September 25, 2021

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் இப்போதைக்கு கலைவதுதான் சரி!

தமிழக இளைஞர்களின் போராட்டம் தொடரும் என தொலைக்காட்சியில் பலரும் சொல்லிக் கொண்டிருக்க, முகநூலில் பலரும் இதற்கு ஒத்த கருத்து சொல்லிக் கொண்டிருக்க… குறைந்தபட்சமாக, இடைவேளையாவது தர வேண்டிய நேரம் இது என்பது எனது கருத்து. முகநூலில் நண்பர் செந்தில்நாதன் “போராட்டங்களைத் தொடங்கியவர்கள் முடிப்பார்கள்” என்று வைத்த கருத்துக்கு பதிலாக நான் முன்வைத்த பதிலை இங்கே அனைவருக்கும் படைக்கிறேன்.”தொடங்கியவர்கள் முடிக்க வழி காண்பார்கள்” என்கிறீர்கள். நல்லது. ஆனால், இந்த போராட்டத்தைத் தொடங்கியது… தலைமை ஏற்றது… என பலவும் collective Leadership என தோழர்கள் சொல்லிக் கொள்வது போல கூட இல்லை என்றுதான் புரிந்துகொள்ள முடிகிறது. என்னைப் பொறுத்தவரை, மெரினாவில் கூடுவோம் என யோசனை தோன்றி, அதற்கு நண்பர்களைத் திரட்டிய இளைஞர் யாராக இருந்தாலும் அவருக்கு வீரு வணக்கம். வாழ்த்துகள்.

edit jan 22

ஆனால், இப்போது நிரந்தர தீர்வு வந்தால்தான் என இவர்கள் கலைய மறுக்கும் வேளையிலேயே கோவையில் ரேக்ளா ரேஸைத் தொடங்கிவிட்டார்கள். அலங்காநல்லூரில் இல்லாவிட்டாலும் வேறு எங்கும், அரசு மற்றும் அதிமுக அடிமைகளைக் கொண்டு வாடிவாசலைத் திறந்து, சில எருதுகளை ஓடவிட்டு ஐல்லிக்கட்டு நடந்ததாகவும் காட்டிக் கொள்வார்கள். அதனால், மெல்ல… ஆனால், தொடர்ந்து சிறிது சிறிதாக மக்கள் கவனத்தை திசைத் திருப்பி, இவ்வளவு போராட்டங்களின் நிஜ பொருளையும் அர்த்தமற்றதாக்கி, இன்றுகண்டுள்ள மாற்றத்திற்கும், வெற்றிக்கும் உரிமையுள்ள இந்த இளைஞர் கூட்டத்திடமிருந்து பறித்துச் சென்றுவிட முயல்வார்கள். அது நடந்துவிடக் கூடாது என்பதுதான் எனது எதிர்பார்ப்பு, அச்சம் எல்லாம். இந்த விஷயத்தில் நிரந்தர தீர்வு என சொல்லப்படுவதை சாதிக்க, பாராளுமன்றம் கூட வேண்டும். அது உடனடியாக சாத்தியமா… மக்களின் தேவைக்காக, அதை செய்ய முடியாதா என்ற எதிர்கேள்வி கேட்பது ரொம்ப எளிது. ஆனால், நடைமுறையில் அதே அளவு எளிதானதல்ல.
அதிகபட்சம், நாம் சட்டமன்றத்தைக் கூட்டச் சொல்லி போராடலாம். இது ஒருபுறமிருக்கட்டும். மறுபுறம், ஜல்லிக்கட்டு என்பது மட்டும்தான் நமது நோக்கமா… எதிர்பார்ப்பா… அதைத்தாண்டி பல விஷயங்களை நமது இளைஞர்கள் முன்வைத்து பேசியுள்ளார்கள். அவை அனைத்தும் அவசியமானதும் கூட. அவை அனைத்தையும் கூட நடத்திக் காட்ட வல்லமையுள்ளது இந்த கூட்டம் என்பதை, வெயில், பனி, குளிர், மழை, பசி, தாகம், காலைக்கடன் சார்ந்த இயற்கை உபாதை போன்ற பலவற்றைத் தாங்கிக் கொண்டு போராடிய எனது சகோதர கூட்டத்திடம் பார்க்கிறேன். அவர்களால் முடியும். ஆனால் அந்தந்த விஷயத்தின் பண்பு, பின்னணி என பலவற்றையும் யோசித்துப் பார்த்து அதற்கான நேரத்தை அளித்து போராடினால்தான் அது வெற்றியாக முடியும்.

