ஜெயலலிதா + அப்போலோ + சிகிச்சை + மரணம் குறித்த அரசு விளக்க அறிக்கை

ஜெயலலிதா  + அப்போலோ +  சிகிச்சை + மரணம்  குறித்த அரசு விளக்க அறிக்கை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. ஜெயலலிதா தாக்கப்பட்டதாகவும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது அவரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை என்றும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இதை தமிழக அரசு மறுத்தது.இந்த பிரச்சினை தொடர்பாக முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் நாளை (புதன்கிழமை) உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து உள்ளார். இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி டாக்டர்களின் அறிக்கையை வெளியிட்டு தமிழக அரசு நேற்று விளக்கம் அளித்து உள்ளது.

jaya mar 7 a

இது தொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்காக எழுந்த காரணங்கள், அவருக்கு அளித்த மருத்துவ சிகிச்சைகள், தூரதிருஷ்டமான அவரது மரணம் ஏற்பட்ட சூழ்நிலைகள் ஆகியவை குறித்து பத்திரிகைகளும், அரசியல் தலைவர்களும் பல்வேறு ஊகமான தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு ஏற்கனவே தன்னிடம் வைத்துள்ள பதிவுகளோடு, அப்பல்லோ ஆஸ்பத்திரியிடம் உள்ள மருத்துவ சிகிச்சை ஆவணங்கள், எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவின் மருத்துவ அறிக்கை ஆகியவற்றை அரசு பெற்று உள்ளது. அவை விளக்கமாக ஆராயப்பட்டது. அந்த அறிக்கைகளும், ஐகோர்ட்டில் முன்பு தாக்கல் செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று இசைந்துள்ளன.

கடந்த 2016–ம் ஆண்டு செப்டம்பர் 22–ந் தேதியன்று இரவு 10 மணிக்கு ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு போன் அழைப்பு ஒன்று வந்தது. அங்கு ஆம்புலன்ஸ் போய் சேர்ந்தபோது, ஜெயலலிதா மூச்சற்ற நிலையில், ஆக்சிஜனின் செறிவூட்டல் மிகக் குறைந்திருந்ததால், அசதியுடன் காணப்பட்டார்.உடனே அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு, நோய்த் தொற்று மற்றும் மூச்சு விடுவதில் பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டன. அவருக்கு ஏற்கனவே சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமாவினால் வரும் மூச்சுக்குழாய் அழற்சி, ஹைப்போதைராய்டிசம் ஆகியவை இருந்தன.

ஆனால் அப்பல்லோ ஆஸ்பத்திரியின் மருத்துவ அறிக்கையிலும், எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கையிலும், ஜெயலலிதா தாக்கப்பட்டதற்கான ஆதாரமோ அல்லது சில அரசியல் தலைவர்கள் கூறுவது போன்ற பிற சம்பவம் நடந்ததற்கான ஆதாரமோ இருப்பதாக குறிப்பிடப்படவில்லை.

ஆஸ்பத்திரிக்கு அவர் வந்ததில் இருந்து, அப்பல்லோவின் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள், இதயநோய் சிகிச்சைப் பிரிவு மூத்த டாக்டர்கள், சுவாச நோய் பிரிவு மூத்த மருத்துவர்கள், தொற்று நோய் சிகிச்சை நிபுணர்கள், சர்க்கரை நோய் மருத்துவர்கள் ஆகியோரைக் கொண்ட குழுவினர் தொடர் சிகிச்சை அளித்தனர்.அவருக்கு தேவையான உணவுகளை அங்குள்ள மருத்துவ ஆலோசகர்கள் கவனித்துக் கொண்டனர். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் உள்ள பிசியோதெரபி நிபுணர்களுடன், சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியைச் சேர்ந்த சிறப்பு பிசியோதெரபி குழுவினர் இணைந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கினர்.

லண்டன் தாமஸ் ஆஸ்பத்திரியின் சர்வதேச புகழ் பெற்ற டாக்டர் ரிச்சர்டு பீலேயின் மருத்துவ ஆலோசனைகளும் அப்பல்லோ ஆஸ்பத்திரியால் பெறப்பட்டன. அதுமட்டுமல்லாமல், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவுக்கு தேவையான உதவிகளை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து வழங்குவதற்காக தமிழக அரசின் 5 சிறப்பு டாக்டர்களை கொண்ட குழுவை அமைத்து 30.9.2016 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில், எய்ம்ஸ் மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தின் நுரையீரல் மருத்துவ துறையின் பேராசிரியர் டாக்டர் கில்நானி தலைமையில் நிபுணர் குழு, அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக இந்த குழு அனுப்பப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 5 முதல் 7–ந் தேதி வரையிலும், 9 மற்றும் 10–ந் தேதிகளிலும், 13 முதல் 15–ந் தேதி வரையிலும், டிசம்பர் 2 மற்றும் 3–ந் தேதிகளிலும், டிசம்பர் 5–ந் தேதியிலும் டாக்டர் கில்நானி தலைமையில் நிபுணர் குழு, அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தது.

