September 26, 2021

நாயுடுவின் முயற்சி.. மோடியின் ஒத்துழைப்பு.. – மெட்ரோ ரயில் விழாவில் ஜெயலலிதா ஹேப்பி

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்க பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஜெயலலிதா. மெட்ரோ ரயிலுக்காக வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான வழிதடத்தில் 8 புதிய ரயில் நிலையங்கள்,பணிமனை ஆகியவை அமையவுள்ளன.இந்த திட்டத்துக்கான மொத்த மதிப்பீடு ரூ.3,770 கோடி ஆகும்.விழாவில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மெட்ரோ ரயில் சிறப்பு மலரையும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். சிறப்பு மலரின் முதல் பிரதியை தொழில்துறை அமைச்சர் சம்பத் பெற்றுக் கொண்டார்.

jaya jy 23 b

விழாவில் பேசிய மத்திய அமைச்சர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் விரிவாக்க பணி மேற்கொள்வதால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கத்திற்காக இதுவரை மத்திய அரசு 10 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய முதல்வர் ஜெயலலிதா, “சென்னை மெட்ரோ ரயில் முதல் வழித் தடத்தை, வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர்- விம்கோ நகர் வரை நீட்டிக்கும் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்ததில் பெருமகிழ்ச்சி. திருவொற்றியூர் – விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 3 ஆண்டுகளில் முடிக்கப்பட்டு அதன் மூலம் வடசென்னை மக்கள் பெரிதும் பயன் பெறுவர்.

இந்த வழித் தடத்தில், 8 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். இதில், சர் தியாகராயா கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, மற்றும் டோல்கேட் மெட்ரோ நிலையங்கள் எனது சட்டமன்றத் தொகுதியான ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் அமைக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த வழித் தடத் திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற்றுத் தருவதில் முக்கியப் பங்காற்றியவர் .வெங்கையா நாயுடு. எனவே தான், இந்த திட்ட துவக்க விழாவில் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்று நான் உறுதியாக இருந்தேன்.தமிழ்நாட்டின் உற்ற நண்பர் வெங்கையா நாயுடு ஆவார். தமிழக நலன்களை காப்பதிலும் தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதியை விரைந்து பெற்றுத் தருவதிலும் முன் நிற்பவர் வெங்கையா நாயுடு அஎன்று சொன்னால் அது மிகையல்ல.வெங்கையா நாயுடுவின் முயற்சியும் பிரதமர் நரேந்திர மோடியின் ஒத்துழைப்புமே இன்று இந்தத் திட்டம் துவக்கப்பட காரணம்” என்று குறிப்பிட்டார்