September 18, 2021

புதிய இந்தியாவில் புதிய தமிழ்நாடும் புதிய பத்திரிக்கை ஜனநாயகமும் பிறக்குமா?

உலகமே ஒரு திசையில் பயணிக்க… இவன் மட்டும் வேறு திசையில் செல்வான்… எல்லாரும் பார்க்கும் பார்வை இவனுடையது அல்ல… அதற்கு பின்னால் என்ன என்று ஆராய்பவன்… உலகத்தின் பெரும்பான்மை அறிந்தவன்… இவனில் இருந்து கிளம்பும் தீப்பொறி… ஆனால் அவன் அமைதியான எரிமலையாகத்தான் இருப்பான்… பொங்க வேண்டிய நேரத்தில் உலகத்தையே புரட்டிப்போடுவான்…இவையெல்லாம் பத்திரிக்கையாளர் பற்றி புகழ்ந்து பேசும் வாசகங்கள்… இவர்களின் மறுபக்கம்… சமுத்திரக்கனி எடுத்த அங்காடித்தெரு படத்தை விட மோசமானது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்…

edit feb 4

இன்று வாய்க்கு வந்தபடியெல்லாம் பத்திரிக்கையாளர்களை பற்றி பேசுகிறார்களே… இவர்களை இந்த நிலைமைக்கு தள்ளியது யார்? ஒரு நிகழ்ச்சி என்றாலே தங்களது செய்தி வந்துவிடாதா? என்ற அங்கலாய்ப்பில் கெஞ்சாத குறையாக பத்திரிக்கையாளர் களை வரவழைத்து மரியாதைகள் செய்து புகழ்பெற்றவர்கள் எல்லாம் இவர்களை கண்டு ஒளிந்து ஓடுகிறார்களே ஏன்?ஒற்றை வரியில் சொன்னால் ”வறுமை”… வறுமையிலும் ”பெருமை”… செல்லாக்காசு வேலைக்காக அவன் இருப்பது ”தவம்”…. தவத்தின் பலன்தான் நான் மேற்கூறிய ”வறுமை”…கண்ணில் கண்டவரையெல்லாம புகழ்பாடி வாழ்வை நகர்த்த துடிக்கும் திருவிளையாடல் தருமிப்புலவர்கள் இவர்கள்… இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்று யாரேனும் ஏங்கினால் அது இந்த பத்திரிக்கையாளர் கூட்டத்துக்காக இருக்கட்டும்… அத்தனை சோதனைகள்… சொல்ல முடியாத வேதனைகள்…காரணம்… புற்றீசலாய் பெருகிப்போன பத்திரிக்கைகளும்… தொலைக்காட்சி ஊடகங்களும் என்றால் மிகையல்ல…

ஊதியமே கொடுக்காமல் வெறும் அடையாள அட்டையை மட்டும் கொடுத்து உங்களுக்கான ஊதியத்தை நீங்களே தயார் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லும் கேவலமான நிலை இன்று ஊடக சமூகத்திற்கு…வெறும் பகட்டுக்காக… பணம் இருக்கிறது என்ற திமிருக்காக… தங்களது சொத்துக்களின், அரசியல் செல்வாக்கு, தொழில்பாதுகாப்பு இவற்றுக்காக சென்னையில் தலைமையிடமாக கொண்டு ஒற்றை அறையில் ஊடக நிறுவனத்தை ஆரம்பித்து வைத்துக் கொண்டு உரிமையாளர்கள் என்ற பெயரில் ஊடக சமூகத்தை இவர்கள் படுத்தும்பாடு… அறுவெறுப்பானது…கை கால்களை ஊனமாக்கி, கண்களை குருடாக்கி குழந்தைகளை ரோட்டில் யாசகம் பெற வைப்பதை விட கொடுமையானது… வேறு வேலைக்கும் செல்ல முடியாமல் செய்கின்ற வேலையிலும் ஊதியத்தை ஈட்ட முடியாமல் தினம் தினம் இவர்கள் படும் பாடு சொல்லி மாளாது… சொல்லொண்ணா வேதனை…

