August 17, 2022

ஜெ. வசித்து வந்த வேதா இல்லம் உள்ளிட்ட சொத்துக்கள் முடக்கம்: வருமான வரித் துறை தகவல்!

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்ய, சுப்ரிம் கோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது .அதன்படி, பறிமுதல் செய்யும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்ட போது ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லம் சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்படவில்லை என்றும் போயஸ் தோட்டவீடு, ஜெயா டிவி அலுவலகம், நமது எம்ஜிஆர் பத்திரிகை ஆகிய அனைத்தும் சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிலே இருக்கிறது என்றும் தகவல் வெளியான நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கிக்காக அவரது போயஸ் கார்டன் வேதா நிலையம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது என சென்னை ஐகோர்டில் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

’81, வேதா நிலையம், போயஸ்கார்டன்’ எனும் முகவரியிலுள்ள பங்களாவை ஜெயலலிதாவும், அவரது அம்மா சந்தியாவும் 1967ல் 1.32 லட்சத்துக்கு வாங்கினார்களாம். இன்று அதன் மார்க்கெட் மதிப்பு கிட்டத்தட்ட 1.25 கோடி முதல் 1.75 கோடி ரூபாய்.

* இந்த பங்களாவின் மொத்த பரப்பளவு 24 ஆயிரம் சதுர அடிகள்.

* மொத்தம் இரண்டு ஃப்ளோர்கள். கீழே பெரிய ஹால்கள் அடங்கிய ஆறு அறைகள். மேலே ஐந்து அறைகள் இருக்கின்றன

* ஜெ.,வை பொறுத்தவரை மெகா செண்டிமெண்ட் இல்லம் இது. அரசியல், பர்ஷனல் என்று பல முக்கிய முடிவுகளை இங்கிருந்துதான் எடுப்பார்.

* போயஸ் கார்டன் வீட்டினுள் ஜெயலலிதா வசதியாக அமர்ந்து அலுவல்களை கவனிக்க முழு வசதியுடன் விசாலமான அறைகள் மூன்று உண்டு.

* தோழமை கட்சிகளின் தலைவர்கள், வட இந்திய அரசியல் பிரமுகர்கள், அரசு முறையாக சந்திக்க வரும் தொழிலதிபர்கள் இவர்களையெல்லாம் சந்திப்பதற்கென்று பிரத்யேக அறை உண்டு.

* கட்சியில் அல்லது அரசு பதவிகளில் பொறுப்பேற்கும் புதிய நிர்வாகிகளை வாழ்த்த தனி அறை உண்டு.

* பங்களா இல்லத்தின் அருகே அலுவர்களுக்காக சில அறைகளுடன் சில வருடங்களுக்கு முன் ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. இங்குதான் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் & மற்ற உதவியாளர்கள் இங்கு தங்கியிருந்தார்கள்.

* ஜெயா டி.வி.யின் பழைய அலுவலகமும் வேதா நிலையத்தை ஒட்டி இருக்கிறது.

* தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றால் இந்த வீட்டின் பால்கனியில் ஜெ., தோன்றி தொண்டர்களை பார்த்து வெற்றிச்சின்னத்தை காட்டும் அழகு தனியானது.

இப்படியாப்பட்ட ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான ‘வேதா நிலையத்தை’ நினைவு இல்லமாக மாற்றுவதாக கடந்த 2018, ஆகஸ்ட் 17-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தடைகோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, அவரது சகோதரர் ஜெ. தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் வருமான வரித்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம், 1990-91, 2011-12, 2006, ஆகிய ஆண்டுகளில் ரூ. 16.75 கோடி வரி பாக்கிக்காக 2007ம் ஆண்டு முதல் முடக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலை, மேரீஸ் சாலை மற்றும் ஐதராபாத் தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துகளும் முடக்கத்தில் உள்ளன. வரிபாக்கியை செலுத்தி விட்டால் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபனை இல்லை என நீதிமன்றத்தில் வருமானவரித்துறை சார்பில் தற்போது கூறப்பட்டு இருந்தது.

இந்த விவரங்களை அறிந்து கொண்ட நீதிபதிகள், ஓஹோ.. அப்படின்னா ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை யார் செலுத்துவது? அரசா, வாரிசுகளா, இல்லை வாரிசு இல்லாதவர் களின் சொத்துக்களை பராமரிக்கும் எஸ்டேட் துறையா எனப் பல கேள்விகளை எழுப்பினர்.

அப்போது அரசு தரப்பில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி விவரங்கள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றும் ஜெயலலிதா உறவினர்களான தீபா, தீபக் ஆகியோர் வாரிசு உரிமை கோரி வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து நீதிபதிகள், வருமான வரி பாக்கி ஜெயலலிதா வாரிசு உள்ளிட்ட விவகாரங்கள் இருக்கும் போது போயஸ் தோட்ட இல்லத்தை எப்படி கையகப்படுத்த முடியும், எந்த துறை கையகப்படுத்தியது ? நிலத்தை கையகப்படுத்தும் முன் யாரிடம் அனுமதி பெறப்பட்டது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினர். இதுகுறித்த விவரங்களை அரசு தரப்பும், ஜெயலலிதா வருமான வரி செலுத்தாமல் இருக்கும் நிலுவைத் தொகை குறித்த முழு விவரங்களை வருமான வரித் துறையும் இரண்டு வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.