‘துறவியாக வாழ். குதிரை போல் செயல்படு.’ – நீதிபதிகளுக்கு முன்னாள் நீதிபதி வேண்டுகோள்!

‘துறவியாக வாழ். குதிரை போல் செயல்படு.’ – நீதிபதிகளுக்கு முன்னாள் நீதிபதி வேண்டுகோள்!

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் விசாரனை நீதிமன்றங்களில் சுமார் 3 கோடி வழக்கு களுக்கு மேல் நிழுவையில் உள்ளதால் அதை தடுக்க இனி நீதிபதிகள் அவசர காரணங்கள் அல்லாமல் வேறு காரணங்களுக்கு விடுமுறை எடுக்கக்கூடாது என அண்மையில் ரிட்டயர்ட் ஆன தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுருந்தது பலருக்கும் நினைவிருக்கும். இந்நிலை யில் ஹைகோர்ட் எக்ஸ் ஜட்ஜ் கே . சந்துரு இன்று வருத்தப்பட்டு எழுதியிருக்கும் தகவலிது:

சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் 17 நீதிபதிகள் நீதிமன்றத்துக்கு வரவில்லை. இதுபோன்ற சரித்திர நிகழ்வு இதுவரை நடைபெற்றதில்லை. சென்னையைப் பொறுத்தவரை 37 பேரில் 17 பேர் விடுப்பு என்று சொன்னால் பாதி நீதிமன்றம் செயல்படவில்லை என்று அர்த்தம். இதில் 5, இரு நீதிபதிகள் அமர்வு என்று சொல்லக்கூடிய டிவிஷன் பெஞ்சில் முதன்மை பொறுப்பு வகிப்பவர்களும் அடங்கும். அப்படியென்றால் அதிலுள்ள இரண்டாவது உறுப்பினர் வேறு பொறுப்பை ஏற்க வேண்டும்.

நீதிபதிகள் அரசமைப்பு சட்டத்தின்படி மிகப்பெரிய பொறுப்பை வகிப்பவர்கள். பதவி அந்தஸ்து உயர உயர பொறுப்பும் உயர வேண்டும். அவர்கள் விடுப்பு எடுத்த காரணம் எதுவாக இருப்பினும், (சக நீதிபதியின் வீட்டுத் திருமணமாக இருப்பினும்) அதற்காக கணிசமான நீதிபதிகள் விடுப்பு எடுத்துச் செல்வது நீதிமன்ற செயலாக்கத்தையே தடுத்து விடுவதாகும். இதை நீதிபதிகள் உணர்வார்களா?

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளது:

‘நீதித்துறை நடுவர்கள் இரட்டை நடைமுறை (ஒன்று நீதிமன்றத்துக்கும் மற்றொன்று பொதுவெளி யிலும்) வைத்துக்கொள்ள முடியாது. அவர்களது அளவுகோல் எங்கும் எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கமுடியும். அவைதான் ஒழுக்கம், நேர்மை, நாணயம்! தாங்கள் வகிக்கும் பதவிக்கு எந்த சிறு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அவர்கள் நடந்து கொள்ளக்கூடாது.’

உயர் நீதித்துறையைச் சேர்ந்தவர் களுக்கு தனி ஒழுங்கு விதிகள் வகுக்கப்பட வேண்டுமா? அமெரிக் காவிலும் கிட்டத்தட்ட இதுபோன்ற பதவி நீக்க நடைமுறைகளே உள்ளன. அந்நாட்டில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுவிட்டால் அவர்களுக்கு ஓய்வு வயதே கிடையாது. ஆயுள் முழுக்க வகிக்கக்கூடிய பதவி அது.

அமெரிக்க வக்கீல்கள் சங்கம் கூடி விவாதித்து உச்ச நீதிமன்றம், நீதிபதிகளை பதவி நீக்கம் செய்வது கடினம், என்றாலும் நீதிபதிகள் தாங்கள் செயல்படுவதற்கு நடத்தை விதிகள் தேவை என்று உணர்ந்தனர். மாதிரி நடத்தைத் தொகுப்பு (Model Code of Conduct) ஒன்றை அவர்களே உருவாக்கினார்கள். அவ்விதிகளுக்கு எவ்வித சட்ட அங்கீகாரமும் கிடையாது. இருப்பினும் அவ்விதிகளுக்கு முரணாகச் செயல்பட்ட அமெரிக்க நீதிபதிகள் எவருமிலர். அனைவரும் ஏற்றுக்கொண்ட நடத்தை விதிகளாகவே அது கருதப்பட்டு வருகிறது.

