காஞ்சி சங்கரமட பீடாதிபதி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி -க்கு அஞ்சலி

காஞ்சி சங்கரமட பீடாதிபதி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி -க்கு அஞ்சலி

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சுப்ரமணியம் மாகாதேவ ஐயர் என்ற இயற்பெயரைக் கொண்ட ஜெயேந்திர சரஸ்வதி, தனது 19-வது வயதில், 1954 -ம் ஆண்டு காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதியாகப் பொறுப்பேற்றார் ஜெயேந்திர சரஸ்வதி. அதன்பின், 40 ஆண்டுகள் கடந்து 1994-ம் ஆண்டில் காஞ்சி சங்கர மடத்தின் 69-வது பீடாதிபதியாக அவர் பொறுப்பேற்றார். இவருக்கு இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக மடத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர். சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஜெயேந்திரர் கடந்த இரண்டு மாதங்களாக நோய்க்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை அவருக்குத் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காஞ்சி சங்கர மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இவர் மறைவு குறித்த தலைவர்களின் இரங்கல் தொகுப்பு:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி;

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸித்தியடைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். நமது நாடு ஆன்மிக தலைவரையும் சமூக சீர்திருத்தவாதியையும் இழந்துவிட்டது. அவரை இழந்து வாடும் பக்தர்களுக்கு எனது இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ,

மனிதகுலம் முன்னேறுவதற்காக ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாடுபட்டார். அவரது ஆன்மா இறைவனின் திருவடியில் சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்

பிரதமர் மோடி

“ ஜெயேந்திரர் மறைவு குறித்து கேள்விப்பட்டதும் மிகுந்த வேதனை அடைந்தேன். ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க ஜெயேந்திரர் பல நிறுவனங்களை வளர்த்தார். முன்மாதிரியான சேவைகள் மற்றும் உயர்ந்த சிந்தனைகளால் ஜெயேந்திரர் லட்சக்கணக்கான பக்தர்களின் இதயங்களிலும் மனங்களிலும் நீடித்து வாழ்வார். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன்

காங்கிரஸ் தலைவர் ராகுல்:

சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் ஸித்தி அடைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தன்னுடைய போதனைகளால் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்களின் மனங்களில் இடம்பிடித்துள்ளார். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன்:

மனிதகுலம் சிறந்த துறவியை இழந்துவிட்டது

கவர்னர் பன்வாரிலால்:

சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் ஸித்தியடைந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை நேற்று சந்தித்து ஆசி பெற்றேன். அவர் பல கல்வி நிறுவனங்களையும், மருத்துவமனைகளையும் நிறுவியவர். அவரை இழந்து வாடும் பக்தர்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆன்மீக பணிகளோடு, சமூக முன்னேற்றப் பணிகளிலும் அக்கறை காட்டியவர். காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை இழந்து வாடும் அவரது ஆன்மீக பக்தர்களுக்கும், காஞ்சி சங்கர மடத்தின் நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:

காஞ்சி சங்கர மடத்து மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி இன்று காலை தனது 83-வது வயதில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். அவருடனும், அவரது மடத்துடனும் திராவிடர் கழகத்திற்கு எவ்வளவு மலையளவு கருத்து கொள்கை வேறுபாடுகள் இருப்பினும்- திராவிடர் கழகம் அவரது மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல்நலக் குறைவால் திடீரென்று இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில், அவரை இழந்து வாடும் அவருடைய விசுவாசிகள் அனைவருக்கும் காஞ்சி சங்கரமடப் பணியாளர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:

சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். அவரது மறைவு ஆன்மிக உலகிற்கு பேரிழப்பாகும். அவர்களது மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும், என் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:

காஞ்சி சங்கர மடத்தின் தலைவர் ஜெயேந்திரர் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இச்செய்தி கேட்டு வேதனையும், துயரமும் அடைந்தேன். காஞ்சி ஜெயேந்திரர் மடாதிபதி என்பதைக் கடந்து கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளை தொடங்கி சேவை நோக்கத்துடன் நடத்தி வந்தார். நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்து வந்த அயோத்தி சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அவரது மறைவு அவரைச் சார்ந்த அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

பத்திரிகையாளர் யுவகிருஷ்ணா:

எங்கள் மாவட்டத்தின் முக்கிய தலை ஒன்று சரிந்திருக்கிறது. ஜெயேந்திரர், தன்னுடைய வாழ்நாளின் பிற்பகுதி முழுக்க எதிர்மறையான கண்ணோட்டத்துடனேயே பார்க்கப்பட்ட மதத்தலைவர். அவருடைய இளம் வயதில் இந்து மதத்தை சீர்த்திருத்த வேண்டும் என்கிற நோக்கம் கொண்டிருந்தார். முன்னோர் செய்த தவறுகளை நேரடியாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும், அவை களையப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தார்.

மதமாற்றத்துக்கு தீர்வு, அதை எதிர்ப்பது அல்ல. மதமாற்றத்துக்கான காரணத்தை கண்டறிந்து ஒழிப்பதே என்கிற முடிவுக்கு வந்திருந்தார். மதம் என்பதை தாண்டி மக்கள் சேவைக்கு மடங்கள் தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்கிற கருத்தை முன்வைத்து கல்வி நிலையங்கள், மருத்துவ சேவை, அரசியல் பார்வை என்று ஒரு மடாதிபதியின் எல்லைகளை தாண்டி செயல்பட்டார்.