ஒவ்வொரு மாவட்டத்தின் தலைமையிடத்தில் இன்றைய நிலையில் 100க்கும் அதிகமான பத்திரிக்கையாளர்களும், புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவாளர்களும்… மாவட்டத்தில் தாலுகா, பெரிய ஊர்கள் என அதன் எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டு விடும்… இவர்களுக்கெல்லாம் வருமானம்… சொன்னால் வெட்கக்கேடாகி விடும்…எங்கு தங்களுக்கு வேலைபோய்விடுமோ என்ற அச்சத்தில் உறைந்தவர்களாய் வாய் இருந்தும் ஊமைகளாய் நாட்களை நரகம் போல கடத்தி வருகிறார்கள்.. கட்டிட பணிக்கு செல்லும் தொழிலாளிகள் கூட நாளொன்றுக்கு 500 ரூபாய்க்கு குறையாமல் ஊதியம் பெறுகிறார்கள். மற்றவர்கள் எங்கு நிகழ்ச்சி நடக்கிறது, அங்கு என்ன கொடுப்பார்கள் என்பதுதான் நடந்து கொண்டிருக்கும் அவலம்…எங்கே? ஒரு சில ஊடகங்கள் தவிர மற்ற ஊடகத்தினரை மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் கூறச்சொல்லுங்கள் பார்ப்போம்… நான் நல்ல ஊதியம் பெற்று வருகிறேன் என்று… சத்தியமாக சொல்ல முடியாது… ஏனென்றால் பிச்சை எடுக்க வைக்கும் கம்பெனிகளின் கைங்கர்யம் அது…

பாரம்பரிய நிறுவனம் என்று சொல்லும் சில நாளிதழ்கள் கூட இன்னமும் பல ஊழியர்களுக்கு இஎஸ்ஐ, பி.எப்., என எதையும் வழங்குவதில்லை… ஊரெல்லாம் ரெய்டு நடத்தும் அதிகாரிகள் இதுபோன்ற பத்திரிக்கை நிறுவனங்களில் கைவப்பதில்லை… ஏன்? இவர்கள் கைநீட்டுவதை வெளியில் சொல்லி விடுவார்கள் என்ற அச்சம்… தொழிலாளர் நல அலுவலகம் சிறிய ரோட்டோர உணவகங்கள், தேனீர்கடைகளில் மட்டும்தான் சோதனை நடத்த வேண்டும் என்று விதியிருக்கிறதா என்ன? இந்த வெட்கக்கேட்டில் மத்திய மாநில அரசுகளில் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம், இயக்குனரகம், அலுவலகம் என எந்த குறைச்சலும் இல்லை… ஒரு நிறுவனம் முறையாக ஊழியர்களுக்கு ஊதியம் கொடுத்து இயங்குகிறதா? அவர்களுக்கு சட்டத்தின்படி பலன்கள் வழங்கப்படுகிறதா? என்றெல்லாம் ஆராய முடியாத அரசு இருந்தென்ன? ஒழிந்தென்ன?பண்டிகை பலன்கள் வந்தால் போதும் என்பதுதான் அதிகாரிகளின் ஆண்டு பட்ஜெட் கணக்கீடு… இந்த ஈனப்பிழைப்பு எதற்கு…?

