ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுத்தம்! – கடன் வழங்க யாருமில்லாததால் இம்முடிவு!

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்ப்பட்டு வரும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் 7,000 கோடி ரூபாய்க்கு மேல், கடனில் சிக்கிஉள்ளது. பைலட்கள், பராமரிப்பு இன்ஜினியர்களுக்கு, மூன்று மாதத்துக்கு மேல், சம்பள நிலுவை உள்ள நிலையிலும் நம் நாட்டின் மிகப்பெரிய தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமாக இருந்த ஜெட் ஏர்வேஸ், தமது விமான சேவைகள் முழுவதையும் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.

பல்வேறு காரணங்களால்கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், விமான சேவைகளை தொடர்ந்து நடத்துவதற்காக கேட்டிருந்த 1500 கோடி அவசர காலக் கடனுதவி எஸ் பி ஐ வங்கியில் இருந்து கிடைக்காத நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர் பேச்சுவார்த்தையின் போது இந்த விமான நிறுவனம் கேட்டிருந்த முக்கியமான, இடைக் கால கடனுதவியை செய்ய முடியாது என்று இந்தியக் கடனாளர்கள் அமைப்பின் சார்பில் சார்பில் இந்திய ஸ்டேட் வங்கி நேற்றிரவு தெரிவித்ததாகவும், இந்நிலையில், விமானங்களை இயக்கு வதற்குத் தேவையான எரிபொருள், முக்கிய சேவைகளுக்கு செலுத்தவேண்டிய பணம்கூட இல்லாததால், எல்லா உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களையும் நிறுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அந்நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஆக., இந்த நிறுவனத்தின் கடைசி விமானம் இன்று புதன்கிழமை இரவு 10.20-க்கு அமிர்தசரஸில் இருந்து மும்பைக்கு புறப்படும். இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் தொடர்புடைய அரசு நிறுவனங்களுக்கு இந்த நடவடிக்கைகள் பற்றி தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்படுவதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 கோடி டாலருக்கும் அதிகமான கடனில் சிக்கித் தவித்து வரும் இந்த நிறுவனம், சில தினங்களுக்கு முன்புதான் அதன் அனைத்து வெளிநாட்டு விமான சேவைகளையும் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.