October 21, 2021

ஐகோர்ட் ஜட்ஜ் கர்ணன் Vs சுப்ரீம் கோர்ட் பெஞ்ச்! –

தமிழ்நாட்டை சேர்ந்தவர் நீதிபதி சி.எஸ். கர்ணன் (வயது 61). சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றி வந்த அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் சுப்ரீம் கோர்ட் உத்தரவை நீதிபதி கர்ணன் எதிர்த்ததுடன், அதை ஒரு வழக்காக பதிவுசெய்து, அந்த உத்தரவுக்கு தடையும் விதித்தார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அதற்காக அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் அவர் மன்னிப்பு கேட்டார்.பின்னர் அவர், சென்னை ஐகோர்ட்டின் அப்போதைய தலைமை நீதிபதி (சஞ்சய்கி‌ஷன் கவுல்) மற்றும் பல நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறி, பிரதமர், சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி உள்பட பலருக்கும் கடிதம் எழுதினார். இதனால், அவர் மீது சுப்ரீம்கோர்ட் தானாக முன்வந்து கோர்ட் அவமதிப்பு வழக்கு பதிவுசெய்தது.

kar mar 11

இந்த வழக்கை தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஜே. செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி. லோகுர், பினாகி சந்திர கோஷ், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது.இந்த வழக்கின் விசாரணைக்கு பிப்ரவரி 13–ந் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிபதி கர்ணனுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் அதன்படி ஆஜராகவில்லை. அதையடுத்து மார்ச் 10–ந் தேதி (நேற்று) ஆஜராகும்படி சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் உத்தரவிட்டது. ஆனால் அவர் நேற்றும் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் அந்த வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.விசாரணை தொடங்கியதும் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, ‘‘கோர்ட் உத்தரவு பிறப்பித்தும் நீதிபதி கர்ணன் ஆஜராகவில்லை. அவர் தற்போது பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மீது பலவகையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருக்கிறார். அவருக்கு அனுப்பிய நோட்டீஸ் மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு அவர் இரு கடிதங்கள் எழுதி இருப்பதாக தெரியவருகிறது. அந்த கடிதங்களிலும் சென்னை ஐகோர்ட்டின் நீதிபதிகளுக்கு எதிராக குற்றம் சாட்டி இருக்கிறார் என்றும் தெரிய வருகிறது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறி அவர் கொல்கத்தா ஐகோர்ட்டில் ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார் என்றும் தெரியவருகிறது. அந்த உத்தரவு குறித்து ஐகோர்ட் பதிவாளர் அலுவலகத்துக்கும் தகவல் எதுவும் இல்லை. எனவே அவருக்கு ஜாமீனுடன் கூடிய வாரண்டு ஒன்றை பிறப்பிக்க வேண்டும். இதற்கு சட்டத்தில் வழி உள்ளது’’ என்று கூறினார்.

இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “நீதிபதி கர்ணனுக்கு நேரடியாகவே கோர்ட்டு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதால் அவர் தானே நேராகவோ அல்லது வக்கீல் மூலமாக ஆஜராகி இருக்க வேண்டும். கடந்த மார்ச் 8–ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட் பதிவாளர் அலுவலகத்துக்கு அவர் பேக்ஸ் மூலம் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் சில நீதிபதிகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்  தலைமை நீதிபதியிடம் கலந்தாலோசிக்க அனுமதி கேட்டுள்ளார். இந்த கடிதத்தை சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு பதிலாக கருத முடியாது.

எனவே, மேற்கு வங்காள மாநில போலீஸ் டி.ஜி.பி. மூலமாக நீதிபதி கர்ணனுக்கு ரூ.10 ஆயிரம் தனிப்பட்ட பத்திரத்துடன் ஜாமீன் வழங்கக்கூடிய பிடிவாரண்டு பிறப்பிக்கப்படுகிறது. இந்த பிடிவாரண்டு மூலம் அவர் வரும் 31–ந் தேதியன்று காலை 10.30 மணிக்கு கோர்ட்டில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஐகோர்ட்டில் பணியாற்றி வருகிற நீதிபதி ஒருவர் மீது சுப்ரீம் கோர்ட்டு, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவு செய்திருப்பது மட்டுமின்றி, பிடிவாரண்டு பிறப்பித்திருப்பதுவும் இதுவே முதல் முறை.நீதித்துறை சரித்திரத்தில் இதற்கு முன் உதாரணம் இல்லை என்று கூறப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து, பதில் நடவடிக்கையாக நீதிபதி கர்ணன், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், அவரது தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்றிருக்கிற 6 நீதிபதிகள், அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆகியோர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளார்.மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கையை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 226 உடன் இணைந்த 482–வது பிரிவின்படி உரிய சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் நீதிபதி கர்ணன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ”
தற்போது பணியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதி ஒருவர் மீது சுப்ரீம் கோர்ட் ஜாமீனில் விடத்தக்க பிடிவாரண்டு பிறப்பிக்க அதிகாரம் கிடையாது. இது வேண்டும் என்றே எடுக்கப்பட்ட நடவடிக்கை. நான் தலித் என்பதால் என்னை குறிவைக்கிறார்கள். எனக்கு எதிரான பிடிவாரண்டு, அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, 6 நீதிபதிகள், அட்டார்னி ஜெனரல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்த வழக்கின் முழு உண்மைகளையும் நீதிபதிகள் விசாரணை சட்டத்தின்கீழ் உரிய விசாரணை நடத்துவதற்காக சபாநாயகரிடம் தாக்கல் செய்யுமாறு பாராளுமன்றம் மற்றும் மேல்–சபை செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.சுப்ரீம் கோர்ட்டால் எனக்கு எதிராக சட்ட விரோதமாக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரண்டை திரும்பப்பெறுமாறு ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறேன். எனக்கு பணிகள் ஒதுக்கீடு செய்ய தடை விதித்து பிறப்பித்த உத்தரவை நீக்குமாறும் கேட்டுள்ளேன்” என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.