அரசியலுக்கு குட் பை : ஜெ. தீபா அறிவிப்பு – வீடியோ பேட்டி!

அரசியலுக்கு குட் பை : ஜெ. தீபா அறிவிப்பு – வீடியோ பேட்டி!

பொது வாழ்க்கை என்றாலும் ஒரு பெண் என்றும் பாராமல் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடும் போக்கு ஏற்பட்டதால் அரசியலில் இருந்து விலகுவது முடிவான விஷயம்தான் என்று ஜெ.தீபா அறிவித்துள்ளார். இன்று முற்பகல் அரசியலிலிருந்து விலகுவதாகத் தெரிவித்த ஃபேஸ்புக் பதிவை நீக்கி குழப்பம் ஏற்படுத்திய நிலையில், தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ஜெ.தீபா அரசியலில் இருந்து விலகுவது உறுதிதான் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவரது அண்ணன் மகள் தீபா அரசியலில் குதித்தார். இதையொட்டி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற பெயரை பதிவு செய்து அப்பெயரில் அரசியல் பேசி வந்தார். ஆரம்பத்தில் அவருக்குக் ஓரளவு ஆதரவு இருந்தாலும் போகப் போக தொண்டர்கள் மதிப்பை இழந்தார்.

இந்த சூழலில் இன்று அரசியலிலிருந்து முழுமையாக விலகுவதாகத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில்  ”ஏன் காலையிலேயே தொந்தரவு செய்கிறீர்கள். பேரவையை அதிமுக உடன் இணைத்து விட்டேன், விருப்பம் இருந்தால் அந்த கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள். தீபா பேரவை பெயரைச் சொல்லி தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருவதை இதோடு நிறுத்த வேண்டுகிறேன். குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு வாழத்தான் எனக்கு ஆசை. எனக்கு அரசியல் எல்லாம் தெரியாது. என்னை விட்டு விடுங்கள். நான் சாதாரண குடும்ப வாழ்க்கைக்கு தான் ஆசைப்பட்டேன். எனக்கு பெரிய சாதனை படைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.

முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன். யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம், எனக்கு அரசியல் வேண்டாம். என்னை தொலைபேசியில் அழைக்க வேண்டாம். மீறி அழைத்தால் போலீசில் புகார் செய்வேன். எனக்கென்று குடும்பம் உள்ளது, அதுதான் எனக்கு முக்கியம்.

என் அம்மா இறந்த பிறகு என் அம்மாவின் இடத்துக்கே வந்து ஒரு தாய் போல் ஒரு குழந்தை போல் என்னை பாத்துக்கொண்டார் மாதவன். இப்படி இருந்த எங்களையும் ஒரு கை பார்த்துவிட்டு பிரித்து விட்டு வேடிக்கை பார்த்தது அரசியல் தான். அதன் சூழ்ச்சிகள் தான். என் கேரியர்போய்விட்டது. எனக்கு ஆதி முதல் இன்று வரை அரசியல் பிடிக்கவில்லை. தேவையும் இல்லை” என தெரிவித்து இருந்தார். பின்னர் கொஞ்ச நேரத்தில்;அந்த பதிவை நீக்கிவிட்டார். இதனால் அரசியலில் தொடர்வார் என்று சில பலர் கூறி வந்தனர்..

இதற்கிடையில் இன்று மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெ,தீபா, “என்னுடைய உடல் நிலை காரணமாக நான் அரசியலில் இருந்து விலகுகின்றேன். அரசியலுக்கு வந்ததே தவறு என்று பல முறை யோசித்துள்ளேன். என் வீட்டு முன்பு நின்று கொண்டு தொண்டர்கள் என்னை கட்டாயப் படுத்தி அழைத்ததாலேயே நான் அரசியலுக்கு வந்தேன். இனி அரசியலுக்கு வரமாட்டேன். பெண் கள் அரசியலில் இருக்க வேண்டும் என்றால் தரக்குறைவான விமர்சனங்கள் கூடாது .. ஆனால் அது எனக்கு தொடர்ந்து நடந்தது. என் . பேரவை நிர்வாகிகளுக்கு நான் கூறுவது இரண்டு அறிவுரைகள் தான். அரசியல் வேண்டும் என்று நினைக்கிறவர்கள் அவர்களுக்கு விருப்பமான கட்சியில் சேர்ந்து கொள்ளலாம். என்னுடைய விருப்பத்தை ஏற்றுக் கொள்வதென்றால் நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து கொள்ளலாம். இவை இரண்டையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளாததால் நாங்கள் ஒரு சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்” என்றார்.

தீபா பேரவை அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்துள்ளதா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், ”மார்ச் மாதமே இணைந்துவிட்டோம். அப்போதே தீபா பேரவை தனிப்பட்டுச் செயல்படாது என்று அறிவித்துவிட்டோம். அந்த சமயத்தில் தேர்தல் வந்ததால் இதில் சிலர் திட்டமிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தினர்” என்றார்.

இந்த அரசியல் பயணம் உங்களுக்கு நெருக்கடியாக இருந்ததா என்ற கேள்விக்கு, ” நெருக்கடி மட்டுமில்லை மிகவும் வேதனையாக இருந்தது. இது மோசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. எனக்குத் தனிப்பட்ட தாக்குதல்கள் ஏற்பட்டது. தனிப்பட்ட வாழ்க்கையையும் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. சில தவறான கருத்துகளால் இது நமக்குத் தேவையா என்ற சூழ்நிலையெல்லாம் சந்தித்துள்ளேன், ஆரமபத்திலேயே சொன்னது போல் தொடர்ந்து அரசியலில் பெண்கள் நீடிக்க வேண்டும் என்றால் தரக்குறைவான கருத்துகள் நிறுத்தப்பட வேண்டும். நான் அரசியலிலிருந்து விலகுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்றார்.

அதிலும் இந்த பேரவையை உருவாக்கிய பிறகு வேற வழியில் எடுத்து செல்லப்பட்டு ஏமாற்றுதல் வேலைகளும் நடந்துள்ளன. இது எனக்குத் தெரியவரவில்லை. என்னை அரசியலில் வழிநடத்தத் தகுந்த நபர் இல்லை. என் அத்தை ஜெ. இருக்கும் போதே அரசியலுக்கு வந்திருந்தால் அவர் எனக்கு சரியாக வழிக்காட்டியிருப்பார். இப்போது திமுகவை எடுத்து கொள்ளுங்கள்.. ஒரு குடும்பம் சரியாக கற்றுக் கொடுத்து தங்கள் பாதையில் போகிரது. என்றார்.

ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் ஜெ சொத்து குறித்த வழக்கு கருத்து தெரிவிக்க விரும்ப வில்லை தெரிவித்த தீபா, ”ஜெ. சொத்துகளுக்கு நாங்கள் ஆசைப்படவில்லை. வேண்டுமென்றால் ஏற்கனவே கேட்டுப் பெற்றிருப்பேன். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. இவர்கள் தான் வாரிசு, இவர்களுக்கு உரிமை உள்ளது என்று நீதிமன்ற வாயிலாக முடிவு வரவேண்டும் என்பது தான் எங்களது விருப்பம்” என்று விளக்கமளித்தார்.

அதிமுக அரசு ஜெயலலிதா வழியில் செயல்படுகிறதா என்ற கேள்விக்கு, ”அரசியலே வேண்டாம் என்று சொன்ன பிறகு ஒரு பொதுவாளராக பதில் சொல்கிறேன். ஜெயலலிதா போன்று யாரும் செயல்படமுடியாது” என்று தெரிவித்தார்.

error: Content is protected !!