அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஜாதிப் பிரச்னை? ஐகோர்ட் வேதனை!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஜாதிப் பிரச்னை? ஐகோர்ட் வேதனை!

உலகப் புகழ் பெற்ற (அவனியாபுரம்) ஜல்லிக்கட்டில் ஜாதி மதத்தைத் திணித்து, சுய கவுரவம் அடைய நினைப்பது வேதனையாக உள்ளதாக ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி கவலை தெரிவித்துள்ளார்.

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி வரும் 15ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழுவின் தலைவராக இருந்து வருபவர் ஜல்லிக்கட்டு தொடர்பான கணக்குகளை முறையாக சமர்பிப்பதில்லை. யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னுடைய குடும்ப விழா போல தன்னிச்சை முடிவுகளை எடுத்து வருகிறார். இந்த நிலை தொடர்ந்தால் ஜல்லிக்கட்டை அனைவரும் சேர்ந்து நடத்தும் ஒற்றுமையும், ஆர்வமும் பங்கெடுப்பும் குறையும். எனவே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் சார்பாக அனைத்து சமூக பிரதிநிதிகளின் பங்களிப்புடன் கூடிய கமிட்டியை அமைத்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

அந்த வழக்கு இன்று நீதிபதி பாவனி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “ஜாதி மதங்களை கடந்து பொதுமக்கள் குடும்பத்துடன் போராடி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றனர். அவ்வாறு போராடி பெற்ற ஜல்லிக்கட்டுக்குள் தற்போது சாதி, மதத்தை திணித்து சுய கவுரம் அடைவது வேதனையாக இருக்கிறது. இதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. விழாவை அனைவரும் ஒன்றுக்கூடி கொண்டாடினால் தான் திருவிழாவாக அமையும். எனவே அவனியாபுர ஜல்லிக்கட்டை அனைத்து சமுதாய மக்களும் ஒன்றுக்கூடி கொண்டாட முயற்சி செய்ய வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும் வழக்கின் விசாரணையை ஜனவரி 9க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அவனியாபுரத்தில் ஜனவரி 15 ஆம் தேதியும், பாலமேட்டில், ஜனவரி 16 ஆம் தேதியும், அலங்காநல்லூரில் ஜனவரி 17 ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று ஏற்கெவே அரசு அறிவித்துள்ளது.

error: Content is protected !!