September 25, 2021

அதிக உழைப்பைப் போட்டுள்ள படம் இந்த ‘பொன்மகள் வந்தாள்’ – ஜோதிகா பேட்டி

பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் டிரெய்லரை அமேசான் பிரைம் வீடியோ இன்று வெளியிட்டுள்ளது. பரபரப்பான இந்த திரைப்படம் பிரைம் வீடியோ வில் உலகளாவிய அளவில் நேரடியாக வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படமாகும். 2D எண்டர்டெயின்மெண்டால் தயாரிக்கப்பட்டுள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தில், ஜோதிகா, பார்த்திபன், K.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். 200 நாடுகளில், பிரைம் வீடியோ வழியாக பிரத்தியேகமாக வெளியாகவுள்ள இத்திரைப்படத்தை ஜே.ஜே.ப்ரட்ரிக் இயக்கியுள்ளார். இப்படம் மே 29ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.

இது நேர்மையான ஒரு வழக்கறிஞர் தவறாக தண்டிக்கப்பட்ட ஒரு அப்பாவி பெண்ணை விடுவிக்க முயற்சிக்கும் கதையாகும். 2D என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த சட்ட நாடகப் படத்தில், ஜோதிகா, பார்த்திபன், K.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் உட்பட பல்வேறு ஆற்றல் மிக்க நடிகர்கள் உள்ளனர். அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக உலகளவில் திரையிடப்படவுள்ள முதல் தமிழ் படமாகத் திகழவுள்ள ‘பொன்மகள் வந்தாள்’, பிரைம் உறுப்பினர்களுக்கு மே 29 முதல் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் கதை என்னவென்றால், 2004-ம் ஆண்டு முடிக்கப்பட்ட ஒரு வழக்கை மீண்டும் தொடங்குகிறார் ஊட்டியில் வசிக்கும் ‘பெட்டிஷன்’ பெதுராஜ். அவரது மகளான வெண்பா ஒரு ஆர்வமுள்ள வழக்கறிஞர். உண்மையை வெளிப்படுத்த அனைத்து நெளிவுசுளிவுகளிலும் பயணிக்கும் திறன் கொண்டவரான அவர் அந்த வழக்கின் உண்மையைக் கண்டறிகிறார். பொய்யாக ஜோடிக்கப்பட்ட அந்த வழக்கில், அனைத்து சவால்களையும் கடந்து, புத்திசாலித் தனமாக எவ்வாறு வாதாடுகிறார் என்பதே இப்படத்தின் திரைக்கதை. ஜோதி நிரபராதி என்பதை வெண்பா நிரூபித்தாரா என்னும் பரபரப்பான இறுதிக்காட்சிகளை பிரைம் வீடியோ நேயர்கள் கண்டு களிக்கலாம்.

இந்தப் படம் குறித்து ஜோதிகாவிடம் கேட்டப் போது, “”இது ஒரு சமூக அக்கறையுள்ள கதை. த்ரில்லர் படம் என்பதால் என்ன சமூக அக்கறை என்பதைச் சொல்ல முடியாது. இந்தப் படத்தில் 5 இயக்குநர்களுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். கடந்த படத்தில் ரேவதி மேடம், ஊர்வசி மேடம் இந்தப் படத்தில் பார்த்திபன் சார், பாக்யராஜ் சார், தியாகராஜன் சார் ஆகியோருடன் நடித்தது மறக்க முடியாது. அனைவரிடமும் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர்கள் எப்படி தங்களுடைய கதாபாத்திரத்துக்கு தயார் செய்து கொள்கிறார் கள், நீளமான வசனத்தை எப்படி சரியாக உச்சரித்து நடிக்கிறார்கள் உள்ளிட்ட விஷயங்களை ஒரு நடிகையாக கற்றுக்கொண்டேன்.

இந்தப் படத்தில் 3 -4 நீளமான வசனக் காட்சிகள் உள்ளன. 3 மாதங்களுக்கு முன்பே படத்தின் ஸ்கிரிப்ட் புக்கை இயக்குநர் கொடுத்துவிட்டார். பார்த்திபன் சாருடன் நின்று கொண்டு வசனம் பேசி நடிப்பதே சவால்தான். பிரட்ரிக் எனக்கு நிறைய நேரம் கொடுத்திருந்தார். நான் நடித்த படங்களில் நிறைய முன் தயாரிப்பு செய்து நடித்த படம் இதுதான். இந்தக் கதையை முதல் முறையாகக் கேட்டபோதே கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இது வரை நான் நடித்த படங்களிலேயே அதிக உழைப்பைப் போட்டுள்ள படம் இதுதான். ஏனென்றால், இந்தப் படத்தின் கதை எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது.

