October 6, 2022

ஜீவி படத்துக்கு நம்ம ஆந்தை ரிப்போர்ட்டரில் எ ஸ்கொயர் பிளஸ் பி ஸ்கொயர் இஸிகோல்டு ஏ ஸ்கொயர் + பி ஸ்கொயர் என்று இயந்திரத் தனமாய் கணக்கு சொல்லும் புத்திசாலி மாணவனா நீங்க.. அப்ப உங்களுக்கு கண்டிப்பா ஜீவி பிடிக்கும்..

சிறுகதை – குறிப்பாக தி.ஜானகிராமன் படைப்புகளை வாசிப்பவரா நீங்க .. – அப்ப உங்களுக்கு கண்டிப்பா ஜீவி பிடிக்கும்..

திருமூலரின்

பிரமனைப் பார்த்து போயில் தெளிந்து நீ
அரமனைக்குள்ளே அந்தித்து வாசியை
உரமனைத் தாக்கு ஓடிலும் ஓடாது
திரமனை யோடுஞ் சிவயோகி ஆகுமே – என்ற பாடலை பாடி அதன் பொருளைக் கண்டுணர்ந்து உள்ளீர்களா.. – அப்ப உங்களுக்குக் கண்டிப்பா ஜீவி பிடிக்கும்

விதி குறித்தும் அதை அலசும் மதி குறித்தும் நண்பர்களிடம் அலசுவதுண்டா.. – அப்ப கண்டிப்பா ஜீவி உங்களுக்கு பிடிக்குமுங்கறேன் ..அட நல்லதொரு சினிமா பார்க்க பிரியப்படுபவரா நீங்க – அப்ப கண்டிப்பா ஜீவி உங்களுக்கு பிடிச்சே தீரும் – என்ற ரீதியில் விமர்சனம் செய்து இருந்தோம். அதாவது விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்று நாம் கேஷூவலாக சொல்வதற்கு பின்னால் ஒரு அறிவியல் இருக்கிறது என்பதை இப்படத்தின் மூலம் சொல்லியிருந்த படம் மெஹா ஹிட் ஆன நிலையில் அதன் பாகம் இரண்டு உருவாகி உள்ளது.

முந்தையை படத்தில் நாயகன் விதி அவர் நினைத்தது போல எதையும் நடக்க விடாமல், இறுதியில் நாயகன் திருடிய அவருடைய பரம்பரை நகைகள் யாருக்கு செல்ல வேண்டுமோ அவருக்கு கிடைப்பது போல முடித்திருப்பார்கள்.. அது போல் இதில் அடுத்தடுத்து வாழ்வில் நிகழும் துயரங்களால் திருடனாகிறார் நாயகன் வெற்றி. அந்த திருட்டுச் சம்பவத்திற்குப் பிறகு நடக்கும் குழப்பங்களும் அதிரடி திருப்பங்களுந்தான் இப்படத்தின் கதை

அமைதியான முகம் இயல்பான நடிப்பு என கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் வெற்றி, முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்தில் சண்டைக்காட்சியில் சற்று மெனக்கெட்டிருக்கிறார். அவ்வளவே. கருணாகரன் முதல் பாகத்தைப் போலவே இதிலும் படம் முழுவதும் வருகிறார். காமெடி நடிகராக அல்லாமல் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் கருணாகரன் அளவான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் ரோகிணி, மைம் கோபி, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜவஹர், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரமா, நாயகனின் நண்பராக நடித்திருக்கும் முஷாபிர் என அனைவரும் தங்களது பங்களிப்பை அளவாக செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி கே.எஸ்-ன் பின்னணி இசை அளவு. ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார்.டி கதைக்கு என்ன தேவையோ அதை வழங்கி இருக்கிறார். படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் காட்சிகளை கச்சிதமாக தொகுத்திருப்பதோடு, படத்தை ஸ்பீடாக பார்க்க வழி செய்து இருக்கிறார். ஸ்டண்ட் இயக்குநர் சுதேஷின் சண்டைக்காட்சிகள் கேஷூவலாக உள்ளது.

முதல் பாகத்தில் வேறு ஒருவரின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கிய வி.ஜே.கோபிநாத், இதில் கதையை எழுதி இயக்கியும் இருக்கிறார். அப்படத்தில் இருந்த ஏதோ ஒன்று இதில் மிஸ் ஆனதால் முதல் பாகம் அளவுக்கு சோபிக்கவில்லை என்றால் சோடை போகவில்லை..!

மொத்தத்தில் இந்த ஜீவி 2 குடும்பத்தோடு பார்க்கலாம் என்ற பட்டியலில் இணைந்து விட்டது

மார்க் 3/5