October 8, 2022

‘‘நோன்பு நோற்பவர்களுக்கு நானே நேரடியாக கூலியைக் கொடுப்பேன்’’- ஜெ. பேச்சு

அ.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது. இப்தார் விருந்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தனது சொந்த செலவில் செய்து இருந்தார். இந்நிகழ்ச்சிக்கு தலைமை காஜி சலாவுதீன் முகமதி அயூப் முன்னிலை வகித்தார். அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அன்வர்ராஜா எம்.பி. வரவேற்றார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் சிறப்புரை ஆற்றினார்.

jaya july 3

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்–அமைச்சருமான ஜெயலலிதா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசிய போது, “இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ் ஆகியவை இஸ்லாத்தின் 5 முக்கியக் கடமைகள் ஆகும். இவற்றில், இறை நம்பிக்கை, தொழுகை, தர்மம், ஹஜ் போன்றவை வெளிப்படையாகத் தெரியக் கூடியவை. ஆனால், ஒருவர் நோன்பாளியா இல்லையா என்பதை மற்றவரால் வெளிப்படையாக அடையாளம் காண முடியாது. யார் நோன்பாளி என்பதை எல்லாம் வல்ல இறைவன் நன்கு அறிவார். ‘‘நோன்பு நோற்பவர்களுக்கு நானே நேரடியாக கூலியைக் கொடுப்பேன்’’, என்று எல்லாம் வல்ல இறைவன் உறுதி அளிக்கிறார். இறைவனே நேரடியாக பலன் தரும் இந்த நோன்புக் கடமை மிக வலிமையும், புனிதமும் கொண்டது.

‘‘இறை நம்பிக்கை கொண்டோர்களே, உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது, நோன்பு கடமை ஆக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமை ஆக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்’’, என திருமறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதன் மூலம் அகமும், புறமும் தூய்மை அடைகிறது. தூய்மை அடைவதன் மூலம் இறைப் பற்றும், அன்பும் மேலோங்குகிறது. தர்ம சிந்தனை தழைத்தோங்குகிறது. இதன் மூலம் இறைவன் அருளை நாம் பெற முடிகிறது.

ஒரு சமயம் நபிகள் நாயகத்தின் போதனைகளைப் பிடிக்காத அவரது எதிரிகள் அவரைக் கொன்றுவிட திட்டமிட்டனர். ஒரு நாள் இரவில் கொலை முயற்சி நடந்த போது, நபிகள் நாயகம் அங்கிருந்து தப்பி தம் நண்பர் இல்லத்திற்கு சென்றார். அங்கிருந்து அவரை அழைத்துக் கொண்டு தவுர் என்ற மலைக் குகைக்கு சென்றார். ஆனால் எதிரிகள், அந்த இடத்தையும் மோப்பம் பிடித்து வந்து விட்டனர். நபிகள் நாயகத்தை தேடிப் பிடிக்க எதிரிகள் முடிவெடுத்தனர்.அப்போது அவருடைய நண்பர், ‘‘நாம் இங்கிருப்பதை எதிரிகள் எப்படியோ கண்டுபிடித்து விட்டனர். அவர்களிடம் சிக்கி நாம் இறப்பது உறுதி’’, என்று நபிகள் நாயகத்திடம் கூறினார்.

நபிகள் நாயகம் தன் நண்பரைப் பார்த்து, ‘‘தோழரே, பயப்பட வேண்டாம். நாம் இருவராக இருந்தால் தானே அவர்களால் நம்மைக் கொல்ல முடியும். இங்கே நம்மைத் தவிர 3–வதாகவும் ஒருவர் இருக்கிறார்’’, என்றார். நண்பர், நபிகள் நாயகத்தை ஆச்சரியத்துடன் நோக்கினார். நண்பரின் எண்ணத்தை புரிந்து கொண்ட நபிகள் நாயகம், ‘‘எல்லாம் வல்ல இறைவன் நம்மோடு இருக்கிறார். எனவே அச்சம் என்ற சொல்லுக்கே அவசியமில்லை’’ என்றார்.

அப்போது எதிரிகள் குகைக்கு அருகில் வந்தனர். ஆனால் நபிகள் நாயகம், குகைக்கு உள்ளே சென்ற பிறகு, எதிரிகள் உள்ளே நுழைவதற்குள், நுழைவு வாயிலில் ஒரு சிலந்தி வலை பின்னிவிட்டது. குகை நுழைவாயில் அருகே இரண்டு புறாக்கள் படுத்திருந்தன.

அப்போது ஒரு எதிரி தன் நண்பர்களிடம், ‘‘இங்கே சிலந்தி வலை பின்னியிருக்கிறது. புறாக்கள் படுத்திருக்கின்றன. நாம் தேடி வந்தவர்கள் உள்ளே புகுந்திருந்தால் குகைக்குள் நுழையும் போது சிலந்தி வலை அறுபட்டு இருக்க வேண்டும். புறாக்கள் அங்கே இருக்க முடியாது. எனவே, அவர்கள் குகைக்குள் இருக்க வாய்ப்பே இல்லை’’, என்றான். இதை ஏற்ற மற்றவர்கள் திரும்பிச் சென்றனர்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இறைவனை எப்போதும் உள்ளத்தில் கொண்டுள்ளவர்கள் இறைவனால் காக்கப்படுவர் என்பது தான். இறைப் பற்று உள்ளவர்களை எந்த துன்பமும் அணுக இயலாது.இப்தார் நோன்பு திறப்பு கொடையையும், அன்பையும் பறை சாற்றுகிறது. எங்கு அன்பு இருக்கிறதோ, அங்கு மனித நேயம் இருக்கும். எங்கு மனித நேயம் இருக்கிறதோ, அங்கு ஒற்றுமை நிலவும். அறம் தழைக்கும். ஏழ்மை விலகும். நன்மை பெருகும்.

இறை நம்பிக்கையுடைய, இஸ்லாமியப் பெருமக்களாகிய நீங்கள், இஸ்லாமிய நெறிமுறைகளைக் கடைபிடித்து இறைவனின் விருப்பத்திற்கேற்ப மனித நேயத்திற்கும், அன்பிற்கும், எடுத்துக்காட்டாக நிச்சயம் விளங்குவீர்கள். எனது அழைப்பினை ஏற்று இந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை மீண்டும் உரித்தாக்கிக்கொள்வதோடு, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”என்றார்.