தக்கார் தகவிலார் அவரவர் எச்சத்தாற் காணப்படும்!.

சசிகலாவைத் தோழியாக ஏற்றவர், அவரது குடும்பத்தினரின் அதிகாரத்தை அனுமதித்தவர், அங்கீகரித்தவர் என்ற ஒற்றைப் பரிமாணத்தில் மாத்திரம் ஜெயலலிதாவை எடையிடுவது சரியா என்ற கேள்வி எனக்கு எப்போதும் உண்டு. கடைசியில் தங்கிய எண்ணைக் கடலைப் போல, கசப்பான இந்த அனுபவத்தில் அவரது வாழ்க்கை முற்றுப் பெற்றது என்பது ஒரு வகையில் கிரேக்கத் துன்பியல் நாடகங்களைப் போன்றது.

1991-96 காலகட்டத்தில் நடந்த ஜெயலலிதா அரசின் ஊழல்களை எனது கட்டுரைகள், தலையங்கங்கள், நான் பணியாற்றிய இதழில் வெளியிட்ட கார்ட்டூன்கள் வழியே கடுமையாக விமர்சித்திருக்கிறேன். அதன் காரணமாக வழக்குகளையும் சந்தித்திருக்கிறேன். அவரும் அவரது தோழியும் ஏராளமாக நகைகள் அணிந்திருக்கும் படத்தை முதன் முதலில் வெளியிட்டது நான் ஆசிரியப் பொறுப்பில் இருந்த இதழ்தான்.நரசிம்மராவ், வாஜ்பாயிலிருந்து கருணாநிதி உள்ளிட்டுப் பல தலைவர்களை நேரில் சந்தித்து அளவளாவும் சந்தர்ப்பங்கள் எனக்கு வாய்த்ததுண்டு. ஆனால் நான் நேரில் சந்தித்து உரையாடாத ஒரே தலைவர் ஜெயலலிதாதான். ஆனால் இத்தனைக்கும் பிறகும் அவரை ஒரு பிரமிக்க வைக்கிற ஆளுமையாகத்தான் பார்க்கிறேன்.

காரணம் எனக்கு அவர் ஒரு icon of women power. சூழல்கள் ஏற்படுத்தும் தடைகளையும் வாழ்க்கை போடும் முட்டுக்கட்டைகளையும் தன்னம்பிக்கையும் மன உறுதியும் கொண்டு பெண்கள் தகர்த்து எறிய முடியும் என்பதை கண்ணெதிரே நிகழ்த்திக் காட்டியவர். பெண்கள் வலிமை பெறுவதை (empowerment) விரும்பும் எவரும் அவரால் ஈர்க்கவே படுவார்கள் அவர் சினிமாவில் அடியெடுத்து வைத்த நாள்களிலும் சரி, அரசியல் நுழைந்த கால கட்டத்திலும் சரி அவை ஆணாதிக்கக் கோட்டைகளாக இருந்தன. ஊடகங்கள் உட்பட, சமூக நிறுவனங்களில் பெண்களுக்கு அங்கீகாரம் மட்டுமல்ல, மரியாதை கூடக் கிடைக்கவில்லை. அவர் மறையும் காலத்தில் நிலைமை தலை கீழாக மாறியிருந்தது. அதற்கு அவர் மாத்திரமே காரணம் அல்ல ஆனால் அதை விரைவு படுத்தியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு.

தமிழகச் சட்டமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் உறுப்பினராக இருந்தது அவர் காலத்தில்தான். அவர் மறைவுக்கு முன் செய்த சட்டத் திருத்தங்களில் ஒன்று உள்ளாட்சி அமைப்புக்களில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு. கல்வியில், குடும்பத்தில் பெண்ணின் கை ஓங்கச் செய்ததன் மூலம் பல மாற்றங்களுக்குக் களம் அமைத்தவர். இன்னும் சொல்லப் போனால் அவர் மீது வைக்கப்படும் பழிகள் ஒன்று அவர் அரசியலில் ஆண்களை அடிமைகளாக மாற்றினார் என்பது.

தான் சரியென்று நம்புவதற்காக உறுதியுடன் போராடும் பெண்கள், குடும்பத்திலும், அலுவலகத்திலும் எதிர் கொள்ளும் நெருக்கடிகளும், மன அழுத்தங்களும், அவமானங்களும் நம் சமூகத்தில் அதிகம். இவரும் அதை அரசியலிலும் ஆட்சியிலும் எதிர் கொண்டார். ஆனால் சற்றும் தளர்ந்து விடாமல் உரிய மன்றங்களில் போராடி வெற்றியும் கண்டார்.

தக்கார் தகவிலார் அவரவர் எச்சத்தாற் காணப்படும். அவர் இல்லாத இந்த ஓராண்டில் தமிழகம் சந்திக்கும் சூழல்களே அவர் எப்படி ஓர் இன்றியமையாத அரணாக இருந்தார் என்பதை நமக்குச் சொல்லும்

மாலன் நாராயணன்