முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு கருணாநிதி இரங்கல்!

திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட இரங்கல் செய்தில், “ஜெயலலிதா அவர்களை இழந்து வாடும் அவருடைய கட்சியின் முன்னணியினருக்கும், இலட்சக்கணக்கான தோழர் களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.திரைப்பட உலகில் கதாநாயகியாக இடம் பெற்று, 120க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து, புகழ் எய்தி, அதன் பின்னர் எனது அருமை நண்பர், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர். –

jaya karuna dec 6

1984 முதல் 1989 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், அ.தி.மு.க. வின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் செயல்பட்டு – எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவுக்குப் பிறகு – அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக விளங்கி வருவதோடு, தமிழகத்தின் முதல் அமைச்சராகவும் செயல்பட்டு வந்த ஜெயலலிதா திடீரென்று கடந்த செப்டம்பர் மாதத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று, ஒருசில நாட்களில் இல்லம் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் – உலகப் புகழ் பெற்ற மருத்துவர்கள் எல்லாம் தங்கள் திறமைகளைக் காட்டி சிகிச்சை அளித்த போதிலும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், அ.தி.மு.க. வின் இலட்சக் கணக்கான தொண்டர்களும், தாய்மார்களும் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டுமென்று வாழ்த்தியதற்கு மாறாக – இன்றைய தினம் மறைந்து விட்டார் என்ற செய்தியினை அறிந்து பெரிதும் வருந்துகிறேன்.

​​கட்சிகளைப் பொறுத்து எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இரண்டு கட்சிகளுக்கும் இடையே இருந்த போதிலும், முதலமைச்சர் ஜெயலலிதா அவரது கட்சியின் நலன்களுக்காக துணிச்சலோடு காரியங்களை ஆற்றியவர் என்பதில் யாருக்கும் வேற்றுக் கருத்து இருக்க முடியாது. குறைந்த வயதிலேயே அவர் மறைந்து விட்டார் எனினும் அவருடைய புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவரை இழந்து வாடும் அவருடைய கட்சியின் முன்னணியினருக்கும், இலட்சக்கணக்கான தோழர் களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்