April 12, 2021

சுப்ரீம் கோர்ட்டின் 48ஆவது தலைமை நீதிபதியாகப் போகும் நீதிபதி என்.வி.ரமணா – சில குறிப்புகள்!

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருக்கும் எஸ்.ஏ.பாப்டேவின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் 23-ம் தேதியோடு முடிகிறது. இந்நிலையில் அடுத்த தலைமை நீதிபதியாக என்வி ரமணாவின் பெயரை பரிந்துரை செய்து தன் டிதத்தை மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார் தற்போதைய தலைமை நீதிபதி பாப்டே. அதிலும் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில புகார்கள் அடங்கிய கடிதத்தை ஆந்திர முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு அனுப்பி இருந்தார். அந்தக் கடிதத்தைத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே நிராகரித்து, தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி நியமனத்தைப் பொறுத்தவரை ஓய்வு பெறப் போகும் தலைமை நீதிபதி, தனக்கு அடுத்ததாக அந்தப் பதவியில் இன்னாரை நியமிக்கலாம் என்று மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்வார். இது பெரும்பாலும் மூத்த நீதிபதியைத் தலைமை நீதிபதியாக நியமிக்கவே பரிந்துரை செய்யப்படும். அவர் தகுதியானவராக இருந்தால், அவரையே தலைமை நீதிபதியாக நியமிக்க ஜனாதிபதிக்கு பிரதமர் பரிந்துரை செய்வார். அதை ஏற்று, ஜனாதிபதி நியமன உத்தரவைப் பிறப்பிப்பார்.

ஆனால், தலைமை நீதிபதி பதவிக்குப் பரிந்துரை செய்யப்படும் மூத்த நீதிபதி தகுதியானவராக இல்லாத பட்சத்தில், அடுத்ததாக யாரை நியமிக்கலாம் என்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டின் மற்ற நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும்.

இந்நிலையில் எஸ்.ஏ.பாப்டே தனக்கு அடுத்த நிலையில் உள்ள எஸ்.வி.ரமணா பெயரை பரிந்துரைத்துள்ளார். இந்த என்.வி.ரமணா 1957, ஆகஸ்ட் 27-ம் தேதி பிறந்தவர். தலைமை நீதிபதியாக ரமணா நியமிக்கப்பட்டால், ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தலைமை நீதிபதியாக வரும் முதல் நீதிபதியாக இருப்பார்.

ஆந்திரப் பிரதேச ஐகோர்ட்டில் 2000-ம் ஆண்டு ஜூனில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பின் டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும், 2014-ம் ஆண்டு, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டவர். இவரின் பதவிக்காலம் 2022 ஆகஸ்ட் 26-ம் தேதி முடிவடைகிறது. இவர் வரும் ஏப்ரல் 24-ம் தேதி புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்கலாமென்று தகவல் வருகிறது.