ஜோதி – விமர்சனம்!

ஜோதி – விமர்சனம்!

நாம் நாளிதழ்களில் அன்றாடம் பார்க்கும் செய்திகளில் ஒன்று – குழந்தைக் கடத்தல்… எங்கோ, யாருக்கோ நடக்கும் விஷயமென்று நினைத்து நாம் கடக்கும் சம்பவத்துக்குப் பின் இருப்பதை இன்று வரை யாருமே புரிந்து கொள்ள முயலவில்லை. சில பல ஆண்டுகளுக்கு முன் குழந்தைக் கடத்தல் பின்னணியை மனம் அதிரச் சொன்ன ‘6 மெழுகுவர்த்திகள்’ திரைப்படம் நினைவிருக்கலாம். இதன் பின்னர் கடந்த நாலைந்து வருஷங்களுக்கு நடிகர் பார்த்திபன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் குழந்தைக் கடத்தல் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்; அதை அடுத்து குழந்தைகள் கடத்தலுக்கு எதிராக, ‘அபயம்’ அமைப்பு உருவானது. தவிர, ஏராளமான தன்னார்வ அமைப்புகள் இந்தப் பிரச்னைக்காக குரல் கொடுத்து வருகின்றன. ஆனாலும் இன்றளவும் தமிழகத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று குழந்தைகள் கடத்தப்படுகின்றனர் என்ற சூழலில் இக்கடத்தலால் நிகழும் பாதிப்புகள் குறித்த ஒரு விழிப்புணர்பு ஏற்படுத்தும் படமே ‘ஜோதி’.

அதாவது நான்கு நாளில் பிரசவம் ஆகவிருக்கும் டாக்டர் ஒருவரின் கர்ப்பிணி மனைவி ஜோதியின் (ஷீலா) வயிற்றை அறுத்து குழந்தையை திருடி செல்கிறான் மர்ம ஆசாமி… இதை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ( வெற்றி) கேள்விப் பட்டு அதிர்ச்சி அடைந்து. துருவி துருவி விசாரணை நடத்துகிறார். மர்ம ஆசாமியை நெருங்கியது போல் தோன்றினாலும் அவனை கண்டறிய முடியவில்லை. பலர் மீது சந்தேகப்பார்வை விழுந்தாலும் அவர்கள் குற்றவாளிகளாக உறுதி செய்யமுடிய வில்லை.ஒரு கட்டத்தில் குழந்தை கடத்தலுக்கு பின்னால் ஒரு கூட்டம் வியாபாரம் நடத்தும் விவகாரம் அம்பலமாகிறது. ஆனாலும் வயிற்றை கிழித்து குழந்தையை திருடும் பயங்கரம் நடந்தது எப்படி நடந்தது என்பதற்கு கிளைமாக்ஸில் விடை தெரியும்போது ஜோதி ஜ்வாலையக தகிக்கிறது என்பதுதான் கதை.

போலீஸ் அதிகாரியாக வரும் சக்தி சிவபாலன், போலீசுக்குரிய மிடுக்குடனும், கம்பீரத்துடனும் வலம் வருகிறார். எந்நேரமும் வழக்கு பற்றிய சிந்தனையிலேயே இருப்பது போன்ற முகத் தோற்றம் பார்வையாளர்களை ஒருவித பரபரப்புக்குள் ஆழ்த்துகிறது. ஜோதி (எ) அருள்ஜோதியாக, நிறைமாத கர்ப்பிணியாக வரும் ஷீலா ராஜ்குமார் சிறப்பான, பொறுப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். துக்கத்திலும் தாய்மை உணர்வை துல்லியமாக பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார். குழந்தைகளைக் கடத்தும் கயவனுக்கு பாடம் கற்பிக்க அவர் எடுக்கும் ரிஸ்க்கான முடிவு புல்லரிக்க வைக்கிறது. தலை வணங்கச் செய்கிறது.

தயாரிப்பாளர் ராஜா சேதுபதி, மிக முக்கியமான ’ரங்கா’ என்ற கதாபாத்திரத்தில் தோன்றி, திறமையான நடிப்பை வெளிப்படுத்தி, கதை ஓட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்துகிறார். ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது பாத்திரங்களுக்கு ஏற்ற நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

செஸி ஜெயாவின் ஒளிப் பதிவும் ஹர்ஷவர்தன் ராமேசுவரின் இசையும் ஜோதிக்கு பலம் சேர்க்கின்றன.

இன்றளவும் சட்டத்துக்குப் புறம்பான முறையில் தத்தெடுத்தல், பிச்சை எடுத்தல், குழந்தை தொழிலாளர்கள், பாலியல் குற்றங்கள், உடலுறுப்பு திருட்டு, நரபலி என பல காரணங்களுக்காக குழந்தைகள் கடத்தப்படும் போக்கைப் பற்றி தன்னுடைய கிராமத்தில் நிஜமாக நடந்த ஒரு சோக நிகழ்ச்சியையும் மையப்படுத்தி நட்ந்த தேடுதல் வேட்டையில் இரண்டே மணி நேரத்தில் காணாமல் போன குழந்தையை மீட்ட இன்ஸ்பெக்டரின் சாதுர்யம்,சாமர்த்தியத்தை மையமாக வைத்து அத்துடன் கற்பனை திறனையும் கலந்து சுவையான திரைக்கதையுடன் ஒரு படைப்பைக் கொடுத்துள்ளார் இயக்குனர் ஏவி.கிருஷ்ண பரமாத்மா.

மொத்தத்தில் குழந்தைகள் நலனில் அக்கறைக் காட்ட ஒளிரும் ஜோதி இது

மார்க் 3/5

error: Content is protected !!