October 27, 2021

ஜெயலலிதா சிரித்துக் கொண்டிருக்கிற ஸ்டிக்கர்!

சற்று முன்…தமிழகத்தின் சீனியர் முன்னாள் அமைச்சர் ஒருவரை சந்தித்தேன். மனத்துக்குத் தோன்றியதை பட்டென்று முகத்துக்கு நேரே கூறிவிடுகிற டைப்! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிறைந்த அன்பையும், ஆசீர்வாதத்தையும் பெற்றவர். சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தோம்.

” மனுஷன் எதை சம்பாதிக்கிறானோ இல்லையோ, நம்மள சுத்தி நடக்குறதை கூர்ந்து புரிஞ்சுக்கணும். சப்ஜெக்ட்டுக்கான உண்மையான தேடல் கிடைக்கிற வரைக்கும் அது பத்தி கருத்தோ, அபிப்பிராயமோ சொல்லவே கூடாது. அமைதியாத்தான் இருக்கனும். அப்போதான், நம்மளால ஏதேனும் ஒரு வகையில, முகந்தெரியாத யாரும் பாதிக்கப்பட மாட்டாங்க.” என்றார்.

” பாரதீய ஜனதாவின் அசைவுக்கெல்லாம் ஆடுற கவர்மெண்டுல இப்போ தமிழகத்துல இருக்கு?” -என்றேன்.

” தமிழன் கெட்டிக்காரன் சார்!” என்றார்.

புரியாமல் அவரைப் பார்த்தேன்.

” ஒண்ணு பணிய வச்சி நிர்வாகம் பண்ணுவான். இல்ல பணிஞ்சி நிர்வாகம் பண்ணிட்டு போயிட்டே இருப்பான். அவனை ஏமாத்த நினைக்கிறவங்கதான் ஏமாந்து போவாங்க!” -என்றார்.

“அப்போ தமிழகத்துல பாரதீய ஜனதா ரோல்தான் என்ன?” -என்றேன்.

” பலவீனத்தை பலமா கையாண்டு நிர்வாகம் பண்ண நினைக்கிறாங்க. இதுதான் பாரதீய ஜனதாவின் பலவீனம்!” -என்றார்.

“புரியும்படி சொல்லுங்கள்” என்றேன்.

தமிழகத்துல பாரதீய ஜனதா இனி சுயமாக வளர முடியாது. காங்கிரஸ் இதுவரை தி.மு.க. தோள்ல உக்காந்து சவாரி செஞ்சி, பாராளுமன்றத்தில் தமிழக எம்.பிக்கள் ஆதரவைத் தேடிக்கிட்டாங்க. அது மாதிரி பாரதீய ஜனதாவும் பாஸ்ட்புட் கூட்டணிக்கு துடிச்சிட்டிருக்கு. தமிழகத்துல வட இந்திய நிறுவனங்கள் மூலம், பணத்தை நிறைய இறக்குமதி செஞ்சி வச்சிருக்காங்க. மாணிக் சர்க்கார் ஆட்சியை ஒழிக்க அங்க ஓட்டுக்கு 2,000 தந்திருக்காங்க. இங்கேயும் தர திட்டம் போட்டிருக்காங்க. இது நடக்கும்கிறீங்க?”

“நடக்காதா பின்னே?” -என்றேன்.

“அவங்க சமூக வலைத்தளங்களையே நம்பி இருக்காங்க. தினமும் ஜனங்களை திசை திருப்ப ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணி வச்சிருக்காங்க. ஜெயலலிதாம்மா சாவுக்கு முன்னாடியிலேர்ந்து பாரதீய ஜனதாவின் ட்வீட்டர், பேஸ்புக், வாட்சப் டீம் இயங்கிக்கிட்டிருக்கு. தமிழகத்துல போலியான மோடி வெறியர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள், ரவுடிகள், பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் பாரதீய ஜனதாவில் பாதுகாப்புக்காக தஞ்சம் புகுந்திருக்காங்க. தமிழிசை சௌந்தர ராஜன் துவக்கத்துல மிஸ்டு கால் உறுப்பினர் சேர்க்கையின்போது, தேசப்பற்றுள்ள இளைஞர்கள், மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்ந்தாங்க. இப்போ அவங்க என்ன ஆனாங்கண்ணே தெரியல. உண்மையான சீனியர் ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி, விஸ்வஹிந்து பரிஷத் விரக்தியில் இருக்காங்க. காரணம், பாரதீய ஜனதா ஒரு இந்துக்கட்சி -ங்கிற மாதிரி அந்தக் கட்சியின் ரிமோட் கண்ட்ரோல் தலைவருங்க போகஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க. கவர்னர், அண்ணா பல்கலைக் கழக வேந்தர்னு தமிழக சூழலுக்கு பொருத்தமில்லாதா நியமனங்கள் எதிர்கட்சிகளை ஒன்று சேர்த்திருக்கு. சாதி, மதம், வன்முறை, படுகொலை, கற்பழிப்பு, காவிரி-ன்னு மாறிமாறி ஸ்டீயரிங்கை திருப்பிகிட்டே போறாங்க. தமிழ்நாட்டு ஜனங்களை அச்சுறுத்தி பவருக்கு வர நினைக்கிறாங்க. நம்ம ஜனங்க மதங்களைக் கடந்து சென்டிமெண்ட்ல மடங்குறவுங்க. இதை புரிஞ்சிக்காம பொலிட்டிகள் ட்ரைவ் பண்ற பாரதீய ஜனதாகாரவுங்க எங்காவது முட்டு சந்துலத்தான் போயி நிக்க போறாங்க. ”

“எப்படி உறுதியா சொல்றீங்க?”

“ரெட்டை இலை சின்னம் உண்மையான அம்மா விசுவாசிகள் கிட்ட வரப்போகுது!”

“எதை வச்சி சொல்றீங்க?”

“இதை நான் இப்போ சொல்ல மாட்டேன். கர்நாடகா தேர்தல் ரிசல்ட் சொல்லும்” -என்றவர், விடைபெற்றுக் கொண்டார்.

அவரது கார் கிளம்பியபோது எதார்த்தமாக பார்த்தேன். காரின் பின்புற கண்ணாடியில் ஜெயலலிதா சிரித்துக் கொண்டிருக்கிற ஸ்டிக்கர் மினுமினுத்தது.

தம்பி மாரிமுத்து