எண்பதுகளின் துவக்கத்தில் ஒருங்கிணைந்த செங்கை மாவட்டம் முழுக்க காஞ்சி மடம் சார்பில் தரமான கல்வியை கொண்டுச் சேர்க்கும் வகையில் ‘சங்கர வித்யாலயா’ பள்ளிகள் துவக்கப்பட்டன. இதில் பார்ப்பனரல்லாத குழந்தைகள் அதிகளவில் சேர்க்கப்பட வேண்டும் என்பது ஜெயேந்திரரின் விருப்பம்.

ஆனால் –

அதை நடைமுறைப்படுத்தியவர்களின் கோளாறு காரணமாக அவரது நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. நான் மழலையர் வகுப்பில் சேர்க்கப்பட்ட முதல் பள்ளி சங்கர வித்யாலயா. எங்கள் பகுதியில் பார்ப்பனரல்லாத குழந்தைகள் முதன்முறையாக கான்வெண்ட் வகுப்பில் சேர்ந்தது அங்குதான். அதற்கு முன்பாக கான்வெண்ட் என்றாலே அது சர்ச்சுகள் நடத்துவதுதான். அங்கெல்லாம் கிறிஸ்தவ மதக் குழந்தைகளுக்குதான் முன்னுரிமை கிடைக்கும். மாற்று மதத்தினர் சேரவேண்டுமென்றால் பெரும் தொகையை டொனேஷனாக தரவேண்டும். பொருளாதாரரீதியாக வசதியாக இருந்த பார்ப்பனக் குழந்தைகள்தான் அந்த வாய்ப்பையும் பெறுவார்கள்.

ஜெயேந்திரரின் சாதனைகளில் மகத்தானதாக குறிப்பிடப்பட வேண்டியது சங்கர நேத்ராலயா. லட்சக்கணக்கானோருக்கு கண்ணொளி ஏற்படுத்திய மகத்தான சேவை நிறுவனம். காஞ்சி மாவட்ட கிராமங்களிலிருக்கும் முதியோர் ஆயிரக்கணக்கனோருக்கு முற்றிலும் இலவசமாகவே கண்புரை அறுவை சிகிச்சை செய்துத் தந்திருக்கிறார்கள். அவர்களது கண் பரிசோதனை முகாம்களில் சோதனை செய்துக் கொண்டவர்களுக்கு ஏதேனும் கோளாறு இருக்குமேயானால், வீட்டுக்கு வந்து அவர்களது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயர்தரமான உபசரிப்போடு சிகிச்சை அளித்து அனுப்புவார்கள். என் தாயாருக்கேகூட சங்கரநேத்ராலாய தரமான சிகிச்சை கொடுத்ததற்காக தனிப்பட்ட முறையில் சங்கரநேத்ராலயாவுக்கு நன்றிக்குரியவன்.

பள்ளி, மருத்துவமனை, கல்லூரி, பல்கலைக்கழகம் என்று மடத்தின் சேவைகள் விரிவுபடுத்தப் பட்டதற்கு ஜெயேந்திரரே முழுமையான காரணம். அவரது காலத்தில்தான் மடம் பொருளாதாரரீதியாக ஸ்திரமானது.

எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் சுவாமிகளின் திக்விஜயங்கள் முக்கியமானவை. திடீர் திடீரென்று தன் வண்டியை சேரிகளுக்கு விடச்செய்வார். வர்ணத்தில் சேர்க்கப்படாத பஞ்சமர்களை இந்துக்களாக அங்கீகரிக்கக்கூடிய மனம் கொண்ட மதத்தலைவராக அவரே இருந்தார். இதனால் சொந்த சாதியினரின் மனவருத்தத்தையும் சம்பாதித்தார்.

பெரியவர் சந்திரசேகர் மறையும்வரை காஞ்சி மடம் என்பது முழுக்க பார்ப்பனீயமயமாக்கப்பட்ட மடமாக இருந்தது. ஜெயேந்திரர், மடாதிபதியான பிறகு பார்ப்பனரல்லாத மற்றவர்கள் அங்கே சகஜமாக புழங்க முடிந்தது.  தொண்ணூறு களில் பாபர் மசூதி பிரச்னை நாடு முழுக்க கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தபோது, ‘பேச்சுவார்த்தை மூலமே தீர்வு’ என்று தைரியமாக சொன்ன இந்து மதத்தலைவர் இவர் மட்டும்தான். சொன்னதோடு இல்லாமல் டெல்லி இமாம் போன்றவர்களோடு இணக்கமாக செயல்பட்டு பிரச்சினையை தீர்க்க நேரடியாக முனைந்தார். வட இந்திய மடாதிபதிகளும், அரசியல்வாதிகளும் ஜெயேந்திரரின் இந்த மத நல்லிணக்கப் போக்கை ஏற்றுக் கொள்ளாமல் அவரை திருப்பி அனுப்பினார்கள்.

ஜெயேந்திரரின் ஆன்மா சாந்தியடைய அவர் நம்பிய இறை அருள் புரியட்டும்.

error: Content is protected !!