1993-ல் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் கூட்டத்தில், நீதித்துறை வாழ்வில் விழுமியங்களின் மீள் உரைத்தல் என்ற தலைப்பில் சில விதிமுறைகளை உருவாக்கினர். அதில் 16-வது விதிமுறை இது:

‘ஒவ்வொரு நீதிபதியும் தான் பொதுமக்கள் பார்வையில் இருக்கிறோம் என்பதை எந்நேரமும் நினைவில் கொண்டிருப்பதோடு, தன்னுடைய எந்தச் செயலும் (அ) மீறலும் தான் வகித்திருக்கக் கூடிய உயர்ந்த பதவியைப் பற்றி மக்கள் எப்படிப்பட்ட கருத்தை வைத்திருக்கிறார்கள் என்பதற்கு விரோதமாக அமைந்துவிடக் கூடாது.’

இந்த விழுமியங்களை ஏற்றுக் கொண்டு 2006-ம் வருடம் சென்னை உயர் நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இப்பிரச்சினைகள் பற்றிப் பேசினாலே பலருக்கு எரிச்சல் வருகிறது. மேலும் இப்படிப்பட்ட பிரச்சினைகள் தனிப்பட்ட பிரச்சினையாகவே பார்க்கப்படுகின்றன. வக்கீல் சங்கங்களிலோ அல்லது அகில இந்திய பார் கவுன்சிலிலோ இதுபற்றி விவாதிக்கப்படுவதில்லை. நீதிபதியொருவர் தவறு செய்கிறார் என்று யாரும் பகிரங்கமாக எழுத முடியாது. நீதித்துறையை ஒட்டுமொத்தமாக இழிவுபடுத்தும் செயலாக அது கருதப்பட்டுவிடும்.

1990-களில் உயர் நீதிமன்ற அரசு குற்றவியல் தரப்பு வழக்குரைஞரின் சகோதரர் ஒரு கல்யாண மண்டபத்தை சேலத்துக்கு அருகே கட்டினார். அதன் திறப்பு விழாவுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்டிருந்தனர். 5 நீதிபதிகள் கலந்து கொள்வதாக பத்திரிகையில் விளம்பரம் வந்தது. இச்செயலை கண்டித்து சில வக்கீல்கள் அறிக்கைவிட்டனர். நீதிமன்ற வளாகத்துக்குள் வேலை நாளில் பணியைப் புறக்கணித்துவிட்டு கூட்டமாக நீதிபதிகள், தனியார் வீட்டு விருந்து வைபவங்களுக்குச் செல்லலாமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஒரு நீதிபதியைத் தவிர, மற்ற நால்வரும் அந்த விழாவில் கலந்துகொண்டனர்.

அதன்பின்னர் மற்றொரு நீதிபதியின் வீட்டுத் திருமணத்துக்காக 7 நீதிபதிகள் விடுப்பில் சென்ற போது, அதுவும் பிரச்சினைக்குள்ளானது. ஆனால், சென்றவர்களின் எண்ணிக்கை சொற்பம் என்பதால் சர்ச்சைகள் விரைவில் அடங்கி விட்டன. தற்பொழுது நீதிமன்றத்தின் ஒரு பாதி செயல்படாது என்ற நிலை வந்துவிட்டதால் இப்படிப்பட்ட செயல்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு உட்பட்டதற்கு ஆகாது. இதைப்பற்றி புதிதாக தலைமை ஏற்றுள்ள இந்திய தலைமை நீதிபதி தலையிட்டு சரியான அறிவுரை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் அவா.

நீதிபதிகளின் பொறுப்புணர்வு களுக்கான இலக்கணத்தை வகுத்தவர் மறைந்த நீதிபதி சத்தியதேவ் அவர்கள். தனது மகனின் திருமணத்தை காலையில் நடத்தி முடித்துவிட்டு, மதிய இடை வேளைக்குப் பிறகு நீதிமன்றத்துக்கு வந்து வழக்குகளை நடத்தியவர் அவர்.

முன்னாள் தலைமை நீதிபதி கபாடியா, நீதிபதிகளுக்கு அறிவுறுத்தியதையே ஒவ்வொருவரும் நினைவு கூர வேண்டும்.

‘துறவியாக வாழ். குதிரை போல் செயல்படு.’

– கே. சந்துரு, மேனாள் நீதிபதி,
சென்னை உயர் நீதிமன்றம்

error: Content is protected !!