வேதா நிலையம் என்பது நான் பிறந்த வீடு – தீபா பேட்டி =வீடியோ!

வேதா நிலையம் என்பது நான் பிறந்த வீடு – தீபா பேட்டி =வீடியோ!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் வேதா இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என்று கடந்த 2017ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து, நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது.

இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த தமிழக அரசு, வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில், நிலம், கட்டிடம், மரங்களுக்கு இழப்பீடாக ரூ.68 கோடி நீதிமன்றத்தில் செலுத்தி, தற்போது வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வேதா இல்லத்துக்கு இழப்பீடு நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியும், வீட்டில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை எடுக்கவும் எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கப்பட்டுள்ள அவரது சகோதரர் மகளான ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், சட்டப்பூர்வமான வாரிசுகளான தங்களை கேட்காமல், வேதா இல்லம் மற்றும் அங்குள்ள அசையா சொத்துக்கள் அனைத்தும் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்கு பயன்படுத்தப்படும் என்று தமிழக அறிவித்துள்ளது சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கானது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இழப்பீடு நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்க வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரமில்லை எனவும், தனியார் சொத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசுக்கு அதிகாரம் கிடையாது என்றும் தீபா தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், நிலம் கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரவில்லை. இழப்பீடு வழங்கிய உத்தரவை எதிர்த்து தான் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனைக்கேட்ட நீதிபதி, இதே போன்று தீபக் தொடர்ந்த வழக்குஏற்கனவே இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணையில் உள்ளதால் இந்த வழக்கையும் அதே அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டார். அப்போது, வழக்கை இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் வரை, இழப்பீடு தொகையை நிர்ணயித்த வருவாய் கோட்டாட்சியர் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தீபா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை நிராகரித்த நீதிபதி, ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை மனுதாரர் ஜெ.தீபா எங்கு இருந்தார் என கேள்வி எழுப்பியதுடன், வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு மாற்ற பரிந்துரைத்து உத்தரவு பிறப்பித்தார்.

இதை அடுத்து இது குறித்து விளக்கமளிக்க ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது இதுதான்:-

ஜெயலலிதா சொத்துக்களை அடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. நான் நடத்துவது சொத்துக்கான போராட்டம் இல்லை. நான் நடத்துவது உரிமைக்கான போராட்டம். போயஸ் இல்லத்தில் உள்ள அசையும் சொத்துக்களை கையக்கப்படுத்தும் முயற்சிக்கு தடை கோரி நான் வழக்கு தொடர்ந்தேன். ஜெயலலிதா சொத்துக்களை அளித்தால் அதனை அறக்கட்டளையாக அமைப்பதாக நீதிமன்றத்தில் ஒப்புதல் கொடுத்துள்ளேன்.

உங்களுக்கு என்ன வேண்டும் என எனது அத்தை ஜெயலலிதா பல முறை என்னிடம் கேட்டு உள்ளார் ஆனால் நாங்கள் அதை நிராகரித்து வந்துள்ளோம். ஜெயலலிதா விரும்பாததால் என்னால் போயஸ் இல்லத்திற்கு செல்ல முடியவில்லை என்பது இல்லை.

சசிகலாவால் தான் போயஸ் இல்லத்திற்கு என்னால் செல்ல முடியவில்லை. ஜெயலலிதா இருந்தபோது எனக்கும், போயஸ் இல்லத்திற்கும் சம்பந்தம் இல்லாதது போல் சித்தரித்தனர். நான் வேதா இல்லத்தில் தான் பிறந்தேன். 1997 ல் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போது நானும் தீபக்கும் அவரை சந்தித்தோம்.

2014 – ல் சிறையில் அடைக்கப்பட்ட போது பூங்குன்றன் மூலம் ஜெயலலிதா என்னிடம் பேசினார்.

ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்ம யுத்தத்தால் தான் எல்லோருக்கும் தலைவலி ஏற்பட்டது. எல்லா பிரச்சினைக்கும் காரணம் ஓ.பன்னீர் செல்வம் தான். நான் இப்போது தெய்வத்தையும், ஜெயலலிதாவின் ஆன்மாவைதான் நம்பி உள்ளேன்.

ஆறுமுகசாமி ஆணையம் 6 முறை அழைத்தும் ஓபிஎஸ் விசாரணைக்கு ஆஜராகாதது ஏன்? நான் தேவையின்றி அரசியலுக்கு வந்ததற்கு ஓபிஸ் தான் காரணம். ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது பற்றி அதிமுக தலைவர்களுக்கு கவலையே இல்லை.”இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!