September 18, 2021

எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம்…? விடை தெரியவில்லை!

ஒரு காலத்தில் பத்திரிகையாளன் என்றால் ஒரு சமூக அந்தஸ்து இருந்தது. பத்திரிகையாளன் என்று சொல்லிக் கொள்வதில் ஒரு கர்வம் இருந்தது. ஆனால் இன்றைக்கு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அதற்கு காரணம் மீடியாக்கள் பெருக்கம். செய்தி தாகம் அல்ல செய்தி வெறி. அதனால் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் ரசிகனும், ஒரு நல்ல வேலை கிடைக்கிற வரைக்கும் மீடியாவில் இருப்போம் என்று கிளம்பிவிட்ட இளைஞர்களும் இந்த துறைக்கு தாராளமாக வருகிறார்கள்.

ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம்தான் செய்தி என்று இருந்த காலம் மாறி நாள் முழுக்க செய்தி என்ற நிலை உருவாகி விட்டது. செய்திகள் மக்களை ஆளத் தொடங்கிவிட்டன. தொலைக்காட்சி வழியாக இணையத்தள வழியாக, செல்போன் வழியாக வந்து விழுந்து கொண்டே இருக்கும் செய்திகள், ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்வில் நிமிடத்துக்கு நிமிடம் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. ஒரு மணிநேரம்கூட செல்போன் இல்லாமல், செய்தி அப்டேட் இல்லாமல் இருந்தால் பைத்தியமாகி விடுவார்கள் என்கிற ஒரு சைக்காலஜிக்கல் வன்முறை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பத்திரிகை பணிக்கு விரும்பி வருகிறவர்களை விட சமுதாயத்தில் தங்களை மேம்பட்டவர்களாக காட்டிக் கொள்ள வருகிறவர்களே அதிகமாக இருக்கிறார்கள். “வீட்டுல சும்மாதானே இருக்கோம்னுதான் மீடியால சேர்ந்திருக்கேன்” என்கிறவர்கள் உண்டு. நல்ல வசதியும், வருமானத்துக்கு வேறு தொழிலும் இருக்கிறவர்கள்கூட பத்திரிகையாளர்களாக வலம் வருவது இதற்காகத்தான்.

ஒவ்வொரு சேனலுக்கும் 24 மணி நேர புட்டேஜ் தேவைப்படுகிறது. இதனால் செய்தியாளர்களும், பணியாளர்களும் துரத்தப்படுகிறார்கள். ரஜினி வீட்டு வாசலில், கமல் வீட்டு வாசலில், அரசியல்வாதிகள் வீட்டு வாசலில் காத்துகிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் எப்போது வீட்டை விட்டு வெளியில் வருவார்கள் என்று தெரியாத நிலையில் வீட்டுமுன் காத்துக் கிடப்பதெல்லாம் கொடுமையிலும் கொடுமை. விமான நிலையமா, கல்யாண வீடா, சாவு வீடா, எங்கென்றாலும் மைக்கை நீட்டி கருத்து கேட்கிற ஒரு நிலை உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பும் ஒரு மாநாடு போல நடக்கிறது.

செல்போனும், இண்டர்நெட் பயன்பாடும் அதிகரித்து விட்ட நிலையில் ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கிற ஒவ்வொரும் பேஸ்புக் நிருபர்களாக, போட்டோகிராபர்களாக மாறிவிட்டார்கள். 1500 ரூபாய் செலவில் ஒரு இணையதள பக்கத்தை தொடங்கி பத்திரிகையாளராகி விடுகிறார்கள். எதையாவது படம் எடுத்து அதை அப்லோட் செய்து நிறைய லைக்குகளை குவிக்க வேண்டும், தனி கவனம் பெற வேண்டும் என்கிற ஆசை, சாலை விபத்தில் உயிருக்கு போராடுகிறவனை காப்பாற்றுவதை விட அதை செல்போனில் படம் எடுக்கிற மோசமான மனோநிலையாக மாறி இருக்கிறது.

“ஏம்பா பத்திரிகைகாரங்கல்லாம் கொஞ்சம் சத்தம்போடாம இருங்கப்பா”

“தயவு செய்து பத்திரிக்கையாளர்கள் ஓரமாக நிற்கும்படி கேட்டுக் கொள்கிறோம்”

“பத்திரிகையாளர்கள் அமைதியாக இருந்தால்தான் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த முடியும்”

“போட்டோ கிராபர் உட்காரு உட்காரு…”

“கேமராமேன் வழியை மறித்து நிக்காதீங்க ஓரமா நில்லுங்க”

“தயவு செய்து பத்திரிகைகாரங்க சாப்பாட்டு டோக்கன் வாங்கிட்டு வரிசையா வாங்க”

என்பது மாதிரியான கமெண்டுகளை எல்லா நிகழ்ச்சியிலும் கேட்க முடிகிறது.

திரைப்பட பத்திரிகையாளர்கள் நடிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதுகூட ஆர்வமான, அபூர்வமான நிகழ்ச்சியாகி விட்டது. 30 வருடங்களுக்கு மேல் திரைப்பட பத்திரிகையாளராக பணியாற்றிவர்கள்கூட வரிசையில் நின்று படம் எடுத்துக் கொள்வதை பார்க்க முடிகிறது.

சாலையில் செல்லும்போது பத்து வாகனங்களில் 3 வாகனத்திலாவது ‘பிரஸ்’ ஸ்டிக்கரை பார்க்க முடிகிறது. கல்யாண பத்திரிக்கை அடிக்கிற அச்சக பணியாளர்கள் முதல் பேப்பர் போடுகிற சைக்கிள் பாய் வரை ‘பிரஸ்’ ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறார்கள். சமூக விரோத வேலைகளை செய்கிறவர்கள் முதல், தாதாக்கள் வரை பத்திரிகையாளர் முகமூடி அணிந்திருக்கிறார்கள். 500 ரூபாய் செலவு செய்தால் பத்திரிகையாளர் அடையாள பெற்றுவிட முடியும் என்கிற மிக மோசமான நிலை உருவாகி இருக்கிறது. அகில உலக பத்திரிக்கையாளர்கள் சங்கம் முதல் அனகாபுத்தூர் பத்திரிகையாளர்கள் சங்கம் வரை சங்கங்கள் பெருகிக் கிடக்கின்றன.

பத்திரிகை பணியை ஆத்மார்த்தமாக நேசித்து வந்தவர்கள் இருக்கிறார்கள், இந்த பணியில்தான் சேர வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு அதற்காக படித்துக் கொண்டும், முயற்சித்துக் கொண்டும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். களைகள் பெருகிவிட்ட நிலையில் நல்ல பயிர்கள் எப்படி தங்களை வளர்த்தெடுக்கப்போகின்றன என்று தெரியவில்லை. செய்தி சேனல்களும், பத்திரிகையாளர்களும் பெருகி கொண்டிருக்கும் நேரத்தில் இன்னும் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த துறை எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம்…? விடை தெரியவில்லை.

மீரான்