இந்தநிலையில் ஆஸ்பத்திரிக்கு வருவதற்கு முன்பதாகவே சில நாட்களாக ஜெயலலிதாவுக்கு தவறான மருந்துகள் கொடுக்கப்பட்டதே, இந்த பிரச்சினைகளுக்கு காரணமாய் இருந்ததாக சில அவதூறு பேச்சுகள் எழுந்தன. தோல் அழர்ச்சிக்கான கார்டிகோஸ்டீராய்டுகள் தவிர, சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை சமாளிப்பதற்காக சில மருந்துகளை வாய்வழியாக ஜெயலலிதா எடுத்துக் கொண்டதாக மருத்துவ அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அப்பல்லோ ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சைப் பிரிவில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள், ஜெயலலிதாவுக்கு நல்ல பலனைத் தந்தன. காவிரி பிரச்சினை உள்பட சில முக்கிய பிரச்சினைகளுக்காக அரசு அதிகாரிகளை அழைத்துப் பேசியதோடு, குடும்ப உறுப்பினர்களுடனும் ஜெயலலிதா ஆலோசித்தார். வாய் வழியாக சாப்பிடும் அளவுக்கு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. இதன் அடிப்படையில் நவீன தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனிப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கும் மருத்துவ நிபுணர் குழுவினர் தொடர்ச்சியாக அளித்த சிகிச்சையால் அவர் உடல் நலனில் தேர்ச்சி அடைந்து வந்தார்.

இந்த உடல்நலன் முன்னேற்றம் குறித்த தகவல்கள், எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சையின் தரம் பற்றி ஒரு பிரிவில் இருந்து சந்தேகம் எழுப்பப்பட்டது. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, எய்ம்ஸ் மருத்துவ குழு அளித்த அறிக்கை இசைவாகவே உள்ளது. அக்டோபர் 5 முதல் 7–ந் தேதிவரை அப்பல்லோவுக்கு வந்து பார்வையிட்ட எய்ம்ஸ் குழு, ‘உன்னிப்பான மருத்துவ சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்று தனது அறிக்கையில் கூறி உள்ளது.

அதன் பிறகு, 3.12.2016 அன்று வந்தபோது, அப்பல்லோ மருத்துவ குழுவினரால் அளிக்கப்பட்டு வந்த சிகிச்சைகளை பாராட்டி எய்ம்ஸ் டாக்டர் குழுவினர் அறிக்கை சமர்ப்பித்தனர். இதன் மூலம் இருப்பதிலேயே மிகச் சிறந்த சிகிச்சை ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது என்பது புலப்படும்.

இந்த நிலையில் டிசம்பர் 4–ந் தேதியன்று ஜெயலலிதாவுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. அவரது அறையில் மருத்துவ குழு இருக்கும்போதே அவருக்கு மாரடைப்பு வந்தது. அவருக்கு மூச்சடைப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, சிறிது நேரத்தில் எக்மோ எந்திரத்தின் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.மருத்துவ சிகிச்சை முறையின் வரிசை என்னவோ, அதன்படி மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்ற அனைத்து மருத்துவ முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

அப்பல்லோ ஆஸ்பத்திரியின் நிபுணர் குழு, எய்ம்ஸ் டாக்டர்கள் குழு வந்து, அங்கிருந்த சூழ்நிலைகளையெல்லாம் ஆய்வு செய்தனர். பின்னர் அவரது இருதயம் இயங்கவில்லை என்பது மருத்துவ ரீதியாக முடிவு செய்யப்பட்டது. எனவே நரம்பு தொடர்பான இயக்கங்களில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என்பதும் அறியப்பட்டு, வாழ்வாதாரமாக தரப்படும் சிகிச்சையும் வீணானது என்று முடிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து பின்பற்ற வேண்டிய முறைகளின்படி, மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், டாக்டர் விஜயபாஸ்கர், பாராளுமன்ற துணைத் தலைவர் தம்பிதுரை, சசிகலா மற்றும் தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர் ஆகிய அரசு அதிகாரிகளுக்கு தகவல் கூறப்பட்டது.அனைவரும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, மருத்துவ முறை எதுவோ அதை பின்பற்றும்படி தெரிவித்தனர். 5.12.2016 அன்று நள்ளிரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா காலமானார். மருத்துவ தொழில் தர்மப்படியும், மருத்துவ விதிகளின்படியும் நோயாளி ஒருவரின் சிகிச்சை தொடர்பான விவரங்களை வெளியிடக்கூடாது. ஆனால் தற்போது பேசப்படும் புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இதைக் கூறுவது அவசியமாகிவிட்டது. அதன்படி, அப்பல்லோ ஆஸ்பத்திரி மற்றும் எய்ம்ஸ் டாக்டர் குழுவின் மருத்துவ அறிக்கைகளை வெளியிடுகிறேன்| என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

error: Content is protected !!