அப்படித்தான் உங்களது குடும்பமும் குழந்தைகளும் வாழ வேண்டுமா? வேண்டுமானால் சொல்லுங்கள் உங்களுக்கும் அடையாள அட்டை கொடுத்து பத்திரிக்கையாளராய் சேர்த்துக் கொள்கிறோம்…இத்தனை கோளாறுகளையும் அரசின் பக்கத்திலும், உரிமையாளர்கள் என்ற பெயரில் உலா வரும் ஊழல்வாதிகளையும் வைத்துக் கொண்டு… பத்திக்கையாளன் 100 வாங்குகிறான்… 200 வாங்குகிறான் என அவன் மீது பாய்வது,… அவனை ஏளனமாக பார்ப்பது என்ன நடைமுறை… உரிமையாளர்களுக்கு தெரியாதா இன்றைய சூழலின் விலைவாசி நிலவரம்… கல்விச்செலவு, மருத்துவச்செலவுகள்… அடப்பாவிகளா… ஒரு மதிப்பு மிகுந்த பத்திரி்க்கை என்ற சமுதாயத்தையே கேவலத்துக்குள்ளாக்கி விட்டீர்களே! வாழ்நாளைய நரகம் உங்களை வந்தடையட்டும் என வாழ்த்துகிறேன்…
நானும் பத்திரிக்கையாளன் என்ற முறையில் கண்ணில் கண்டதையும், அனுபவத்திற்கு உட்பட்டதையும் உள்ளடக்கித்தான் இதை நான் எழுதுகிறேன்… ஊரை முன்னேற்ற ஓடி ஓடி செய்தியும் புகைப்படமும் எடுக்கும் ஊழியர்களை யார் கண்டு கொள்கிறார்கள்? அவர்களது பின்னணி வாழ்க்கையை யார் எண்ணி பார்க்கிறார்கள்?சரியான ஊதியம் கொடுத்து ஒரு நிறுவனத்தை நடத்த முடிந்தால் நடத்த வேண்டும்… இல்லையேல் விட்டொழித்து அவர்களையாவது வாழ விட வேண்டும்… புலிவாலை பிடித்த கதையாக தொடர்கிறது பத்திரிக்கையாளர்களின் வாழ்க்கை முறை…

அதிகாரிகள் முன்பு ஜம்பமாக டாம்பீகமாக அமர்ந்து பேசிவிட்டு மற்ற நிறுவனங்களில்… அடிமை போல் வாழ விருப்பம் இல்லாமல் எத்தனை பேர் வாழ்க்கையை தொலைத்து விட்டு வீணே திரிகிறார்கள் என்ற புள்ளிவிவரம் அரசுக்கோ, ஊடக நிறுவனங்களுக்கோ தெரியுமா? தெரியவாய்ப்பில்லை… கண்டு கொள்வாரும் இல்லை…இதனால் இது இல்லாவிட்டால் அது… அது இல்லாவிட்டால் எதுவோ… என அடையாள அட்டையும், டிவி மைக் லோகோவும் கொடுக்கும் நிறுவனங்களை நோக்கி கோவிலில் பிரசாதத்துக்கு அலையும் கூட்டம் போல் மொய்க்கின்றனர் சென்னையை நோக்கி தினம் தினம்… தனியார் பள்ளிகளில் சரியாக ஊதியம் வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வங்கிக்கணக்குகளில்தான் ஊதியம் போட வேண்டும் என்ற உத்தரவு உள்ளது…. இன்னபிற நிறுவனங்கள், தனியார் துறைகளிலும் இதே கிடுக்கிப்பிடி நீடிக்கிறது…

பத்திரிக்கை நிறுவனங்களுக்கு இந்த கட்டுப்பாடெல்லாம் கிடையாதா? இல்லை கண்டுகொள்ளப்படவில்லையா? தமிழகத்தின் பாரம்பரிய ஒரு மாலை நாளிதழ் நிறுவனம் கூட இன்னும் வங்கிக்கணக்கில் ஊதியம் கொடுக்காமலும், இஎஸ்ஐ, பிஎப். என எதுவும் ஊழியர்களுக்கு வழங்காமல் இயங்கத்தான் செய்கிறது… அலுவலகங்கள் தோறும் சிசிடிவி கேமரா, வருகைப்பதிவேடு இயந்திரம் என இருக்கத்தான் செய்கிறது… மனமுண்டானால் மார்க்கமுண்டு… அதிகாரிகள் நினைத்தால் எந்த நிறுவனத்திலும் சோதனை நடத்தலாம்… அதற்கு பத்திரிக்கை நிறுவனங்கள் விதிவிலக்கல்ல… சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் என்பதை அரசும், அதிகாரிகளும் உணர வேண்டும்…பொறுத்திருந்து பார்ப்போம் புதிய இந்தியாவில் புதிய தமிழ்நாடும் புதிய பத்திரிக்கை ஜனநாயகமும் பிறக்கிறதா? என்று… பத்திரிக்கையாளர்களில் ஒருவனாய் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் இந்த கனவு ஈடேறுவதைக்காண……! !

சென்னை பிரஸ்மேன்