October 5, 2022

ஹைஹீல்ஸ் அணிந்துதான் பெண்கள் வேலைக்கு வர வேண்டுமா? எகிறும் எதிர்ப்பு!

பெண்களும் ஹை ஹீல்ஸும் கொஞ்சம் குழப்பமான கூட்டணி தான். செக்ஸியான பெண்களின் அத்தியாவசிய பொருளாக இது இருந்தாலும், 50 சதவீத ஹைஹீல்ஸ்காரர்களுக்கு பாத வலி, சுளுக்கு, இறுக்கம் போன்றவை ஏற்படுவதாக புகர் வந்துள்ள நிலையில் ஹைஹீல்ஸ் அணிந்து தான் பெண்கள் வேலைக்கு வர வேண்டும் என சில ஜப்பான் நிறுவனங்கள் விதித்துள்ள நிபந்த னைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு சமூக வலைதள நிறுவனம், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடும் நிபந்தனைகளை எதிர்த்து பெண்களைத் திரட்டியது. இதில் 15 ஆயிரத்திற்கும் மேலான கையெழுத்துகளுடன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெண்கள் பெரும்பாலும் உடுத்தும் உடை முதல்- அணியும் அணிகலன் வரை அனைத்தும் மற்றவர்களை கவரவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில் பெண்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருப்பவை, குதிகால் செருப்புகள். அவை பெண்களின் நடைக்கும், உடைக்கும் பொருத்தமான தேர்வாக அமைகிறது. அவைகளை அணிவதை அலங்காரத்துடன் கூடிய அந்தஸ்து சார்ந்த விஷயமாக பெண்கள் நினைக்கிறார்கள். அதனால் உடலுக்கு ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இதனிடையே

யூமி இஷிகாவா, இவர் ஒரு விளம்பர மாடல். கடந்த ஜனவரியில், ஒவ்வொரு நாளும் ஹீல்ஸ் அணிவதால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதைத் தெரிவித்து முதலில் ட்வீட் வாயிலாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதற்கு ஒரு லட்சம் லைக்குகள் அல்லது ரீட்வீட்கள் பகிரப்பட்டதாக ஈஎஃப்ஈ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எப்போதாவது சில நாளில் ஹீல்ஸ் அணிவதையே நான் வெறுக்கிறேன். அப்படியிருக்க நான் வேலைக்குச் செல்லும் நாட்களில் எல்லாம் இதை அணிந்துகொண்டு நான் காயப்பட வேண்டுமா? காயத்தோடு நான் ஏன் வேலை செய்யவேண்டும்?” இவ்வாறு அவர் தனது ட்வீட்டில் கேட்டுள்ளார்.

பின்னர் இவரே  #KuToo என்ற பெயரில் ஹேஷ்டேக் உருவாக்கினார். இதற்கு — குத்ஸ்சுவின் கலவை ‘kutsu’ (ஜப்பானிய ஷூ வகை), குத்சூ ‘Kutsuu’ (வலி) ஆகிய பொருட்களின் சுருக்கமாக இந்த ஹேஷ்டேக் அமைந்தது. மேலும்  #MeToo இயக்கத்தின் மறுஉருவாக்கமாகவும் இது அமைந்தது.

இதற்கு ஏராளமான பெண்கள் பதிலளித்தனர். இதே புகார் குறித்து தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். அதுமட்டுமின்றி, அவர்களில் சிலர் தங்கள் கால்களில் தினமும் அணிந்துகொள்வதால் ஏற்படும் புண்களின் படங்களைக்கூட அதில் இணைத்திருந்தனர்.

பின்னர் இஷிகாவா Change.org இணையதளத்தைத் தொடங்கினார். அதில் பெண்கள் ஹைஹீல்ஸ் அணிந்து வர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கும் நிறுவனங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் தொடங்கினார்

.

”பணியாளர்களிடத்தில் மலிவான விதிகளை நிறுவுவதில் பால் வேறுபாட்டை இந்நிறுவனங்கள் திணிக்கின்றன. இதனால்  சுகாதார மற்றும் உற்பத்தித்திறன் மீது தீங்கு விளைவிக்கும் பாதிப்பு ஏற்படும்” என்ற கருத்துகளை முன்வைத்து ஒரு வாரத்திற்கு முன்புதான் இப்பிரச்சாரம் தொடங்கப்பட்டது.

பிரச்சாரம் தொடங்கிய ஒரு வாரத்தில் சேஞ்ச். ஆர்க் இணையதளத்திற்கு தற்போது ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர். பத்தாயிரம் பெண்கள் நேரடியாகத் தொடர்பில் வந்து அவர்கள் திரட்டிய 15 ஆயிரம் கையெழுத்துகளையும் சேஞ்ச் ஆர்க் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளனர். விரைவில் இது 25 ஆயிரம் கையெழுத்து என்ற இலக்கை நோக்கிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் ஜப்பானில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றுபவர்கள் என்ன உடை அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஆண்கள் சூட் அணிந்து கருப்பு வண்ண ஷூக்களை அணிந்து வர வேண்டும். பெண்கள் ஸ்கர்ட்ஸ் எனப்படும் குட்டைப் பாவாடை அணிந்து ஹைஹீல்ஸ் அணிந்து வர வேண்டும்.

எனினும் பெரும் எண்ணிக்கையில் நிறுவனங்கள் அதிகரித்து வரும் நிலையில் சிற்சில நிறுவனங்கள் தற்போது நிபந்தனைகளைத் தளர்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்க்து