இல்லாவிட்டால், அவர்களின் அதீத… அவசரம் காட்டும் உறுதியே அவர்களை வெற்றி தேவைதையில் மடியில் இருந்து புரட்டி கீழே தள்ளிவிடும். அது நடந்துவிடக் கூடாது என்பதுதான் என விருப்பம். இந்த வெற்றியை உருவாக்கிய நாயகர்கள், அதை அனுபவிக்கட்டும். தவறவிட்டுவிட வேண்டாம்.இது மட்டுமல்ல… கூடவே இன்னொரு விஷயத்தையும் நான் சொல்ல விரும்புகிறேன். இந்த போராட்டத்துக்கு கூடிய இளைஞர் கூட்டத்தை ஒருங்கிணைக்க மாவட்டம்தோறும் ஏற்கனவே வாட்ஸ் அப் குழுக்கள் போல பல உருவாக்கப்பட்டுள்ளன. இப்படியாக இந்த பொது காரியங்களுக்கு பங்களிக்க விரும்பும் நபர்களை… அவர்களது தொடர்புகளை திரட்டி ஒருவரிடம் அல்லாமல்… பலரிடம்… நகல்களை வைத்து கொண்டு, மீண்டும் தேவை ஏற்படும்போது உடனடியாக அவர்களைத் திரட்ட முடியும் என்ற அளவுக்கு ஒருங்கிணைப்பை செய்துவிட்டு, இப்போதைக்கு கலைவதுதான் சரி என நினைக்கிறேன். பலர் மீண்டும் ஒருமுறை இவ்வகையில் திரள முடியாது என்ற காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. முதல்முறை சேருவதுதான் சிரமம். அதையே திட்டமிட்டு, அசம்பாவிதங்கள் இல்லாமல், ஸ்லீப்பர் செல்களின் உள்ளடி வேலையில் அடி வாங்காமல் செய்து முடித்திருக்கும் இந்த இளைஞர் கூட்டம் …… இனி அதை இன்னும் திறனுடன் செய்ய முடியும். தேவைப்படும் போது போராட வேண்டிய நீங்கள் இனியும் உங்களது சக்தியை செலவிடும் அளவுக்கு பலன் இல்லாமல் தொடர்வது வீழலுக்கு இறைத்த நீராகப் போய்விடக்கூடாது. போராட்ட களம் போதும் என்ற முடிவுக்கு வந்து, இனி செயலாக்கக் களத்திற்கு நகர வேண்டும் என நான் நினைக்கிறேன். எதிர்பார்க்கிறேன். அப்படி செய்யும்போதுதான், இந்த அரசியல்வாதிகளைக் கொண்ட நமது அரசை நமக்கு தேவையான காரியங்களை செய்யப் பயன்படுத்த முடியும். எல்லாவற்றுக்கும் இந்த ஒரே… போராட்ட வழி என்பது நடைமுறை சாத்தியமில்லை.

அதோடு, இந்த போராட்டக் காலத்தில் நீங்கள் கண்ட நம்பிக்கை தரும் நபர்களை தொடர்பு கொண்டு, வரும் நாட்களில் செயலாக்கத்தில் இறங்க, ஆலோசனைக் குழுக்களாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். பல குழுக்களின் செய்திகள் சகாயம் போன்ற சில அதிகாரிகளை விசாரணை அதிகாரிகளாக நியமிக்க குறிப்பிட்டுள்ளன. அவர் அரசுக்குள் இருந்து கொண்டு மக்களுக்கு போராடுகிறார் என நம்பினால், அவரைப் போன்ற இன்னும் உள்ள நல்லவர்களை அடையாளம் கண்டு ஒருங்கிணையுங்கள். ஆலோசனை பெறுங்கள். இப்போதைக்கு ஓய்வு எடுத்துக் கொண்டு, பின்னர் தேவைப்படும்போது மீண்டும் களத்துக்கு வாருங்கள். நாங்களும் இங்குதான் இருப்போம். துணை நிற்போம்.

ஆர். சந்திரன்