October 25, 2021

ஜெயலலிதா-வுக்கு தீபா, தீபக் இருவரும் 2-ம் நிலை வாரிசுகள்- ஐகோர்ட் ஒப்புதல்!!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான ஜெ. தீபக் மற்றும் ஜெ. தீபா ஆகியோரை இரண்டாம் நிலை வாரிசுகளாக ஐகோர்ட் அறிவித்தது. அதை அடுத்து ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்ற கூடாது என்றும் வேதா நிலையத்தின் ஒரு பகுதியை மட்டும் முதல்வரின் அலுவலகமாக மாற்ற யோசிக்கலாம் எனவும் ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க, தனி அதிகாரி நியமிக்கக் கோரி, அதிமுகவின் புகழேந்தி மற்றும் ஜானகிராமன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதே போல், ஜெயலலிதாவின் வாரிசுகளாக தங்களை அறிவிக்கக் கோரி, தீபா மற்றும் தீபக் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் தலைமையில் நடைபெற்று, அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் மற்றும் மகனுமான தீபா மற்றும் தீபக் ஆகியோர், ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதாவின் சொத்துகளில் இருவருக்கும் உரிமை உள்ளது எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.மேலும், ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி அதிகாரி நியமிக்கக் கோரிய மனுவையும் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதேபோல், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை முழுவதுமாக நினைவு இல்லமாக மாற்றக் கூடாது என உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம், அதன் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றலாம் என குறிப்பிட்டுள்ளது. இதுமட்டுமின்றி போயஸ் கார்டன் இல்லத்தை, தமிழக முதலமைச்சர்களின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக செயல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக எட்டு வாரத்திற்குள் தமிழக அரசு உரிய பதில் அளிக்கவேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அந்த தீர்ப்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் சொத்து 100 கோடி ரூபாய் மதிப்பு உள்ளது என்று இங்கே கூறப்பட்டது. அதை அரசு நினைவிடமாக ஆக்க வேண்டும் என்றால் வாரிசுதாரர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அப்படி வழங்கும் நஷ்ட ஈடு பெரிய தொகையாக இருக்கும்.

உட்கட்டமைப்பு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது, ஏரிகளை தூர் வாருவது போன்ற பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு நிதி தேவைப்படுகின்ற நேரத்தில் ஒரு நினைவிடம் அமைப்பதற்காக தனி நபர் வாரிசுகளுக்கு அரசுப் பணத்தை பெரும் இழப்பீடாக கொடுத்து வீணாக்க கூடாது.ஆகவே போயஸ் கார்டனில் நினைவிடம் அமைப்பதற்கு விரும்பும் இடத்தை “முதலமைச்சர் வீடு மற்றும் அலுவலக அலுவலகமாக” பயன்படுத்த அரசு ஆலோசனை செய்யலாம்

தீபா மற்றும் தீபக் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள்.இருவரும் இந்த சொத்திற்கு letter of Administration பெற உரிமையுள்ளவர்கள். எனவே தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு ரவுண்ட் தி க்ளாக் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.அதற்கான செலவு தொகையை தங்களுக்கு கிடைக்கும் போயஸ் கார்டன் சொத்திலிருந்து விற்று வாரிசுகள் அரசுக்கு செலுத்தலாம்.” என்று போயஸ் கார்டன் இல்ல வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது