December 1, 2021

சிஆர்பிஎப் வீரர்களின் அவல நிலை: பார்லிமென்ட் கமிட்டி அறிக்கை கவலை!

நம் நாட்டின் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்ட சுமார் 3 லட்சம் வீரர்கள் கொண்ட சிஆர்பிஎப் எனப் படும் மத்திய ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ் வீரர்கள் படும் இன்னல்கள் குறித்து அவ்வப்போது அறிக்கையோ, தகவல்களோ வருவது வாடிக்கை. ஆனால் அதற்கு அரசு எந்த தீர்வும் காண முயல்வதில்லை என்றாலும் அண்மையில் இந்த சி பி ஆர் எப் வீரர்கள் அதிக நேரம் பணியில் இருக்கின்றனர். தற்போது, சிறிய அளவிலான, சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளுக்கு கூட, சி.ஆர் .பி.எப்., உதவியை மாநில அரசுகள் நாடுகின்றன. அதே நேரத்தில், போகும் இடத்தில் மாநில அரசுகள் அவர்களுக்கு அடிப்படை வசதி கூட இல்லை என்று உள்துறை விவகாரங்களுக்கான பார்லிமென்ட் கமிட்டி அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த சி பி ஆர் எப்-பில் சுமார் 80 முதல் 89 சதவீதம் வீரர்கள் எந்தச் சமயத்தில் எங்கு வேண்டுமா னாலும் பணியமர்த் தப்படலாம் என்ற நிலையில் உள்ளனர். சுமார் 80 முதல் 85 சதவீதம் வீரர்கள் மோதல்கள் அதிகம் உள்ள இடங்களில் நிரந்தரமாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களில் மாவோயிஸ்ட் பிரச்னை உள்ள 10 மாநிலங்கள் (37 சதவீதம்), தீவிரவாதப் பிரச்னை உள்ள ஜம்மு காஷ்மீர் (28 சதவீதம்) மற்றும் பிரிவினைவாதப் பிரச்னை உள்ள வட கிழக்கு மாநிலங்கள் (16 சதவீதம்) ஆகியவற்றில் பணி புரிகிறார்கள்.

கடினமான பணிச்சூழல் காரண மாக பெரும்பாலான வீரர்கள் தங்கள் குடும்பங்களில் நடை பெறும் திருமணங்கள், இறப்புகள் மற்றும் இதர விசேஷங்களில் பங்கு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் சமூகம் ஆகியவற்றால் தனித்து விடப்படுவதோடு, அவர்களுக்குத் திருமணம் நடைபெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

வீரர்கள் பணியாற்றும் இடங் களில் தங்களின் குடும்பத்தினரை அழைத்து வர அனுமதி இல்லாத காரணத்தால் குடும்பத்தைப் பிரிந்து பணிபுரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்குப் பெற்றோர் களின் முழுமையான அன்பு கிடைப்பதில்லை என முன்னரே சில ஆய்வு தகவல்கள் வெளியான சூழ்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமை யிலான உள்துறை விவகாரங்களுக்கான பார்லிமென்ட் கமிட்டி, மத்திய உள்துறை அமைச்சகத் திடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், “ சிஆர்பிஎப் வீரர்கள் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் பணியாற்றுகின்றனர். 80 சதவீத வீரர்களுக்கு விடுமுறை கூட எடுக்க முடிவதில்லை. இவர்கள் ஆண்டு முழுவதும் பணியாற்றும் நிலை உள்ளது. துணை ராணுவ வீரர் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது. போதிய சுகாதார வசதிகள், விடுமுறை இல்லாமல் பல நாட்கள் பணியாற்றுவதால், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

நாட்டின் பல பகுதிகளில் சிறிய அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும்போதும் சிஆர்பிஎப் வீரர்கள் அங்கு அனுப்பப்படுகின்றனர். பயிற்சியில் ஈடுபட்டுள்ள 98 சதவீத துணை ராணுவ கம்பெனி களும் ஆங்காங்கே சட்டம் ஒழுங்கு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஒவ்வொரு சட்டம் ஒழுங்கு பிரச்னைகளின் போதும் சிஆர்பிஎப் படையை நம்பிகொண்டிருக்காமல் தங்களுடைய போலீஸ் படைக்கு தகுந்த பயிற்சி வழங்க மாநிலங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதே போல் இந்தோ –திபெத் எல்லை படையின் 82 சதவீத முகாம்களில் உள்ள வீரர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பது இல்லை. 24 சதவீத முகாம்களில் மின்சார வசதி,40 சதவீத முகாம்களில் சாலை வசதி கூட இல்லை. அசுத்தமான குடிநீரால் ஆண்டுதோறும் 3 ஆயிரம் வீரர்கள் உடல் உபாதைகளினால் பாதிக்கப்படுகின்றனர்”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் இந்தப் படைப் பிரிவில் இருந்து நிறைய வீரர்கள் விலகு கிறார்கள். கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் 32,297 பேர் இதிலிருந்து விலகி இருக்கிறார்கள். எனில், ஓர் ஆண்டுக்கு நான்காயிரம் பேர் என்ற கணக்கில் வீரர்கள் விலகி வருகிறார்கள் என்பது முன்னரே கவலை தரும் ஒரு ரிப்போர்ட் வெளியானது நினைவுக்குரியது.