில் பேச்சும் எழுத்தும் கைவரப்பெற்ற குறிப்பிடத்தக்க சிலருள் முத்தமிழ்க் காவலரும் ஒருவர்.

வள்ளுவர் உள்ளம், தமிழ் மருந்துகள், அறிவு உணவு, வள்ளுவரும் குறளும், எண்ணக் குவியல், மும்மணிகள், தமிழ்ச் செல்வம் முதலிய 25 நூல்களுக்கும் மேல் எழுதியுள்ளார். 96-வது பிறந்த நாள் விழாவில் (1994) தேனாம்பேட்டை ஸ்ரீலேகா ஓட்டலில் குன்றக்குடி அடிகளார் தலைமையில் கடைசியாகப் பேசினார்.

அங்கு பேசும்போது, “”நான் அதிக காலம் உயிருடன் இருக்க மாட்டேன். உடல் நலம் குன்றிவிட்டது. இந்நிலையில் தமிழ் ஆட்சிமொழி, பயிற்றுமொழி குறித்து அரசு ஆணை வந்தால் மகிழ்ச்சியோடு உயிர் துறப்பேன்” என்று பேசினார். அதுவே அவரது நிறைவுரையாக அமைந்தது.

“”அரசு ஆணை வந்தால் பார்த்துவிட்டுச் சாவேன்” என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து ஏங்கியவாறு, 1994-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி தம் பூத உடம்பு நீத்துப் புகழுடம்பு எய்தினார்.தமிழுக்கும் தமிழருக்கும் பாதுகாவலராகத் திகழ்ந்த கி.ஆ.பெ.விசுவநாதத்தின் தமிழ்ப் பணிகளை நினைத்துப் பார்த்தால், நிச்சயம் அவர் ஒரு முத்தமிழ்க் காவலர் என்பது விளங்கும்.

உடுமலை அமிர்தநேயன்