இந்தப் படத்தில் வெண்பா என்ற வக்கீலாக நடித்துள்ளேன். உயர் நீதிமன்ற வக்கீலாகவோ, உச்ச நீதிமன்ற வக்கீலாகவோ நடிக்கவில்லை. ஊட்டியில் ஒரு சின்ன நீதிமன்றத்தின் வக்கீலாக நடித்துள்ளேன். முதல் முறையாக வக்கீல் உடையணியும் போது ரொம்ப வலுவாக உணர்ந்தேன். இந்த மாதிரியான கதைக்களம் கொண்ட படங்களில் சண்டைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஏமாற்ற முடியாது. வக்கீல் உடையணிந்து வசனங்கள் பேசி நடிக்க வேண்டும். வார்த்தைகளின் பலம் இதில் இருக்கும். வக்கீல் கதாபாத்திரத்துக்காக 2டி ராஜசேகர் ஒரு வக்கீல் என்பதால் அவரிடம் நிறையப் பேசினேன். நிறையப் படங்கள் பார்த்தேன். பொது மக்கள் வக்கீலை எப்படிப் பார்க்கிறார்கள் உள்ளிட்ட சில கேள்விகளை இந்தப் படத்தில் முன்வைத்துள்ளேன். அது படத்தின் ஹைலைட்டாக இருக்கும்.

நான் ஒரு வட இந்தியப் பெண் என்று யாருமே யோசிப்பதில்லை. வசனங்களாக எழுதிக் கொடுக்கிறார்கள். 35 பக்கம் கொண்ட புத்தகத்தை தினமும் இயக்குநர் பிரட்ரிக் கையில் பார்க்கலாம். காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணிவரை 2 பேர் பேசிக் கொண்டே இருப்பதைப் படமாக்கிக் கொண்டிருப்பார். அவ்வளவு வசனங்கள் பேசியிருக்கிறோம். பாக்யராஜ் , பார்த்திபன் இருவரும் ஒரு முறை படித்துவிட்டுப் பேசிவிடுவார்கள். ஆனால், நான் 3 மாதங்களுக்கு முன்பே முழுக் கதையையும் வாங்கி என் வசனங்களை முழுமையாக மனப்பாடம் செய்து பேசியுள்ளேன். முக்கியமாக இந்தப் படத்துக்கு நானே டப்பிங் செய்துள்ளேன். படப்பிடிப்பு வந்து பேப்பர் பார்த்து என்னால் வசனம் பேசி நடித்திருக்க முடியாது”. என்று ஜோதிகா சொன்னார்.

தொடர்ந்து பேசியவர், “இப்போது நிறையப் பேருக்கு ஓடிடி ப்ளாட்பார்ம் பற்றி தெரிந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக நிறையப் பேர் வீட்டில் அமர்ந்து படங்கள் தான் பார்க்கிறார்கள். ஆகையால் ஓடிடி ப்ளாட்பார்ம் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள். திரையரங்கில் வெளியாகும் போது அனைத்து தரப்பு மக்களும் பார்ப்பார்கள் என்பதை மறுக்கவில்லை. திரையரங்கில் படம் பார்க்கும் போது கைதட்டி ரசிப்பதை எல்லாம் ஒரு நடிகராக உணர முடியும். இப்போதுள்ள சூழலில் அனைத்து தரப்பும் நன்மையோ அதை தான் கவனிக்க முடியும்.  கரோனாவால் மட்டுமே இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடுகிறோம். இப்போது சூழல் அந்த மாதிரி இருக்கிறது. நடிகர்கள் – இயக்குநர்கள் உள்ளிட்டோருக்கு திரையரங்கம் என்பது ஒரு கொண்டாட்டம் தான். ஓடிடி ப்ளாட்பார்ம் என்பது கதையை மையம் கொண்ட படங்களுக்கு ஒரு அருமையான தளம் என நினைக்கிறேன். பெண்களை மையம் கொண்ட படங்களுக்கு திரையரங்கில் ரசிகர்கள் வரவு குறைவு தான். அதில் பலர் ஆண்கள் தான். ஓடிடி தளத்தில் பெண்களை மையம் கொண்ட படங்களுக்கு நல்ல ஆதரவும், மரியாதையும் இருக்கிறது.

சினிமாவின் அடுத்த கட்டம் தான் ஓடிடி. கண்டிப்பாக சினிமாவை ஓடிடி அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தும். சில ஆண்டுகளாக கதைகளை மையப்படுத்தி படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். ஹீரோ படத்தோடு ஒப்பிடுகையில் நாயகியை மையப்படுத்திய படங்களுக்கு நிறையப் பேர் செல்ல மாட்டார்கள். வழக்கமான என் படங்களுக்கான ரசிகர்களை விட, இப்போது அதிகமான மக்களை, ரசிகர்களை இந்தப் படம் சென்றடையும். என் படங்கள் இனிமேல் ஓடிடி-யில் தான் வரும் என்று சொல்லவில்லை. நிலைமை சரியாகி திரையரங்குகள் திறந்தவுடன் அனைவருமே படங்கள் பார்க்கப் போகிறார்கள். இப்போதைக்கு இந்த தீர்வு அவ்வளவே. கரோனா பிரச்சினை முடிந்தவுடன், நிறைய ஹீரோக்கள் படம் வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. அப்படியிருக்கும் போது ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை எந்த இடை வெளியில் வெளியிடுவது. அதற்கு 2 வருடங்களாகிவிடும். அந்தப் பிரச்சினை வேண்டாம் என்று தான் ஓடிடியில் வெளியிடுகிறோம்” என்றும் சொன்னார்.